சில்லுன்னு ஐஸ் க்ரீம் சாப்பிட்டா உடனே பல்லுள்ள ஊசி குத்தினது மாதிரி வலி மண்டை வரைக்கும் ஏறுதா? சூடா எதுவும் குடிக்க முடியல, இனிப்பாவோ, புளிப்பாவோ எதையும் சாப்பிட முடியாமல் இந்த பல் கூச்சம் பாடாய் படுத்துதா? நம்ம உடம்புல ஏற்படுற சின்ன சின்ன பாதிப்பிற்கு வீட்டிலேயே தீர்வு காணலாம். எப்படின்னு தெரிஞ்சுக்கலாமா?
பல் கூச்சம் எதனால் ஏற்படுகிறது ?
பற்களில் சொத்தை ஏற்பட்டால், பல் உடைந்து ஈறு தெரியும்படி இருந்தால், ஈறு தொடர்பான நோய்களினால், பற்கள் சிதைந்து போனால் அல்லது எனாமல் போனால், பல் கூச்சம் ஏற்படுகிறது. தவறான பற்பசை உபயோகித்தாலும்,அதிக ரசாயனம் கலந்த பற்பசைகள் உபயோகித்தாலும் , வயதானாலும் இவைகள் ஏற்படும். ஆனால் இதில் ஆறுதல் பட வேண்டிய விஷயம் என்னவென்றால், பல் கூச்சத்தினை சீக்கிரம் சரி செய்துவிடலாம்.
வீட்டில் செய்யும் தீர்வுகள் என்னவென்று காணலாம் :
தேங்காய் எண்ணெயில் ஆயில் புல்லிங் :
ஆயில் புல்லிங் பற்களில் உருவாகும் ஸ்ட்ரெப்டோ காக்கஸ் பேக்டீரியாக்களை அழிக்கிறது. தேங்காய் எண்ணெய் பற்களில் உண்டாகும் ப்ளேக்கை குறைக்கிறது. பல்வலி, வாய் துர்நாற்றம், ஈறு பிரச்ச்னைகளிலிருந்து விடுதலை அளிக்க தினமும் தேங்காய் எண்ணெயில் ஆயில் புல்லிங் செய்யலாம்.
செய்யும் முறை :
காலையில் பல் விளக்குவதற்குமுன் 1 டேபிள் ஸ்பூன் அளவுள்ள தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றிக் கொள்ளவும். 20 நிமிடங்களுக்கு ஈறுகளின் மூலை முடுக்குகளிலெல்லாம் செல்லும் படி, கொப்பளிக்க வேண்டும். உடனே துப்பி விடக்கூடாது. 20 நிமிடங்கள் கழித்து துப்ப வேண்டும். எண்ணெய் நீர்த்து வெண்மையாக ஆகியிருக்கும். பின் பல் துலக்க வேண்டும்.
குறிப்பு : எண்ணெயை கொப்பளிக்கும் போது விழுங்கக் கூடாது. ஏனெனில் பற்களில் இருக்கும் பேக்டீரியா உடலுக்குள் சென்றுவிடும் அபாயம் உள்ளது.
உப்பு நீர் :
உப்பு நீரில் கொப்பளிப்பது மிக மிக நல்லதாகும். அவை பற்களில் அமில-காரத்தன்மையை சமன் படுத்தும். பேக்டீரியாக்களை உப்பு அழிக்கும். ஈறுகளை பலப்படுத்தும்.ர த்தக் கசிவிற்கு உப்பு நீரில் கொப்பளித்தால் நல்ல பலங்களைத் தரும்.
கிராம்பு மற்றும் கிராம்பு எண்ணெய்:
கிராம்பு சிறந்த வலி நிவாரணி. வலியை மரத்துப் போகச் செய்யும். பேக்டீரியாக்களை அழிக்கிறது. அதன் காரத்தன்மைக்கு பேக்டீரியாக்கள் பற்களை நெருங்காது. 2013 ஆம் ஆண்டு Avicenna Journal of Phytomedicine என்ற இதழ், கிராம்பிலிருந்து எடுக்கப்பட்ட சாறு வலி நிவாரணத் திறனைக் கொண்டுள்ளது என்ற ஆய்வினை வெளியிட்டுள்ளது.
கீழ்கண்ட முறையை தினம் இரு முறை பின்பற்றலாம்:
கிராம்பை பொடித்து அதனுடல் ஆலிவ் எண்ணெயைக் கலந்து பேஸ்ட் போல் செய்து, பாதிக்கப்பட்ட இடங்களில் போடலாம். அரை மணி நேரம் கழித்து வாயை வெதுவெதுப்பான நீரில் கொப்பளிக்கவும். கிராம்பு எண்ணெயில் பஞ்சுவை நனைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் 20- 30 நிமிடங்களுக்கு வைக்கவும். அரை கப் நீரில் 5-6 துளிகள் கிராம்பு எண்ணெயை கலந்து கொப்பளிக்கலாம். பல்வலி உள்ள இடத்தில் சில நொடிகளுக்கு நீரை தேக்கி வைக்கவும். மிக உபயோகமான முறை இது.
