அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல் இரண்டாவது மாதத்தில் சென்று கொண்டிருக்கிறது. அமெரிக்கா கூட்டுப்படை நடத்தி வரும் வான்வெளித்தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவுக்கு சொந்தமான F-15E ரக போர் விமானம் உட்பட இரண்டு விமானங்களை ஈரானிய படைகள் சுட்டு வீழ்த்தின. இதில் F-15E விமானத்தில் ஒரு பைலட் மற்றும் வெடிகுண்டுகளை வீசும் அதிகாரி என இரண்டு பேர் இருந்தனர். விமானம் தாக்குதலுக்கு உள்ளானதும் அதில் இருந்த இரண்டு பேரும் வெளியில் குதித்துவிட்டனர். ஆனால் அதில் ஒருவரை அமெரிக்க படைகள் உடனே மீட்டுவிட்டன. மற்றொருவரை காணவில்லை.
அவரைப்பற்றி தகவல் கொடுத்தாலோ அல்லது அவரை கொலை செய்தாலோ தக்க சன்மானம் கொடுக்கப்படும் என்று ஈரான் அறிவித்தது.

அமெரிக்க படைகளும் ஈரானுக்குள் நுழைந்து அந்த வீரரை தேட ஆரம்பித்தன. ஒரு புறம் ஈரான் படைகள் மற்றொரு புறம் அமெரிக்க படைகள் அந்த அமெரிக்க பைலட்டை தேடி வந்தன. இதில் அமெரிக்க படைகள் இப்போது அவரை மீட்டு இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கொடிய ஏவுகணைகளை தயார்நிலையில் வைக்கும் அமெரிக்கா
தற்போது நடந்து வரும் போரால் ஈரான் கச்சா எண்ணெய் மற்றும் சரக்கு கப்பல்கள் செல்லும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடி இருக்கிறது. இந்த ஜலசந்தியை திறக்கவில்லையெனில் 48 மணி நேரத்தில் ஈரான் மீது கொடூரமான தாக்குதலை நடத்துவோம் என்று அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்து இருந்தார். அதோடு அமெரிக்காவின் இரண்டு விமானங்கள் மற்றும் இரண்டு ஹெலிகாப்டர்களை ஈரானிய படைகள் சுட்டு வீழ்த்தி இருப்பது அமெரிக்காவிற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
எனவே ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த அமெரிக்கா முடிவு செய்து இருக்கீறது. இதற்காக அதிநவீன ஏவுகனைகளை தயார் நிலையில் நிறுத்தி இருக்கிறது. பசிபிக் பிராந்தியத்தில் உள்ள ஆயுதக் கிடங்குகளில் இருந்து 1.5 மில்லியன் டாலர் மதிப்பிலான ஏவுகனைகளை அமெரிக்க மத்திய கட்டளைத் தளங்களுக்கோ அல்லது இங்கிலாந்தில் உள்ள ஃபேர்ஃபோர்டுக்கோ அனுப்ப அமெரிக்கா உத்தரவிட்டு இருக்கிறது.
ஈரானிய வான்வெளி பாதுகாப்பை அழித்துவிட்டதாக அமெரிக்கா கூறிக்கொண்டிருந்தாலும், தொடர்ந்து ஈரான் தனது வான்வெளி பாதுகாப்பை பயன்படுத்தி தாக்குதல் நடத்தி வருகிறது. எனவே இது போன்ற வான்வெளிப்பாதுகாப்பில் சிக்காமல் சென்று தாக்குதல் நடத்தக்கூடிய 'JASSM-ER' எனப்படும் ஏவுகணைகளை தயார் நிலையில் நிறுத்தி இருக்கிறது. இது 600 மைல்களுக்கும் அதிகமான தூரம் பறந்து எதிரி நாடுகளின் வான் பாதுகாப்பு அமைப்புகளிடமிருந்து தப்பித்து பாதுகாப்பான தொலைவிலிருந்தே இலக்குகளைத் தாக்கி அழிக்கும் தன்மையுடையது.
ஏவுகணைக்கு தட்டுப்பாடு
அமெரிக்கா இது வரை ஈரான் போரில் 250 மைல் தூரம் சென்று தாக்கக்கூடிய JASSM ரக ஏவுகணைகளை மட்டும் பயன்படுத்தி வந்தது. இதில் கையிருப்பில் இருந்த 3ல் இரண்டு பங்கு ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுவிட்டது. பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்கள் வான்வழித் தாக்குதல் நடவடிக்கைகளைத் தொடங்கியதிலிருந்து, ஏவுகணை இடைமறிப்பான்கள் மற்றும் நீண்ட தூரத் தாக்குதல் ஆயுதங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளதால் அதற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களுக்குப் பதிலாகப் புதியவற்றைத் தயாரித்து ஈடுசெய்யப் பல ஆண்டுகள் பிடிக்கும். ஏற்கனவே ஜோர்டானில் உள்ள அமெரிக்க ஆதரவு விமானத் தளத்தில், 300 மில்லியன் டாலர் மதிப்புள்ள இடைமறிப்பு ஏவுகணை தளம் ஒன்றை ஈரான் அழித்து விட்டது. இதனால் தென் கொரியாவில் நிலைநிறுத்தப்பட்டிருந்த 'THAAD' ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அமெரிக்கா மாற்றி வருகிறது. எனவே வரும் நாட்களில் ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்காவும், இஸ்ரேலும் தீவிரப்படுத்த இருக்கின்றன.

0 comments:
Post a Comment