செயின் அடிக்கிற இளைஞர்களின் கதை. அதை சற்றே பெயின் ஆகவும், சற்றே ஃபன் ஆகவும் சொல்லியிருக்கிறார் டைரக்டர் இகோர். ஸ்லம் ஏரியாவின் காதலை, சோகத்தை, அலட்டலை, அரிப்பை… மிக யதார்த்தமாக சொன்ன படம் இதுவாகதான் இருக்கும்.
சேத்துப்பட்டு குப்பத்திலிருக்கும் அந்த நான்கு இளைஞர்களின் ஒரே பொழுதுபோக்கு குடி. ஒரே தொழில் செயின் அறுப்பது. நடுநடுவே ப்ரியங்காவை காதலிக்கிறார் தமிழ். இவர்களின் காதல் ஒரு டிராக்கில் போய் கொண்டிருக்க, இன்னொரு டிராக்கில் ஒரு க்ரைம் போய் கொண்டிருக்கிறது. இரண்டையும் சேர்த்து புள்ளி வைத்து கோலம் போட்டு குழப்பாமல் அது போக்குக்கு போக விட்டு கதை சொல்லி முடிக்கிறார் இகோர்.
இந்த குப்பத்து கதைக்கு சம்பந்தமேயில்லாமல் கடந்து போகும் ராணுவ ரகசியம், பேரம் எல்லாம் தேவையா சாமீ என்ற கேள்வியோடு கிளம்புகிறான் ரசிகன். இருந்தாலும் நினைத்து நினைத்து சிரிக்க வைக்கும் காமெடிகள் குஷியோ குஷி.
அந்த நால்வரும் நாலு வித அழகிலிருக்கிறார்கள். நல்லவேளை… ஹீரோ தமிழ் மட்டும் தமிழ் மொழி மாதிரியே பார்க்க டீசன்ட்டாக இருக்கிறார். இவருக்கும் பிரியங்காவுக்குமான காதல் காட்சிகள் எல்லாம் படு யதார்த்தம். அதுவும் முத்தத்திற்காக அலையும் பிரியங்கா மிளகாய் மில்லில் வேலை பார்ப்பவர். அந்த காரத்தோடு அவர் முத்தம் கொடுக்க… அஞ்சி ஓடும் தமிழின் வேதனை செம. தமிழ் அஞ்சுவதும், பம்முவதும், அடிதடியில் விழுந்து புரள்வதுமாக நிறைய ஸ்கோர் செய்திருக்கிறார்.
அப்புறம் பிரியங்கா. என்னவொரு அசத்தலான நடிப்பு? நல்ல படங்கள் அமைந்தால், தேசிய விருது பெற்ற முன்னாள் நடிகை ஷோபா இடத்தையே பிடித்துவிடுவார். ஆச்சர்யம் என்னவென்றால் இந்த சென்னையின் குப்பத்து பாஷை அப்படியே அவர் நாக்கில் நர்த்தனமாடுகிறது. சொந்தக்குரலில் பேசியிருக்கிறாராம். துணிச்சல்தான்!
சில காட்சிகளில் இமேஜ் பற்றியெல்லாம் அவர் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. நள்ளிரவு… மொட்டை மாடி… இந்த டிவி காரனுங்க வேற, ஏடா கூடமா பாட்ட போட்டு சூடு ஏத்துறானுவோ என்று கூறிக் கொண்டே கிட்டதட்ட தமிழை கற்பழிக்கிற லெவலுக்கு போவதெல்லாம் கண்கொள்ளாக் காட்சி.
மற்ற மூவரும் இரைச்சலுக்கும் கூச்சலுக்கும்தான் பயன்பட்டிருக்கிறார்கள். சைலன்ட் சீன் என்று படத்தில் ஒரு காட்சி கூட இல்லை. அட… நள்ளிரவில் ஒரு பங்களாவுக்குள் புகுகிற காட்சியில் கூட வளவளவென்று பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். எரிச்சல்ப்பா…
படம் முழுக்க வரும் சின்ன சின்ன கேரக்டர்கள், அசத்தல். அதிலும் அந்த சைக்கிள் கடைக்காரர் பின்னி எடுத்திருக்கிறார். …ந்தா. அதோ நிக்குதே சரோசா. அதை நானும் இவங்க அப்பனும் ஒரு காலத்துல என்று இவர் மகனை வைத்துக் கொண்டே பேசுவதும், அவனோடு சேர்ந்தே தண்ணியடித்து புரள்வதுமாக அசத்தியிருக்கிறார். இப்படி கேரக்டர்களை பிடித்த வகையில் மனம் கவர்கிறார் டைரக்டர் இகோர்.
படத்தில் பாடல் காட்சி எப்பதான் வருமோ என்ற ஏக்கத்தையே வரவழைத்துவிடுகிறது சாம் டி.ராஜின் இசை. அதிலும் பராசக்தி படத்தில் வரும் அந்த பாடலுக்கான ரீமிக்ஸ் இனிமை. பின்னணி இசையிலும் பிரமாதப்படுத்தியிருக்கிறார். அனா ஆவன்ன அண்ணாதுரை பாரண்ணா என்று வார்த்தை விளையாட்டு விளையாடியிருக்கிறார்கள் ஒரு பாடலுக்கு. திரும்ப திரும்ப கேட்டு ரசிக்கலாம்.
குப்பத்தில் மேய்ந்து குப்பத்தில் தூங்கி குப்பத்திலேயே குளித்திருக்கிறது மாரி வெங்கடாச்சலத்தின் கேமிரா.
0 comments:
Post a Comment