Latest News
Saturday, March 14, 2026

மதுரையில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: 3 நாள்களில் உணவகங்கள் மூடப்படும் அபாயம்! | கள நிலவரம் என்ன?

தமிழகத்தில் நிலவி வரும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, மதுரையில் உள்ள நூற்றுக்கணக்கான உணவகங்கள் அடுத்த மூன்று நாட்களுக்குள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஹோட்டல் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கத்தின் துணைத் தலைவர் டெம்பிள் சிட்டி குமார் கூறியதாவது, “வணிக பயன்பாட்டிற்கான கமர்சியல் சிலிண்டர்கள் போதிய அளவில் விநியோகிக்கப்படாததால் உணவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

சில இடங்களில் டீலர்களுக்கு கமர்சியல் சிலிண்டர் வழங்க வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுவதால், உணவகங்களுக்கு தேவையான அளவு சிலிண்டர்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், 2,000க்கு விற்பனை செய்யப்பட்ட சிலிண்டர்கள் தற்போது கள்ளச் சந்தையில் 3,000 வரை விற்கப்படுகிறது. சிலிண்டர் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக தோசை, இட்லி போன்ற அத்தியாவசிய உணவுகளின் விலையை இருமடங்கு உயர்த்த வேண்டிய கட்டாயம் உருவாகும். இது பொதுமக்களை நேரடியாக பாதிக்கும்.

டெம்பிள் சிட்டி குமார்

மதுரையில் சுமார் 600க்கும் மேற்பட்ட உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றை நம்பி 25,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அதேபோல், மதுரையின் அடையாளமாக விளங்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலையோர உணவகங்களும் சிலிண்டர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலை தொடர்ந்தால் விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வேலைக்காக மதுரையில் தங்கி இருக்கும் ஆயிரக்கணக்கானோருக்கும் உணவு, காபி, டீ போன்ற அடிப்படை தேவைகள் கூட கிடைக்காத அவல நிலை உருவாகும்.

உணவு கடைகள்

பெங்களூரு மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஏற்கனவே சில உணவகங்கள் மூடப்படத் தொடங்கியுள்ளது. எனவே உடனடியாக தமிழக அரசு தலையிட்டு வணிக சிலிண்டர் விநியோகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்

அதே போல டீ, காபி விலைகளும் உயர்வதற்கு வாய்ப்புள்ளது. இது குறித்து மதுரை காபி, டீ வர்த்த சங்கத்தினர் கூறுகையில்," உணவுப் பொருட்களில் அடிப்படையானது டீ காபி தான். ஏனெனில் பொதுமக்கள் காலை எழுந்தவுடன் டீ காபி கடைகள் எல்லாம் தேடுவார்கள். குறிப்பாக மதுரையில் எல்லா தெருக்களிலும் டீ காபி கடைகள் தான் அதிகமாக இருக்கும். அவர்களின் வேலையே டீ காபி கடைகளில் இருந்து தான் துவங்கும். இந்த சூழ்நிலையில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு டீக்கடை உரிமையாளர்களான எங்களுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

கோப்பு படம்

நேற்று வணிக சிலிண்டர் 1980 ரூபாய்க்கு தருவோம் என இருந்த நிலையில், இன்று சிலிண்டர் 2200 க்கு தான் தருவோம் என தெரிவித்ததாக சொல்கிறார்கள் சிலர். சரி கொடுங்கள் என கேட்டபோதும் கூட சிலிண்டர் கிடைக்கவில்லை. கூடுதல் விலைக்கு கூட சிலிண்டர் கிடைக்காததால் மிகவும் சிரமாக உள்ளது. இதனை மத்திய மாநில அரசுகள் உடனடியாக சரி செய்து வணிகர்களுக்கு சிலிண்டர்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இரண்டு மூன்று நாட்களில் இதையினை சரி செய்யவில்லை என்றால் மிகப்பெரும் வர்த்தக பாதிப்பை ஏற்படுத்தும். நேரடியாக மறைமுகமாக பலரும் இதனால் பாதிப்படைவார்கள்" எனவும் தெரிவித்தனர்.

 வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாட்டால் தேனி மாவட்டத்தில் உள்ள டீ கடைகள், ஓட்டல்கள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டுள்ளன குறிப்பிடதக்கது.!

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: மதுரையில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: 3 நாள்களில் உணவகங்கள் மூடப்படும் அபாயம்! | கள நிலவரம் என்ன? Rating: 5 Reviewed By: gg