கொய்யா இலை :
பல்வலிக்கு கொய்யா இலையை ஆயுர்வேத மருத்துவத்தில் பரிசீலிக்கப்படுகிறது. அதேபோல் 2012 ஆம் ஆண்டு இன்டெர்நேஷனல் ஜர்னல் ஆஃப் ஃபார்மா மற்றும் பயோசயின்ஸ் வெளியிட்ட ஆய்வின்படி, கொய்யா இலை வலி நிவாரணியாக செயல்படுகிறது. பேக்டீரியக்களை அழித்து, பல் கூச்சத்திலிருந்தும் விடுதலை செய்கிறது என தெரிய வந்துள்ளது.
தளிரான ஃப்ரஷான 2 அல்லது 3 கொய்யா இலைகளை நன்கு மெல்ல வேண்டும். அதேபோல் 2 அல்லது 3 இலைகளை ஒரு கப் நீரில் போட்டு 5 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.பின் வெதுவெதுப்பாக ஆனவுடம் வாயில் கொப்பளிக்க வேண்டும்.
பூண்டு :
பூண்டு பல் கூச்சத்தினை போக்குகிறது. அதிலுள்ள அல்லைசின் எற பொருள் கிருமி நாசினியாக செயல் படுகிறது. பல்வலிக்கு நிவாரணம் தருகிறது. 2 பல் பூண்டுடன் சிறிது உப்பு மற்றும் நீர் கலந்து மைய அரைத்துக் கொள்ளுங்கள்.அதனை பாதிக்கப்பட்ட பற்களின் மேல் போட வேண்டும்.
சில நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். அல்லது ஒரு பல் பூண்டினை பாதியாக வெட்டி, ஒரு வெட்டிய பகுதியால் பல்லின் மீது தேய்க்க வேண்டும். தினமும் இரு முறை செய்யலாம்.
பச்சை வெங்காயம் :
பச்சை வெங்காயத்தில் ஃப்ளேவினாய்ட் அதிகம் உள்ளது. அவை பல் வீக்கத்தினை மட்டுப்படுத்தும். சிறிய அளவு வெங்காயத்தினை வெட்டி அதனை பாதிக்கப்பட்ட இடத்தில் சில நிமிடங்கள் வைக்கவும். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். தினம் இருமுறை செய்யலாம்.
ஓம எண்ணெய் :
ஓம எண்ணெய் பற்களில் உள்ள பேக்டீரியாக்களை எதிர்க்கும் திறன் கொண்டுள்ளது. வீக்கத்தினையும் கட்டுபடுத்தும். 2-3 துளி ஓம எண்ணெயை பாதிக்கப்பட்ட பற்களின் மீதும் ஈறின் மீதும் தேய்க்கவும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கொப்பளிக்கவும். அல்லது கால் கப் வெதுவெதுப்பான நீரில் 4-5 துளி ஓம எண்ணெயை கலந்து கொப்பளிக்கலாம்.
ஹைட்ரஜன் பெராக்ஸைட்:
ஹைட்ரஜன் பெராக்ஸைட் சிறந்த கிருமி நாசினி. பற்களில் உள்ள நச்சுக்களை அகற்றும். பல்வலியைப் போக்கும். 3% ஹைட்ரஜன் பெராக்ஸைடை சம அளவு நீரில் கலந்து , இந்த கரைசலை கொப்பளிக்க வேண்டும். வாரம் 2 அல்லது 3 முறை இதை செய்யலாம்.
அமிலத்தன்மை கொண்ட உணவுகளை குறைக்க வேண்டும்:
கோக், பெப்ஸி போன்ற கார்பனேட்டட் குளிர்பானங்கள், அதிக அளவு சிட்ரிக் அமிலம் கொண்ட உணவுவகைகளை தவிர்க்க வேண்டும். அமிலம் அதிகமுள்ள உணவுகளை உண்ட பின் அல்லது குடித்தபின், கொஞ்சம் நீரினை அருந்த வேண்டும். இதனால் அமிலத்தன்மை பற்களில் சமன்படுத்தப்படும்.
பற்களை சுத்தமாக வைத்திருப்பது அவசியம்:
ஈறுகள் ஆரோக்கியமாக இருந்தால், பற்கள் பலமாக இருக்கும். பற்களுக்கு ஏதாவது பாதிப்பானால், அது ஈறுகளையும் பாதிக்கும். ஆகவே தினமும் இருமுறை பல் துலக்க வேண்டும்.இது ஆரோக்கியமானது. கரடுமுரடான ப்ரஷினை பயன்படுத்தக் கூடாது. இது எனாமலை பாதிக்கும். அதுபோல் டூத் பேஸ்ட்டையும் அடிக்கடி மாற்றக் கூடாது. ஒரே வகையான பிராண்டினையே உபயோகபடுத்த வேண்டும்.
மேலும் சில டிப்ஸ் :
- புகையிலை பயன் படுத்துவதை அறவே நிறுத்த வேண்டும்.புகையிலை மற்றும் பான் ஆகியவை பற்களில் புற்று நோயை உருவாக்கும்.
- சாக்லேட்டினை பற்களில் நன்றாக மெல்லக் கூடாது. இதனால் பற்களில் எளிதில் சொத்தை ஏற்படும்.
- பற்களை வெண்மைப்படுத்த டூத் வொயிட்டனிங் அடிக்கடி பயன்படுத்தினாலும் அது பற்களில் எனாமல் தேய காரணமாகும்.
http://ift.tt/1WX0ZPn
0 comments:
Post a Comment