Latest News
Friday, January 9, 2026

Greenland: ``எங்கள் எல்லையில் நுழைந்தால் சுடுவோம்" - அமெரிக்காவை எச்சரிக்கும் டென்மார்க்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், டென்மார்க்கின் கிரீன்லாந்தைக் கைப்பற்ற விரும்புவதாகத் தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வருகிறார்.

ஆர்க்டிக் பகுதியில் உள்ள இயற்கை வளங்கள் மற்றும் ராணுவ ரீதியான முக்கியத்துவத்திற்காக அமெரிக்கா இதைக் குறிவைக்கிறது எனக் கூறப்படுகிறது.

ஒருபுறம் டென்மார்க்கின் பாதுகாப்பு ஒப்பந்தப் பங்காளியாக இருக்கும் அமெரிக்கா, மறுபுறம் அதன் இறையாண்மையை மீறி நிலத்தைக் கைப்பற்ற நினைக்கிறது என ஐ.நா.சபை சுட்டிக்காட்டுகிறது.

மேலும், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஐ.நா சபையின் கொள்கைகளுக்கு எதிரானது எனவும் குறிப்பிடப்படுகிறது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

இதற்கிடையில், ட்ரம்பின் இந்த மிரட்டலுக்கு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் ஒன்றுசேர்ந்து அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர்.

அதில், ``கிரீன்லாந்து அதன் மக்களுக்கு மட்டுமே சொந்தமானது. கிரீன்லாந்து தொடர்பான எந்தவொரு முடிவையும் டென்மார்க்கும் கிரீன்லாந்து மக்களும் மட்டுமே எடுக்க முடியும். அமெரிக்கா அதில் தலையிட முடியாது. ஐரோப்பிய நட்பு நாடுகள் தங்கள் பங்களிப்பை அதிகரித்து வருகின்றன.

ஆர்க்டிக் பகுதியைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், எதிரிகளைத் தடுக்கவும், நாங்களும் மற்ற பல நட்பு நாடுகளும் எங்கள் இருப்பு, செயல்பாடுகள் மற்றும் முதலீடுகளை அதிகரித்துள்ளோம்.

மேலும், கிரீன்லாந்து நேட்டோ (NATO) அமைப்பின் ஒரு பகுதி என்பதால் அதைப் பாதுகாப்பது சர்வதேச கடமை" எனக் குறிப்பிட்டிருக்கிறது.

அதைத் தொடர்ந்து, 1952-ம் ஆண்டு டென்மார்க் அரசு இயற்றிய சட்டம் இன்னும் நடைமுறையில் இருப்பதாக டென்மார்க் அரசு அறிவித்திருக்கிறது.

அந்தச் சட்டத்தின்படி, யாராவது (குறிப்பாக அமெரிக்கா) வலுக்கட்டாயமாக கிரீன்லாந்தைக் கைப்பற்ற முயன்றால், மேலிடத்து உத்தரவுக்காகக் காத்திருக்காமல் டென்மார்க் ராணுவ வீரர்கள் உடனடியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தலாம்.

டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் - Mette Frederiksen
டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் - Mette Frederiksen

70 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்தச் சட்டம் இன்றும் செல்லுபடியாகும். அதாவது, நாட்டின் எல்லைக்குள் அத்துமீறும் படையெடுப்பாளர்களைத் தாக்கத் தங்கள் வீரர்களுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டிருக்கிறது

இதற்கிடையில், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நடவடிக்கையால் அமெரிக்க நாடாளுமன்றமே அச்சமடைந்திருக்கிறது. மேலும், வெனிசுலா மீதும், கிரீன்லாந்து போன்ற பிற நாடுகளின் விவகாரத்தில் ட்ரம்ப் தனது ராணுவ அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க அமெரிக்க செனட் சபை ஆலோசித்து வருகிறது.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: Greenland: ``எங்கள் எல்லையில் நுழைந்தால் சுடுவோம்" - அமெரிக்காவை எச்சரிக்கும் டென்மார்க் Rating: 5 Reviewed By: gg