Latest News
Tuesday, April 1, 2025

சீனா: குலுங்கிய மருத்துவமனை; மாரோடு அணைத்து குழந்தைகளை காத்த செவிலியர்கள்.. நெகிழ்ச்சி சம்பவம்!

[Collection]

மியான்மரில் கடந்த மார்ச் 28-ம் தேதி வெள்ளிக்கிழமை நண்பகல் 12:50 மணி அளவில் 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிர்ந்து சரிந்த வானுயர கட்டடங்களால் ஏராளமானோர் உயிரிழந்தனர். உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் தாய்லாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் எதிரொலித்திருக்கிறது.

மியான்மர் நிலநடுக்கத்தினால் இதுவரையில் 1644 நபர்களுக்கு மேல் இறந்துள்ளதாகவும் 3,400 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ பரவலாக பகிரப்பட்டு வைரல் ஆகிறது. இந்த வீடியோ சீனா, யுன்னானில் அமைந்துள்ள ஒரு மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகள் ஆகும்.

நிலநடுக்கம் தொடங்கிய போது வார்டு முழுவதும் உள்ள பச்சிளம் குழந்தைகளின் சக்கர படுக்கைகள் கட்டுப்பாட்டின்றி இங்கும் அங்கும் உருண்டோட தொடங்கின. நிலநடுக்கத்தின் அதிர்வுகளால் தண்ணீர் குவளையில் உள்ள தண்ணீர் அறை முழுவதும் பரவியது. இந்த வழுக்கும் தரையில் நிற்பதே கடினம், ஆனால் அன்று பணியிலிருந்து இரண்டு சிறகிலா செவிலியர் தேவதைகள், அங்குள்ள பச்சிளம் குழந்தைகளை அரவணைத்து தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றி உள்ளனர்.

ஒரு செவிலியர், தண்ணீர் புரண்டோடும் தரையில் பச்சிளம் குழந்தையை ஒரு கைகளால் இறுக்கி அணைத்தபடி தரையில் அமர்ந்து, மற்றொரு கையால் மற்றொரு குழந்தையின் சக்கர படுக்கையினை பிடித்துக் கொண்டார். மேலும் நிலநடுக்கத்தின் கோர தாண்டவத்தால் அவர் தரை முழுவதும் வழுக்கி கொண்டு இழுத்துச் செல்லப்பட்டிருந்தாலும்... குழந்தைக்கு சிறு காயம் கூட ஏற்படாமல் பாதுகாத்தார். மற்றொரு செவிலியர், தண்ணீர் வழிந்தோடும் தரையில் நின்றபடி தனது இரு கைகளால் மீதமுள்ள குழந்தைகளின் படுக்கையினை இறுக்கிப் பிடித்துக் கொண்டார். மேலும் அவசர உதவிக்காக அருகில் உள்ளவரை அழைத்தபடி தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் அந்த பச்சிளம் குழந்தைகளின் உயிரை காப்பாற்றி உள்ளனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது.

இவை குறித்து நெட்டிசன்கள் தங்களது எக்ஸ் பதிவில், "ஆபத்தான நேரங்களில் இவ்வாறு அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்களை காப்பாற்றும் அவர்களின் உள்ளுணர்வு உண்மையிலேயே நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது". என்றும்...

"இந்த இரண்டு செவிலியர்களும் ஹீரோக்களே" என்றும்...

``இவர்களை சிறகில்லாத தேவதைகள் என்று கூறினாலும் அது மிகையாகாது." என்றும் பாராட்டியிருக்கின்றனர்.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: சீனா: குலுங்கிய மருத்துவமனை; மாரோடு அணைத்து குழந்தைகளை காத்த செவிலியர்கள்.. நெகிழ்ச்சி சம்பவம்! Rating: 5 Reviewed By: gg