Latest News
Thursday, March 12, 2026

Jose Hernandez: விதியை வென்ற கனவு; ஒரு விவசாயி 'விண்வெளி நாயகன்' ஆன கதை தெரியுமா?

இன்றைய நாளில் உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக் கொள்ள, ஒரு சாமானிய மனிதன் விண்வெளியை வலம் வந்த இந்த நிஜக் கதை நிச்சயம் உதவும்.

"கனவு காண்பதற்கு வறுமையோ, மொழியோ, சூழ்நிலையோ ஒரு தடையல்ல" என்பதை உலகிற்கு உரக்கச் சொன்னவர் நாசா விண்வெளி வீரர் ஜோஸ் எம். ஹெர்னாண்டஸ் (Jose M. Hernandez).

இவர், ஆகஸ்ட் 7, 1962-ம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பிரெஞ்ச் கேம்ப் (French Camp) பகுதியில் பிறந்தார். விவசாயக் கூலித் தொழிலாளர்களாக இவரது குடும்பம் மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவிற்குப் பிழைப்பிற்காக வந்தது.

Jose Hernandez
Jose Hernandez

இவருடைய குழந்தைப் பருவம் `கலிபோர்னியா சர்க்யூட்’ என்று அழைக்கப்படும் தொடர் பயணங்களிலேயே கழிந்தது. ஒவ்வொரு மாதமும் ஸ்ட்ராபெரி, தக்காளி, செர்ரி பழங்களைப் பறிக்க குடும்பத்தோடு ஒவ்வொரு ஊராகச் செல்வார்.

வார இறுதி நாள்களிலும் சுட்டெரிக்கும் வெயிலில் வயல்வெளிகளில் வேலை செய்தார். இதனால் ஒரு பள்ளியில் நிலையாகப் படிக்க முடியாததால், தனது 12 வயது வரை ஆங்கிலம் பேசவோ எழுதவோ அவருக்குத் தெரியாது.

இந்நிலையில் விண்வெளிக்குச் சென்ற முதல் ஹிஸ்பானிக் அமெரிக்கரான பிராங்க்ளின் சாங்-டியாஸ் (Franklin Chang Diaz) அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்ட ஜோஸ், தானும் விண்வெளி வீரராக வேண்டும் என்ற தனது ஆசையைத் தந்தையிடம் கூறினார். அப்போது அவர் தந்தை வெற்றிக்கான வழிமுறை ஒன்றைக் கற்றுக் கொடுத்தார். அதுதான் ஜோஸின் வாழ்க்கையை மாற்றியது:

Jose Hernandez
Jose Hernandez

`உனது இலக்கைத் தீர்மானி.

அந்த இலக்கிலிருந்து நீ எவ்வளவு தூரத்தில் இருக்கிறாய் என்பதை உணர்.

இலக்கை அடைய ஒரு வரைபடத்தை உருவாக்கு.

அதற்கான கல்வியைக் கற்றுக்கொள்.

கடினமாக உழைக்கத் தயாராகு.’

(கூடுதலாக ஜோஸ் தனது வாழ்வில் சேர்த்தது) விடாமுயற்சி.

தந்தை சொன்ன பிறகு, வறுமையிலும் கல்வியை விடாத ஜோஸ், 1984-ம் ஆண்டு பசிபிக் பல்கலைக்கழகத்தில் (University of the Pacific) மின் பொறியியலில் இளங்கலைப் பட்டமும், 1986-ல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் (UC Santa Barbara) முதுகலைப் பட்டமும் பெற்றார்.

படிப்பை முடித்து, லாரன்ஸ் லிவர்மோர் தேசிய ஆய்வகத்தில் பொறியாளராகப் பணிபுரிந்தார். அப்போது, மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறியும் முதல் டிஜிட்டல் மேமோகிராஃபி சிஸ்டத்தை (Full-field digital mammography system) இணை உருவாக்குநராக இருந்து கண்டுபிடித்தார். இவரது இந்தச் சாதனை பல பெண்களின் உயிரைக் காக்க உதவியது.

