Latest News
Saturday, March 28, 2026

எங்கேயும் ஃபாலோ செய்யும் Meta & Youtube; '6 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு' - அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

"6 வயதில் யூடியூப்பிற்கு அடிமை... 9 வயதில் இன்ஸ்டாகிராமிற்கு அடிமை.

10 வயதில், மன அழுத்தம் வந்துவிட்டது. இதனால், என்னை நானே தாக்கிக் கொள்வேன்.

13 வயதில் எனக்கு Social Phobia (சமூக பயம்), Body Dysmorphic Disorder (உடல் உருவக் குறைபாடு) ஆகியவை எனக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது அத்தனைக்கும் என்னுடைய சமூக வலைதள அடிக்‌ஷனே காரணம்" என்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் உயர் நீதிமன்றத்தின் படிகளை ஏறியிருந்தார் 20 வயதான பெண்மணி ஒருவர்.

இது மெட்டா மற்றும் யூடியூப் நிறுவனத்திற்கு எதிரான வழக்கு ஆகும். ஆறு வாரக் கால விசாரணைக்குப் பிறகு, நேற்று லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் உயர் நீதிமன்றம்
லாஸ் ஏஞ்சல்ஸ் உயர் நீதிமன்றம்

அந்தத் தீர்ப்பு...

"இளம் பயனாளர்களை அடிக்‌ஷனில் தள்ளுவதற்கேற்ப தான் மெட்டா மற்றும் யூடியூப் தங்கள் பிராடக்டுகளை வடிவமைத்திருக்கின்றன.

முக்கியமாக, இவற்றின் பயன்பாட்டால் என்னென்ன நடக்கும் என்பதற்கான எச்சரிக்கைகளை இந்த நிறுவனங்கள் வழங்கவில்லை... வழங்க தவறி இருக்கின்றன.

இதனால், மனுதாரருக்கு 6 மில்லியன் டாலர்கள் நஷ்ட ஈடாக தர வேண்டும். இதில் 70 சதவிகிதத்தை மெட்டா வழங்க வேண்டும்... மீதி 30 சதவிகிதத்தை யூடியூப் வழங்க வேண்டும்" என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இன்டர்நெட் காலமான இன்றையக் காலக்கட்டத்தில், இந்த வழக்கும், தீர்ப்பும் மிக முக்கியமானது. சமூக வலைதளங்கள் இளம் தலைமுறையினரை எப்படி பாதித்துள்ளது என்பதை கொண்டு தொடுக்கப்பட்ட முதல் வழக்கு இதுவே.

'எங்கேயோ அமெரிக்காவில் நடந்த வழக்கு... வந்த தீர்ப்பு' என்று சொல்லியோ, 'நம்ம ஊர்ல இப்படி வழக்குப்போட்டா, நமக்கு எவ்வளவு நஷ்ட ஈடு கிடைக்கும்?' என்று கேலி செய்துவிட்டோ கடந்துவிட வேண்டிய விஷயம் இல்லை இது.

இன்று இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், யூடியூப் ஆகிய சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் பெரும்பாலானோர், இந்த அடிக்‌ஷனுக்கு சின்ன அளவிலோ, பெரிய அளவிலோ ஆளாகியிருக்கின்றோம்.

எழுந்ததும் மொபைல் போன்
எழுந்ததும் மொபைல் போன்

எத்தனை பேர் காலையில் எழுந்ததும் இன்ஸ்டாகிராமிலும், ஃபேஸ்புக்கிலும் கண் விழிக்கிறோம். இரவு நேரத்தில் இன்ஸ்டாகிராம், யூடியூப் நோண்டாமல் தூங்குபவர்களின் எண்ணிக்கை மிக மிக மிக...... குறைவு.

ஆனால், இவற்றை அலர்ட்டாக பார்க்காமல், 'எந்திரிச்ச உடனே என்னோட முதல் வேலை இன்ஸ்டாகிராம் பாக்கறது தான்', 'இன்ஸ்டாகிராம், யூடியூப் நைட் பாத்துட்டு தூங்கவே 2 மணி ஆயிடுச்சு' என்று பெருமையாகச் சொல்லிக் கொள்கிறோம்.

மேலே சொன்ன வழக்கு சமூக வலைதளம் எப்படி இளைஞர்களைப் பாதிக்கிறது என்பதற்கானது... குழந்தைகள், பெரியவர்களின் சமூக வலைதள பயன்பாடு இன்னும் மிக பயம் தரக்கூடியதாக இருக்கிறது.

