பெற்றோர் அல்லது காதலன் யாருடன் செல்ல விரும்புகிறாரோ அவர்களுடன் தாமினி செல்லலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், தனது தந்தையுடன் சென்றார் சேரன் மகள்.
சினிமா டான்சர் சந்துருவை, இயக்குனர் சேரனின் இளைய மகள் தாமினி, காதலித்தார். ஆரம்பத்தில் சம்மதம் தெரிவித்த சேரன், பின்னர் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் காதலன் சந்துருவின் வீட்டுக்கு வந்து விட்டார் தாமினி.
இந்த நிலையில், சந்துருவின் நடவடிக்கைகள் சரியில்லை என்பதால் மகளின் காதலை மறுப்பதாக சேரன் அறிவித்தார். ஆனால், சந்துருவுடன்தான் வாழ்வேன் என்று தாமினி பிடிவாதமாக இருந்தார்.
இதனிடையே, காதல் விவகாரம் போலீஸ் வரை சென்றதால், தாமினியை அரசு இல்லத்தில் போலீசார் தங்க வைத்தனர். இந்த நிலையில் சந்துருவின் தாயார் ஈஸ்வரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, நீதிபதிகள் வி.தனபாலன், சி.டி.செல்வம் ஆகியோர் முன்னிலையில் நடந்து வந்தது. அப்போது, சந்துருவுடன் செல்வதில் தாமினி உறுதியாக இருந்தார். இதற்கு சேரனும், அவரது மனைவி செல்வராணியும் ஆட்சேபனை தெரிவித்தனர். இதனால், ஒருநாள் மட்டும் வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத்தின் பாதுகாப்பில் தாமினியை அனுமதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, காதலன் சந்துருவிடம்தான் செல்வேன் என்று பிடிவாதமாக இருந்தார்.
இதையடுத்து, தியாகராயநகரில் உள்ள ஸ்ரீ ஷெரைன் வேளாங்கண்ணி மேல் நிலைப்பள்ளியின் (தாமினி படித்த பள்ளி) தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் பி.கே.கே.பிள்ளையின் வீட்டில் இரண்டு வாரங்கள் தங்குவதற்கு நீதிபதிகள் உத்தரவிடதோடு, வழக்கு விசாரணையை 21ஆம் தேதி (இன்று) தள்ளிவைத்தனர்.
அதன்படி, வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பெற்றோருடன் செல்ல இயக்குனர் சேரன் மகள் தாமினி சம்மதம் தெரிவித்தார். இதற்கு, சந்துரு தாயார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கரசுப்பு கடும் ஆட்சேபணை தெரிவித்தார். இதையடுத்து, வழக்கு விசாரணையை பிற்பகலுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இதைத்தொடர்ந்து, வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு வாதத்தை முன் வைத்தனர். அதனைத்தொடர்ந்து, பெற்றோர் அல்லது காதலன் யாருடன் செல்ல விரும்புகிறாரோ அவர்களுடன் தாமினி செல்லலாம் என்று தீர்ப்பளித்த நீதிபதிகள், சந்துரு வீட்டிற்கு இரண்டு வாரங்கள் போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டனர்.
நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து தாமினி, தனது பெற்றோருடன் சென்றார்.
தனது மகள் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, ஒவ்வொரு பெண்ணுக்கும் கிடைத்த வெற்றி என்று இயக்குனர் சேரன் கூறினார்.
இயக்குனர் சேரனின் மகள் தாமினி, பெற்றோர் அல்லது காதலன் யாருடன் செல்ல விரும்புகிறாரோ அவர்களுடன் செல்லலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததைத் தொடர்ந்து, தந்தையுடன் தாமினி சென்றார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் சேரன்,"எனது மகளை ஆஜர்படுத்தக் கோரிய ஆட்கொணர்வு மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. எனது மகள் வழக்கில் நீதிபதிகள் சிறப்பான தீர்ப்பை அளித்துள்ளனர். இந்த தீர்ப்பு ஒவ்வொரு பெண்ணுக்கும், பெற்றோருக்கும் கிடைத்த வெற்றி" என்றார்.
செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த சேரன், திடீரென கீழே விழுந்து கும்பிட்டு, அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.


0 comments:
Post a Comment