அமெரிக்க நிறுவனங்கள் அமெரிக்கர்களை விடுத்து வெளிநாட்டினரை குறைந்த சம்பளத்திற்கு பணிக்கு அழைத்து வருகிறார்கள். அமெரிக்காவில் வெளிநாட்டினரின் குடியேற்றம் அதிகம் இருக்கிறது. வெளிநாட்டு மாணவர்கள் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். என்று வெளிநாட்டினர் மீதும், வெளிநாட்டு மாணவர்கள் மீதும் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்தது ட்ரம்ப் அரசு.
இதற்காக, விசா, கல்வி விசா, H-1B விசா என விசாக்களுக்கு தொடர்ந்து கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது அமெரிக்க அரசு. இதனால், அமெரிக்கா செல்லும் வெளிநாட்டினர் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இதுவரை பேசி வந்ததற்கு முற்றிலும் மாறாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கருத்துகளை முன்வைத்துள்ளார்.

வெளிநாட்டு மாணவர்கள்
வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் படிப்பது தொடர்பாக, "வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவிற்கு டிரில்லியன் டாலர் கணக்கில் வருமானத்தைக் கொண்டு வருகின்றனர். இது அமெரிக்க மாணவர்கள் மூலம் வரும் வருமானத்தை விட, இரண்டு மடங்கு அதிகமாகும்.
இதனால், அவர்கள் எனக்கு வேண்டும் என்பதில்லை. நான் அவர்களை வணிக ரீதியாக பார்க்கிறேன்.
இந்த மாணவர்களை பாதியாக குறைத்து நம்முடைய பல்கலைக்கழகம் மற்றும் காலேஜ் சிஸ்டத்தையும், அவர்கள் வருமானத்தையும் பாதிக்க நான் விரும்பவில்லை. எனக்கு அது நடக்க வேண்டாம்" என்று ட்ரம்ப் பேசியுள்ளார்.
ஹெச்-1பி விசா
அடுத்ததாக ஹெச்-1பி விசா குறித்து, "அமெரிக்கர்களிடம் சில திறமைகள் இல்லைதான். உற்பத்தி மற்றும் பாதுகாப்பு துறைகளில், அமெரிக்கர்களுக்கு, அதிக அனுபவம் இல்லை. அதனால், அவர்களை பயிற்சி இல்லாமல் இந்தத் துறைகளில், ஈடுபடுத்த முடியாது.

அதனால், அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டில் இருந்து திறமையானவர்களை இங்கே அழைத்து வர வேண்டும்" என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
முன்பு ட்ரம்ப் பேசியதற்கும், இப்போது பேசுவதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. ட்ரம்பின் இந்த மாற்றம் எவ்வளவு நாள் வரை செல்லுமோ, இவர் இந்தக் கருத்தில் இருந்து எப்போது அந்தர்பல்டி அடிப்பாரோ, அத்தனையையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

0 comments:
Post a Comment