'என்னோட குழந்தைக்கு இன்னும் ஒரு வயசு கூட ஆகல... ஆனா, போனை நல்லா பார்க்கும்', 'ரைம்ஸ் போட்டு கொடுக்கலைனா, என் குழந்தை சாப்பிடவே சாப்பிடாது', 'குழந்தைய அமைதியா உக்காற வைக்கணும்னா, கையில மொபைல் போன் கொடுத்தா போதும்' என்று யூத் பெற்றோர்கள் பெருமையாகச் சொல்கிறார்கள்.

பெரியவர்கள் மொபைல் போன் பயன்பாடு
பெரியவர்கள் மொபைல் போன் பயன்பாடு

பெரியவர்களின் சமூக வலைதளப் பயன்பாட்டின் பயம் இன்னும் மோசமாக இருக்கிறது. இன்ப்ளூயன்சர்கள் எது சொன்னாலும், அது சரி என்று நினைத்துக்கொண்டு, அதை அப்படியே செய்கின்றனர். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு 'உணவு கம் மருந்து' வீடியோக்கள்.

நோய்கள் வராமல் இருக்க 'இந்த ஜூஸை குடியுங்கள், 'அந்த ஜூஸை குடியுங்கள்' என்று ஏகப்பட்ட அறிவுரைகள். இவர்களும் அதைச் செய்கிறார்கள். ஆனால், தொடர்ந்து அடர்த்தியான ஜூஸ்களைக் குடிக்கும் போது, சிறுநீரகம், கல்லீரல் பாதிப்படையக் கூடிய வாய்ப்புகள் கூட உண்டு.

இதனால், எல்லா வயதினருக்குமே சமூக வலைதளங்கள் ஓர் 'அபாய' சிக்னல்களே.

லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்ற தீர்ப்பில் முக்கியமாக கூறப்பட்டிருப்பது, 'சமூக வலைதளங்கள் மக்களை அடிக்‌ஷனாக்குவது போல' என்பதாகும்.

ஆம்... சமூக வலைதளத்தின் அல்காரிதம் நம்மை ஃபாலோ செய்வதுபோல பக்காவாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், யூடியூப் என ஏதேனும் ஒன்றில், ஏதாவது ஒன்றை தேடினாலே, மற்ற சமூக வலைதளங்களிலும் அதை காட்டும்.

உணவு சம்பந்தமாக பார்க்கும் ஒருவருக்கு, அவர்களது ஃபீடில், ஸ்க்ராலில் தொடர்ந்து உணவு குறித்தே காட்டி அவர்களை அந்தச் சமூக வலைதளத்தை விட்டு நீங்காமல் பத்திரமாக பார்த்துகொள்கின்றன அவை.

மொபைல் போன் அடிக்‌ஷன்
மொபைல் போன் அடிக்‌ஷன்

மேலும், இந்த ஆப்களை முதன் முதலாக இன்ஸ்டால் செய்யும் போது, நமது வயதைக் கொடுத்திருப்போம். அதற்கேற்ற வயதுக்கேற்ப ரீல்கள், ஷார்ட்ஸ்கள், போஸ்ட்கள் திரும்ப திரும்ப வந்து நமக்கு பொழுதுப்போக்காக மாறி, நம்மை கட்டி வைத்துவிடுகின்றன.

இன்னும் ஒரு படி மேலே போய், இன்டர்நெட் 'ஆன்' ஆன மொபைல் போன் அல்லது லேப்டாப் அருகில் இருக்கும் போது, ஏதேனும் ஒரு வார்த்தையை சொல்லிவிட்டால் போதும். அதை 'கீவேர்டாக' எடுத்து, அதையும் நமது ஃபீடுகளில் காட்டுகிறது.

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், பாடி சோடாவின் கொண்டையைப் போல, சமூக வலைதளங்கள் அனைத்து இடங்களுக்கும் நம் கூடவே வந்துகொண்டிருக்கிறது.

சமூக வலைதளங்களின் மீது இத்தனை தவறுகள் உள்ளது தான். ஆனால், முழு குற்றத்தையும் அவற்றின் மீது போட்டுவிட்டு எஸ்கேப் ஆவது சரியானது அல்ல.

ஆள்காட்டி விரலால் எதிரில் இருப்பவரைக் காட்டுவதற்கு முன், நம்மை சுட்டிக்காட்டும் மூன்று விரல்களை முதலில் பாருங்கள் என்று கூறுவார்கள் தானே... அந்த மூன்று விரல்களை இப்போது பார்ப்போம்.

> எந்த ஒரு பிசினஸும், நுகர்வோர் திரும்ப திரும்ப நம்மிடம் தான் வர வேண்டும் என்று அனைத்தையும் செய்யும். அது அவர்களுடைய ஸ்ட்ரேட்டஜி.

ஆனால், நுகர்வோர் ஆகிய நாம் தான் நமக்கு எது தேவை என்பதை முடிவு செய்ய வேண்டும்.