Jose Hernandez
Jose Hernandez

இப்படிச் சாதனைகள் பல செய்தாலும், அவரது நினைவெல்லாம் நாசாவை நோக்கியே இருந்தது. நாசாவின் விண்வெளி வீரர் திட்டத்தில் சேர வேண்டும் என்பதே அவரது வாழ்நாள் கனவு. நாசாவிற்கு விண்ணப்பித்தார், நிராகரிக்கப்பட்டார். மீண்டும் விண்ணப்பித்தார், மீண்டும் நிராகரிக்கப்பட்டார். இப்படி ஒன்று, இரண்டு அல்ல... தொடர்ந்து 11 முறை நாசாவால் நிராகரிக்கப்பட்டார்.

ஒவ்வொரு முறை நிராகரிக்கப்படும்போதும், அவர் துவண்டுவிடவில்லை. நாசா ஒரு விண்வெளி வீரரிடம் எதை எதிர்பார்க்கிறது என்று பார்த்து தன்னை மென்மேலும் வளர்த்துக் கொண்டார். பைலட் பயிற்சி பெற்றார், ஸ்கூபா டைவிங் கற்றுக் கொண்டார், ரஷ்ய மொழியைக் கற்றுக்கொண்டார்.

இறுதியாக, அவரது தொடர் முயற்சிக்குப் பலன் கிடைத்தது. 2004 ஆம் ஆண்டு (12வது முறையில்) நாசாவின் 19வது விண்வெளி வீரர் குழுவில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்! ஆகஸ்ட் 28, 2009 அன்று டிஸ்கவரி விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) பறந்தார்.

விவசாயக் கூலியாக வயலில் மண்ணோடு மண்ணாக வேலை செய்த ஒருவர், விண்வெளியில் 13 நாட்கள், 20 மணி நேரம் மற்றும் 54 நிமிடங்கள் கழித்து மாபெரும் சரித்திரம் படைத்தார். விண்வெளியில் இருந்து ஸ்பானிஷ் மொழியில் ட்வீட் (Tweet) செய்த முதல் நபர் ஜோஸ் தான்.

Jose Hernandez
Jose Hernandez

விண்வெளி வீரர் ஆகும் பயிற்சிக்குத் தேர்வான பிறகும், தனது குடும்பத்தின் விவசாயப் பணிகளை மறக்காமல் விடுமுறை நாட்களில் சென்று வயலில் வேலை செய்தார். இவரது வாழ்க்கையை மையமாக வைத்து 2023-ம் ஆண்டு அமேசான் பிரைமில் `A Million Miles Away’ என்ற biographical drama திரைப்படம் வெளியாகி உலகெங்கும் உள்ள பலருக்கு உத்வேகம் அளித்தது.

ஜோஸ் ஹெர்னாண்டஸ் அவர்களின் வாழ்க்கை நமக்குச் சொல்லும் ஒற்றைப் பாடம் என்ன தெரியுமா?

``நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்பது உங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில்லை; நீங்கள் எங்கு செல்ல விரும்புகிறீர்கள், அதற்காக எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்கள் என்பதே உங்கள் தலையெழுத்தை மாற்றும்."

A-Million-Miles-Away
A-Million-Miles-Away

11 முறை நிராகரிக்கப்பட்டாலும் தனது கனவைக் கைவிடாத ஜோஸ் வென்றார் என்றால், உங்களின் நேர்மையான மனம் தளராத முயற்சிகளும் ஒருநாள் உங்களைச் சிகரத்தில் அமரவைக்கும். இந்த நன்னம்பிக்கையோடு இன்றைய நாளைத் தொடங்குங்கள்!

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: Jose Hernandez: விதியை வென்ற கனவு; ஒரு விவசாயி 'விண்வெளி நாயகன்' ஆன கதை தெரியுமா? Rating: 5 Reviewed By: gg