Latest News
Friday, March 20, 2026

அலி கமேனி கொல்லப்பட்ட தாக்குதலில் நூலிழையில் தப்பிய மொஜ்தபா; `அன்று' நடந்தது என்ன? - வெளியான தகவல்!

இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப்படை கடந்த மாதம் 28ம் தேதி காலை நேரத்தில் ஈரானில் நடத்திய தாக்குதலில் அந்நாட்டு உச்ச தலைவர் அலிகமேனி மற்றும் அவரது குடும்பத்தில் முக்கிய தலைவர்கள் உயிரிழந்துவிட்டனர். அலி கமேனி உட்பட முக்கிய தலைவர்களை ஒரே தாக்குதலில் கொலைசெய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. வெனிசுலாவில் அந்நாட்டு அதிபரை உயிரோடு பிடித்துச் சென்றது போன்று அலி கமேனியைப் பிடிக்க முடியாது என்பதாலும், ஈரானுக்குள் சென்று தாக்குதல் நடத்துவது முடியாத காரியம் என்பதாலும் அவர்கள் மீது குண்டு வீசி கொலை செய்து அழித்துவிட வேண்டும் என்று நினைத்து இஸ்ரேலும், அமெரிக்காவும் இத்தாக்குதலை நடத்தின.

ஆனால் இத்தாக்குதலில் அலி கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி அதிர்ஷ்டவசமாக சிறிய காயத்துடன் உயிர் தப்பிவிட்டார். அவரது காலில் மட்டும் காயம் ஏற்பட்டுள்ளது. இத்தாக்குதல் குறித்து பேசப்பட்ட ஆடியோ ஒன்று இப்போது வெளியாகி இருக்கிறது.

டெலிகிராப் இதழுக்குக் கிடைத்த ஆடியோவின் படி, அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலில் இருந்து ஈரானின் புதிதாக நியமிக்கப்பட்ட உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி, குண்டுவெடிப்பு நிகழ்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, சில வேலைகளுக்காக அவர் தங்கி இருந்த வளாகத்தை விட்டு வெளியே வந்ததால் உயிர் பிழைத்ததாக தெரியவந்துள்ளது.

இருப்பினும், இந்தத் தாக்குதலில் அவரது தந்தை அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த பிற உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். ஈரானின் ராணுவத் தலைவர் உடல் சிதறி, வெறும் சில கிலோ சதைத்துண்டுகளே கிடைத்தது. அவர் உடல் உறுப்புகள் பல மீட்டர் தூரத்திற்கு சென்றுவிழுந்தது.

அயதுல்லா அலி கமேனியின் மருமகனின் தலை இரண்டாக பிளந்து கிடந்ததாகவும், அந்த ஆடியோவில் கூறப்பட்டிருக்கிறது. மறைந்த அயதுல்லா அலி கமேனியின் அலுவலகத்தில் பணியாற்றும் ஓர் உயர் அதிகாரி அந்த ஆடியோவில் பேசி இருந்தார். பிப்ரவரி 28ம் தேதி அன்று நடந்த அந்தத் தாக்குதல் குறித்த விரிவான தகவல்கள் அந்த ஆடியோவில் இடம் பெற்றுள்ளது.

அலி கமேனியின் அலுவலகத்தில் நெறிமுறைத் தலைவராக பணியாற்றும் மஸாஹர் ஹொசைனி சமீபத்தில் டெஹ்ரானில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய அந்த ஆடியோ படி, பிப்ரவரி 28ம் தேதி உள்ளூர் நேரப்படி காலை 9.32 மணிக்கு கமேனியின் குடியிருப்பு வளாகம் தாக்கப்பட்டது. கமேனி குடும்பத்தினரையும், ஈரானின் உயர்மட்டத் தலைவர்களையும் ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக அழிப்பதற்காக திட்டமிடப்பட்டு இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

இத்தாக்குதலை தொடர்ந்து ஈரான் தொடர்ந்து அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீதும், அமெரிக்க ராணுவ நிலைகள் மீதும் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. தோஹா, துபாய், அபுதாபியில் இத்தாக்குதல் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

ஆனால் 56 வயதான மொஜ்தபா கமேனி, தாக்குதலுக்குச் சில நிமிடங்களுக்கு முன்புதான் வீட்டிற்கு வெளியில் வந்து அங்குள்ள தோட்டத்திற்குச் சென்றிருந்தார். தோட்டத்தில் இருந்து மீண்டும் வீட்டிற்குச் செல்ல கட்டடத்தின் படிக்கட்டில் ஏறியபோதுதான் அக்கட்டடத்தில் குண்டு விழுந்தது. இந்தத் தாக்குதலில் அவரது காலில் மட்டும் சிறு காயம் ஏற்பட்டது. ஆனால், அவரது மனைவி ஜஹ்ரா மற்றும் மகன் ஆகிய இருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். அலி கமேனியின் மற்றொரு மகனான முஸ்தபா கமேனி தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகிலேயே இருந்தார். இருப்பினும், அவரும் அவர் மனைவியும் காயமின்றி உயிர் தப்பினர்.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: அலி கமேனி கொல்லப்பட்ட தாக்குதலில் நூலிழையில் தப்பிய மொஜ்தபா; `அன்று' நடந்தது என்ன? - வெளியான தகவல்! Rating: 5 Reviewed By: gg