Latest News
Saturday, June 1, 2013

குட்டிப்புலி திரைப்பட விமர்சனம்

ஊரையும், தெருப்பெண்களையும் மதிப்பவர் லால். வீதியில் வியாபாரத்திற்கு போகும் பெண்ணை கிண்டல் செய்து கையை பிடித்திழுக்கும் பக்கத்து தெருக்காரன் வீட்டுக்குள் புகுந்து அவனை கொலை செய்கிறார் லால். தப்பிக்கும்போது சிக்கிக் கொண்டு உயிரை விடுகிறார். தெருவுக்காக உயிரை விட்ட லால் அந்த ஊரின் குலசாமியாகிறார். அவருக்கு பிறந்தவர்தான் குட்டிப்புலியான சசி.

அப்பாவின் குணம் எங்கே மகனுக்கு வந்து விடுமோ என பயந்து வளர்க்கும் அம்மா சரண்யா பயந்தது போலவே குட்டிப்புலி அந்த பகுதியின் சண்டியராக திரிகிறார். அப்படி திரிந்தாலும் அம்மா என்றால் மறுபேச்சில்லை அந்தளவுக்கு அம்மா மீது கொள்ளை பாசம்.குட்டிப்புலிக்கு ஒரு கல்யாணம் பண்ணிப் பார்க்க அம்மா சரண்யாவுக்கு ஆசை. அதற்காக மெனக்கெடும்போதெல்லாம் ஏதாவது காரணம் சொல்லி குட்டிப்புலி தட்டிக் கழிக்கிறார்.

அவர் தெருவுக்கு ஹீரோயின் லட்சுமிமேனன் குடிவருகிறார். அந்த பகுதியின் படித்த இளைஞர்கள் சிலருக்கு லட்சுமி மீது காதல் அதை வெளிப்படுத்த காதல் கடிதம் எழுதி அதை குட்டிப்புலியிடம் கொடுத்தனுப்புகிறார்கள். கடைசியில் அந்த கடிதமே குட்டிப்புலி மீது லட்சுமிக்கு காதலை ஏற்படுத்துகிறது. இது தெரிந்ததும் குட்டிப்புலியை கொலை செய்ய ஆள் வைக்கிறார் ஹீரோயின் அப்பா.

இதற்கிடையில் கட்டப்பஞ்சாயத்து ரவுடித்தனம் செய்து வரும் வில்லனை குட்டிப்புலி அடித்து துவைத்து பஸ் ஸ்டாண்டில் கட்டி வைத்து அவமானப்படுத்துகிறார். ஒரு சூழலில் லட்சுமி தன்காதலை குட்டிப்புலியிடம் சொல்லும்போது திடீரென எங்கிருந்தோ வரும் முகமூடி நபர்கள் குட்டிப்புலியை வெட்டி வீழ்த்துகிறார்கள். உயிருக்குப்போராடும் குட்டிப்புலி மீண்டு வந்தாரா? அவர் காதல் ஜெயித்ததா? வில்லன் என்ன ஆனான்? தாய்ப்பாசம் ஜெயித்ததா? இதற்கெல்லாம் கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

‘தோ தோ பாக்குறா’, ‘சண்டியரே’ பாடல்களைத்தவிர வேறு பாடல்கள் மனசில் நிற்கவில்லை. திரைக்கதை அமைக்கும்போது அனைத்து காட்சிகளிலும் அல்லது அனைத்து பிரேம்களிலும் சசிக்குமார் மட்டும் இருக்க வேண்டும் என்ற வேண்டுதல் எதுவும் இயக்குனர் முத்தையாவுக்கு வந்ததோ என்னவோ ஒரு காட்சிக்கு காட்சி ஹீரோயிசம் மட்டுமே வலம் வருகிறது.

குட்டிப்புலியின் அப்பா கொலைக்கு அவசியமே இல்லாத திரைகதை. குட்டிப்புலியின் மீது ஏற்படும் வன்மம் தேவையற்ற திரைக்கதையின் பலவீனம். முந்தைய படத்தின் வெற்றி ஜோடி என்பதற்காக லட்சுமிமேனன் ஹீரோயினாக ஆக்கப்பட்டிருக்கிறார். மற்றபடி அவருக்கு கதையில் எந்த முக்கியத்துவமும் இல்லை. கதையின் பின்பாதியில் சசிக்குமாரும், அம்மா சரண்யாவும்தான் நிறைந்திருக்கிறார்கள். ஹீரோயின் லட்சுமிமேனன் ஏதோ கெஸ்ட் ரோல் போல வந்து போகிறார். கிளைமாக்ஸ் நேரத்தில் ஹீரோயினை மிஸ் செய்திருக்கிறது இயக்குனரின் திரைக்கதை.

வசனங்களும் பெருசாக மனசில் நிற்கவில்லை. ஒளிப்பதிவிலும் குறிப்பிடும்படியான விஷயங்கள் எதுவும் இல்லை. மொத்தத்தில் அதிக நம்பிக்கையோடு களம் இறக்கப்பட்ட அபத்தமான கதை…. தெளிவில்லாத திரைக்கதை… மனம்போன போக்கில் படமாக்கப்பட்ட காட்சிகள்… பூனையின் சீற்றம் கூட காட்டாத ‘குட்டிப்புலி’யின் கிளைமாக்ஸ்… என படம் முழுக்க அபத்தம் காரணமாக ‘குட்டிப்புலி’ கண்டிப்பாக பாயாது…குப்புறப் படுத்துக் கொள்ளும்…!
  • Blogger Comments
  • Facebook Comments

1 comments:

Item Reviewed: குட்டிப்புலி திரைப்பட விமர்சனம் Rating: 5 Reviewed By: gg