Latest News
Tuesday, March 3, 2026

கர்நாடகா: கமேனி படுகொலைக்கு மினி ஈரான் கிராமத்தில் 3 நாள் பந்த் அனுசரிப்பு; கடைகள் அடைப்பு

ஈரானில் நேற்று முன் தினம் நடந்த அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலில் அந்நாட்டு உச்ச மதத்தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டார்.

இதையடுத்து ஈரானும் இஸ்ரேல் மற்றும் அண்டையில் உள்ள அமெரிக்க ஆதரவு நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று மாலையிலிருந்து அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதலைத் தீவிரப்படுத்தி இருக்கின்றன.

படுகொலை செய்யப்பட்ட அயதுல்லா அலி கமேனிக்கும் இந்தியாவில் உள்ள கர்நாடகா கிராமத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள சிக்காபல்லாபூர் மாவட்டத்தில் இருக்கும் அலிபூர் என்ற கிராமத்தை அனைவரும் மினி ஈரான் என்றே அழைக்கின்றனர். தற்போது படுகொலை செய்யப்பட்டுள்ள கமெனி 1981ம் ஆண்டு இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் வந்தபோது இந்த மினி ஈரான் கிராமத்திற்கு வந்து அங்குள்ள மதத் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். அதோடு உள்ளூர் மக்களுடனும் கலந்துரையாடினார்.

அலிபூர் வந்திருந்த காட்சி
அலிபூர் வந்திருந்த காட்சி

இந்தக் கிராமத்தில் அதிக அளவில் ஷியா முஸ்லிம்கள் வசிக்கின்றனர். கமேனியும் ஷியா முஸ்லிம் ஆவார். அதனால்தான் இக்கிராமத்திற்கு வந்து சென்றார். அவர் வந்து சென்ற பிறகு அலிபூர் கிராமம் தென்னிந்தியாவில் ஷியா முஸ்லிம்களின் ஆன்மிக தலமாக அந்தஸ்து பெற்றது.

கமேனியை வெறும் ஒரு வெளிநாட்டு அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் தனிப்பட்ட வழிகாட்டியாகவும் இக்கிராம மக்கள் பார்க்கின்றனர். எனவேதான் அவரது மரணத்தை ஒட்டுமொத்த கிராமமும் சேர்ந்து துக்கமாக அனுசரித்து வருகிறது. கிராமம் முழுக்க தற்போது வீடுகள் மற்றும் மசூதிகளில் கருப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.

வரலாற்று ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் ஈரானுடன் கொண்டுள்ள நெருங்கிய உறவு காரணமாக இக்கிராம மக்கள் கமேனி மரணத்திற்கு அறிவிக்கப்படாத 3 நாள் துக்கம் அனுசரித்து வருகின்றனர்.

அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு பந்த் நடத்தப்பட்டு வருகிறது. ஆன்மீக வழிகாட்டியாக மதிக்கப்படும் கமெனியின் கொலைக்குத் தங்கள் வருத்தத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்த பொதுமக்கள் தெருக்களில் கூடி ஒருவரை ஒருவர் துக்கம் விசாரித்துக்கொள்வது மற்றும் கடைகள், வணிக நிறுவனங்களை அடைப்பது போன்ற காரியங்களில் ஈடுபட்டுள்ளனர்.

அலிபூர் கிராம மக்கள் தெருக்களில் கமேனி புகைப்படத்துடன் அமைதிப் பேரணி நடத்தினர்.

இப்பேரணியில் கலந்துகொண்ட ஒருவர் இது குறித்து கூறுகையில், ''அவர் வெறும் ஷியா தலைவர் மட்டுமல்ல, அவரது செய்தி அனைத்து சமூகங்களுக்கும் பொருந்தும். அமெரிக்காவும் இஸ்ரேலும் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளன. சில அரபு நாடுகளும் இதை ஆதரித்தன.

இது உலகிற்கு ஒரு இழப்பு. எனவே நாங்கள் அலிபூரில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் மூன்று நாட்களுக்கு மூடிவிட்டோம்" என்று கூறினார்.

அயதுல்லா கமேனி
அயதுல்லா கமேனி

இச்சம்பவத்தைத் தொடர்ந்து அலிபூரில் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

உச்சத் தலைவரின் வருகையை நினைவுபடுத்தும் விதமாகவும், கிராமத்தில் அவருக்கு இருக்கும் செல்வாக்குக் காரணமாகவும் அவரின் துக்கச் சடங்குகள் முடியும் வரை பந்த் தொடரும் என்று உள்ளூர் சமூகத் தலைவர்கள் தெரிவித்தனர்.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: கர்நாடகா: கமேனி படுகொலைக்கு மினி ஈரான் கிராமத்தில் 3 நாள் பந்த் அனுசரிப்பு; கடைகள் அடைப்பு Rating: 5 Reviewed By: gg