Latest News
Friday, July 1, 2016

மெரினா கடற்கரையில் தனிமையில் இருந்த காதல் ஜோடியை செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டல்: 2 பேர் கைது

சென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர், பெரம்பூரில் உள்ள ஒரு தனியார் டெலிகாம் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அதே நிறுவனத்தில் ஈரோட்டைச் சேர்ந்த 26 வயது வாலிபர் ஒருவர் அம்பத்தூரில் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்.

ஒரே நிறுவனத்தில் வேலை செய்யும் இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். கடந்த 28-ந் தேதி மதியம் இவர்கள் இருவரும் சென்னை மெரினா கடற்கரைக்கு சென்றனர். அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் காதல் ஜோடிகள் தனிமையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படு கிறது.

இந்த காட்சியை அங்குள்ள பிளாஸ்டிக் பொம்மை கடையில் வேலை செய்யும் ஒரு வாலிபர், மறைந்து இருந்து தனது செல்போனில் வீடியோ படம் எடுத்து பதிவு செய்து கொண்டார்.

சிறிது நேரம் கழித்து அந்த வாலிபர், நேராக காதல் ஜோடியிடம் சென்று, “ஏன் இவ்வாறு பொது இடத்தில் நடந்து கொள்கிறீர்கள்” என்று மிரட்டினார். பின்னர் காதல் ஜோடியின் செல்போன் எண்ணை கேட்டு வாங்கிக்கொண்டார். அதன்பிறகு காதல் ஜோடி அங்கிருந்து சென்று விட்டனர்.


இந்தநிலையில் கடற்கரையில் காதல் ஜோடியை வீடியோ படம் பிடித்து வைத்து இருந்த வாலிபர், அந்த காட்சியை தன்னுடன் வேலை செய்யும் மற்றொரு வாலிபரிடம் காண்பித்தார்.

மறுநாள் வாலிபர்கள் இருவரும் அந்த காதல் ஜோடிக்கு போன் செய்து, நீங்கள் இருவரும் கடற்கரையில் தனிமையில் இருப்பதை செல்போனில் வீடியோ படம் பிடித்து வைத்து உள்ளோம் என்று கூறி அவர்களை பயமுறுத்தினர். தொடர்ந்து அவ்வாறு போனில் தொல்லை கொடுத்தனர்.

அதன்பிறகு இளம்பெண்ணுக்கு மட்டும் அடிக்கடி போன் செய்து, “நீ உடனே மெரினா கடற்கரைக்கு வர வேண்டும். நாங்கள் சொல்லும்படி நடந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இந்த வீடியோ காட்சியை இணையதளத்தில் வெளியிடுவோம்” என்று மிரட்டினர்.

இதனால் மன வேதனைக்கு ஆளான அந்த பெண், இதுபற்றி வெளியில் யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்தார். நேற்று முன்தினம் அந்த இளம்பெண் பஸ்சில் வேலைக்கு சென்றார்.

அம்பத்தூர் அருகே சென்றபோது அவரது ‘வாட்ஸ் அப்’புக்கு அந்த வீடியோ காட்சியை மிரட்டல் வாலிபர்கள் அனுப்பி வைத்தனர். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண், உடனடியாக பஸ்சில் இருந்து இறங்கி அம்பத்தூர் போலீசில் புகார் செய்தார்.


இதற்கிடையில் மிரட்டல் வாலிபர்கள் தொடர்ந்து அவருக்கு போன் செய்து மெரினா கடற்கரைக்கு வரும்படி மிரட்டினார்கள். இதையடுத்து மர்மநபர்களை பொறி வைத்து பிடிக்க முடிவு செய்த போலீசார், அந்த பெண்ணை வாலிபர்கள் கூறிய இடத்துக்கு செல்லும்படி கூறினர்.

போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் அந்த பெண் அங்கு சென்றார். போலீசாரும் மாறு வேடத்தில் அவரை பின் தொடர்ந்து சென்றனர். மர்மநபர்கள் கூறியபடி மெரினா கடற்கரை அருகில் உள்ள ஒரு கடைக்குள் அந்த பெண் சென்றார். அங்கு வீடியோ படம் எடுத்து மிரட்டிய வாலிபர்கள் இருவரும் இருந்தனர்.

அப்போது மாறு வேடத்தில் இருந்த போலீசார், பாய்ந்து சென்று அந்த வாலிபர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள், விருத்தாசலம் பழமலைநகர் என்ற ஊரைச் சேர்ந்த சதீஷ் (24), ஆனந்த் (21) என்பது தெரிந்தது.

இவர்கள் இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். ஒரே கடையில் வேலை செய்து வந்தனர். இதில் சதீஷ்தான் காதல் ஜோடியை செல்போனில் வீடியோ படம் எடுத்தது தெரிந்தது. இதையடுத்து வாலிபர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இருவரையும் அம்பத்தூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அவர்களிடம் இருந்த வீடியோ காட்சி கொண்ட செல்போனை கைப்பற்றினர். இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், கைதான 2 பேரையும் அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இளம்பெண்ணுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். 
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: மெரினா கடற்கரையில் தனிமையில் இருந்த காதல் ஜோடியை செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டல்: 2 பேர் கைது Rating: 5 Reviewed By: news7