அமெரிக்காவில் சிறுமிகளைக் கடத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் கைதான ஜெஃப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019 ஆம் ஆண்டு சிறையிலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார்.
எப்ஸ்டீன் பல்வேறு தரப்பினருடன் உரையாடிய மின்னஞ்சல்கள், பகிர்ந்த வீடியோக்கள், புகைப்படங்கள், விசாரணை அறிக்கை உள்ளிட்டவற்றைப் பொதுவெளியில் வெளியிட அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்தாண்டு நவம்பரில் சட்டம் இயற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 30 ஆம் தேதி 35 லட்சப் பக்கங்கள் கொண்ட எப்ஸ்டீன் ஃபைல்ஸ்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டது.
அதில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தொழிலதிபர் பில் கேட்ஸ், பிரதமர் நரேந்திர மோடி, எலான் மஸ்க், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ உட்பட பலரின் பெயர்கள் இடம் பெற்றிருக்கின்றன.
சமூக வலைதளங்களில் இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி பேசுபொருளாகி இருக்கின்றன.
இந்நிலையில் எப்ஸ்டீன் ஃபைல்ஸ் குறித்து 9 ஆஸ்திரேலியா செய்தி நிறுவனத்துக்கு பில் கேட்ஸ் நேர்காணல் அளித்திருக்கிறார்.
நேர்காணலில் பேசிய அவர், ``எப்ஸ்டீனுடன் நான் செலவிட்ட ஒவ்வொரு நிமிடத்திற்காகவும் வருந்துகிறேன்.
அதற்காக நான் மன்னிப்பும் கேட்கிறேன். நான் 2011-ல் எப்ஸ்டீனைச் சந்தித்தேன்.

மூன்று ஆண்டுகளில் அவருடன் பலமுறை இரவு விருந்துகளில் கலந்துகொண்டேன். ஆனால் அவரது கரீபியன் தீவுக்குச் சென்றதில்லை.
பெண்களுடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை. அவர் பல பணக்காரர்களைத் தெரிந்தவர் என்பதால், அவர்களிடம் உலக சுகாதாரத்திற்கு நிதியைப் பெற தூண்ட முடியும் என்று நினைத்தேன்.
ஆனால் அது ஒரு பயனற்ற முயற்சி என்பது பின்புதான் தெரிந்தது" என்று தெரிவித்திருக்கிறார்.

0 comments:
Post a Comment