Latest News
Sunday, May 24, 2026

செறியூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவிடம் வழங்க ஈரான் சம்மதம்: இரு நாடுகளிடையே விரைவில் ஒப்பந்தம்!

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து நடத்தி வந்த தாக்குதலுக்கு கடந்த மாதம் தற்காலிக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதை தொடர்ந்து அமெரிக்காவும், ஈரானும் நிரந்தர போர்நிறுத்தத்திற்கு பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. இப்பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் மத்தியஸ்தராக செயல்பட்டு வந்தது. ஈரானும், அமெரிக்காவும் தங்களது கோரிக்கைகளை பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொண்டது. பாகிஸ்தான் ராணுவ தளபதி முனிர் இப்பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு வகித்து வந்தார். ஈரானிடம் இருக்கும் செறியூட்டப்பட்ட யுரேனியத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் பிரதான கோரிக்கையாக இருந்தது.

ஆனால் அதனை ஈரான் தொடர்ந்து நிராகரித்து வந்தது. அதோடு அமெரிக்கா தங்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்கா இழப்பீடு வழங்கவேண்டும் என்றும், ஈரான் மீதான தடையை நீக்கவேண்டும் என்றும் ஈரான் தொடர்ந்து நிர்ப்பந்தம் செய்து வந்தது. தொடர்ந்து இரு நாடுகளுடனும் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் புதிய திருப்பமாக இப்பேச்சுவார்த்தையில் கத்தார் நாடும் கலந்து கொண்டது.

ஈரான் அணு ஆராய்ச்சி மையம்

கத்தார் தனது நாட்டில் இருந்து உயர்மட்டக்குழுவை ஈரானுக்கு அனுப்பி வைத்து அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இப்பேச்சுவார்த்தையில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

ஈரான் தன்னிடம் இருக்கும் செறியூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்க சம்மதம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடன் உருவாகிவரும் ஓர் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஈரான் தனது அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை கைவிட ஒப்புக்கொண்டுள்ளது. இதன்மூலம் வாஷிங்டன், இஸ்ரேல் மற்றும் தெஹ்ரான் இடையே பல மாதங்களாக நீடித்துவரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தற்போதைய முயற்சிகளில் இந்த முன்னேற்றம் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.

பெயர் சொல்ல விரும்பாத அமெரிக்க அதிகாரிகள் இருவர் ஈரான் கொள்கை அளவில் செறியூட்டப்பட்ட யுரேனியத்தை தங்களிடம் ஒப்படைக்க சம்மதம் தெரிவித்துள்ளது என்று தெரிவித்தனர். ஆனாலும் யுரேனியம் அழிக்கப்படுமா அல்லது அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுமா என்பது குறித்து அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்படும்.

ஈரான் தன்னிடம் இருக்கும் செறியூட்டப்பட்ட யுரேனியத்தை தங்களிடம் ஒப்படைக்கவில்லையெனில் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்கா தொடர்ந்து மிரட்டிக்கொண்டே இருந்தது. தற்போது பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உறுதிப்படுத்தி இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், பெரும்பாலும் பேச்சுவார்த்தை மூலம் இறுதி செய்யப்பட்ட ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் வடிவம் பெற்று வருவதாகவும், அதன் இறுதி விவரங்கள் இன்னும் விவாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.


முன்மொழியப்பட்ட திட்டத்தின் படி மூன்று கட்டங்களாக அத்திட்டங்கள் செயல்படுத்தப்படும். அதன் படி போரை முழுவதுமாக முடிவுக்கு கொண்டு வருவது, ஹார்முஸ் ஜலசந்தி பிரச்னைக்கு தீர்வு காண்பது மற்றும் இரு தரப்பு நிரந்தர ஒப்பந்தத்திற்கு 30 நாட்கள் பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது உருவாகிவரும் ஒப்பந்தமானது 60 நாட்கள் போர்நிறுத்த நீட்டிப்பை உள்ளடக்கியிருக்கக்கூடும் என்றும், இதன் மூலம் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும்.

ஈரான் தனது எண்ணெயை தடையின்றி விற்கும் திறனை மீண்டும் பெறும். மேலும் அதன் அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது. இரு நாடுகளிடையே நடந்து வரும் பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதை இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ உறுதிப்படுத்தி இருக்கிறார்.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: செறியூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவிடம் வழங்க ஈரான் சம்மதம்: இரு நாடுகளிடையே விரைவில் ஒப்பந்தம்! Rating: 5 Reviewed By: gg