சமூக வலைதள பயன்பாடு
சமூக வலைதள பயன்பாடு

> எந்தக் கன்டென்ட்டை எவ்வளவு நேரம் பார்க்க வேண்டும் என்பது நமது தேர்வாக இருக்க வேண்டும்.

> என்னுடைய வாழ்க்கையில் சமூக வலைதளங்களுக்கு 'இவ்வளவு' தான் லிமிட் என்பதை நாம் செட் செய்ய வேண்டும்.

இவ்வளவு நாள் சமூக வலைதளங்களில் மூழ்கி இருந்தவர்களை, இப்போதே விழித்துக்கொண்டு வாருங்கள் என்று கூறுவது சரியாக இருக்காது. ஆனால், சின்ன சின்ன முன்னெடுப்புகள் மூலம் சமூக வலைதளப் பக்கத்தின் பயன்பாட்டைக் கட்டுக்குள் கொண்டு வரலாம். அவை...

> இரவு 10 மணிக்கு மேல் ஒரு நொடி கூட சமூக வலைதளம் பக்கம் செல்லக்கூடாது.

> ஒவ்வொரு ஆப்பிற்கும் தனித்தனி டைமிங் செட் செய்யுங்கள். அதாவது ஒரு நாளைக்கு இன்ஸ்டாகிராம் அரை மணிநேரம் தான் பயன்படுத்துவேன்... யூடியூப்பை 45 நிமிடம் தான் பயன்படுத்துவேன் என்பதுபோல.

இதற்கான ஆப்ஷன்கள், 'Digital Wellbeing' என்று நமது மொபைல் போன்களிலேயே இருக்கிறது. அதில் செட் செய்துவிட்டால், குறிப்பிட்ட நிமிடத்திற்கு மேல், அந்த ஆப்பைப் பயன்படுத்த முடியாததுபோல ஆப்கள் ஃப்ரீஸ் ஆகிவிடும்.

டைமர்
டைமர்

> வாரத்திற்கு ஒரு நாள் 'டிஜிட்டல் ஃபாஸ்டிங்' - ஒரு நாள் முழுவதும் இன்டர்நெட் பயன்படுத்தாமல் இருங்கள்.

> உணவு உண்ணும் போது, யாராவது பேசிக்கொண்டிருக்கும் போது மொபைல் போன் நோண்டுவதை நிறுத்துங்கள். அந்த நொடியில் நீங்கள் முழுமையாக முயற்சி செய்யுங்கள்.

> மொபைல் போன் பயன்படுத்துவதற்குப் பதிலாக, உங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒன்றை கொஞ்சம் கொஞ்சமாக செய்ய தொடங்குங்கள்... அல்லது ஏதேனும் புதிய விஷயத்தைக் கற்றுக்கொள்ளுங்கள். உதாரணத்திற்கு, புத்தகம் படிப்பது, சமைப்பது, ஓவியம் வரைவது...

> வீட்டிற்கு வெளியே காலடி எடுத்து வைத்ததும், மொபைல் போனில் மூழ்கி தலைகுனிந்துக்கொண்டே செல்லாதீர்கள். நிமிர்ந்து உலகத்தைப் பாருங்கள். உங்களைச் சுற்றி என்னவெல்லாம் நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள பாருங்கள். நாள்கள் போக போக, இது மிக சுவாரஸ்யமானதாக மாறும்.

> குழந்தைகளின் அடிக்‌ஷனுக்கு... சில ரீல்ஸ்களில் வெளிநாட்டு அம்மாக்கள் தங்கள் குழந்தைகள் தூங்கும்போது, அவர்களது கண்ணில் மையை அப்பிவிட்டு மொபைல் போன் பார்த்ததால் தான் என்று குழந்தைகளை வழிக்கு கொண்டு வருவார்கள். அந்த டெக்னிக்குகளை யூத் அம்மாக்கள் ஃபாலோ செய்யலாம்.

குழந்தைகள் அடிக்‌ஷன்
குழந்தைகள் அடிக்‌ஷன்

> நாம் யாரும் பேசாததால் தான், நம்மை போன்று நம் அம்மா, அப்பாக்களும் மொபைல் போனில் மூழ்குகின்றனர். இதை தடுக்க, அவர்களிடம் நாம் நேரம் செலவிடலாம்.

சமூக வலைதளக் கருத்துகள் சில நேரங்களில் தவறாக கூட இருக்கும் என்பதை விளக்கி புரியவைக்கலாம்.

மாற்றம் முதலில் நம்மிடம் இருந்தே தொடங்க வேண்டும்... மாற்றம் ஒன்றே மாறாதது. Better Late than Never!

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: எங்கேயும் ஃபாலோ செய்யும் Meta & Youtube; '6 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு' - அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு Rating: 5 Reviewed By: gg