Latest News
Thursday, November 6, 2025

ஜோஹ்ரான் மம்தானி: நேரு டு பாலிவுட் பாடல் - இந்திய வம்சாவளி நியூயார்க் மேயரின் வெற்றி கொண்டாட்டம்

அமெரிக்காவின் மிகப் பெரிய நகரமான நியூயார்க்கின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் இந்திய வம்சாவளியான ஜோஹ்ரான் மம்தானி. 34 வயதாகும் இவர் முதல் இஸ்லாமிய மேயரும் ஆவார்.

தனது வெற்றி உரையில் இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் கருத்தை மேற்கோள்காட்டியதுடன் பாலிவுட் பாடலையும் ஒலிக்கச் செய்துள்ளார். ப்ரூக்லினில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் முன்னிலையில் உரையாற்றிய மம்தானி, "வரலாற்றில் அரிதாகவே வரும் ஒரு தருணம் இது - பழையதிலிருந்து புதியதற்குள் நாம் அடியெடுத்து வைக்கும் தருணம்; ஒரு யுகம் முடிவடைகிறது; நீண்ட காலமாக அடக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தேசத்தின் ஆன்மா இப்போது தன் குரலை வெளிப்படுத்துகிறது." என்ற நேருவின் மேற்கோளைக் கூறினார்.

Newyork

அத்துடன், "இன்று நியூயார்க் அதைச் செய்கிறது. அரசியல் இருள் சூழ்ந்த இந்த சூழலில் நியூயார் ஒளியாக இருக்கும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

30 நிமிடம் வரை நீண்ட மம்தானியின் உரையில் நியூ யார்க்கில் வாழ்க்கை செலவைக் குறைக்கும் இலவச பேருந்துகள், உலகளாவிய குழந்தை பராமரிப்பு மற்றும் உயரும் வாடகைகளை முடக்குதல் ஆகிய திட்டங்கள் குறித்துப் பேசினார்.

நியூ யார்க் நகரின் கொடியையும் பிரசார பதாகைகளையும் ஏந்தியிருந்த ஆதரவாளர்கள் சுற்றியிருந்து ஆராவாரம் செய்தனர். மம்தானி தனது பேச்சை முடிக்கவும் தூம்மசாலே பாலிவுட் பாடல் ஒலிக்கத் தொடங்கியது. ஆதரவாளர்கள் அனைவரும் குதூகலத்தில் ஆடி மகிழ்ந்தனர்.

மம்தானி உகாண்டா தலைநகர் கம்பாலாவில் மீரா நாயர் என்ற இயக்குநருக்கும் கொலம்பியா பல்கலைக்கழக பேராசிரியர் மஹ்மூத் மம்தானிக்கும் மகனாகப் பிறந்தார். பின்னர் அமெரிக்காவிற்கு குடியேறியவர் 2018ம் ஆண்டு முழுமையாக அமெரிக்கராக குடியுரிமைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

வெற்றி உரையில் டொனால்ட் ட்ரம்ப்பை தாக்கிப் பேசியவர், "நியூயார்க் குடியேறிகளின் நகரமாகவே இருக்கும். குடியேறிகளால் கட்டமைக்கப்பட்ட, குடியேறிகளால் இயக்கப்படும், இன்றிரவு முதல் ஒரு குடியேறியவரால் வழிநடத்தப்படும் ஒரு நகரம். நீங்கள் குடியேறியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், நாங்கள் அனைவரையும் நேசிப்போம்" என்று கூறினார்.

அத்துடன் தனது வெற்றி நியூயார்க்கின் டாக்ஸி டிரைவர்கள் முதல் சமையல்காரர்கள், செவிலியர்கள் வரை உழைக்கும் மக்களுக்கானதாக இருக்கும் என்று பேசினார். "இந்த நகரம் உங்களுடையது, இந்த ஜனநாயகம் உங்களுடையது" என்றார்.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: ஜோஹ்ரான் மம்தானி: நேரு டு பாலிவுட் பாடல் - இந்திய வம்சாவளி நியூயார்க் மேயரின் வெற்றி கொண்டாட்டம் Rating: 5 Reviewed By: gg