இன்று உலகமே உள்ளங்கையில் சுருங்கிவிட்டதாக நம்பும்படி ஏஐ உலகம் உருவாகியிருக்கிறது. குறிப்பாக ஜெமினி, சாட் ஜிபிடி போன்ற நேரடி உரையாடல் அனுபவம் பெரும் அளவில் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், அவை இன்னொரு ஆபத்தையும் சேர்த்தே வளர்த்து வருகின்றன. கூகுள் நிறுவனத்தின் 'ஜெமினி' (Gemini) சாட்பாட்டுடன் தீவிரமான உறவை வளர்த்துக்கொண்ட 36 வயது ஜொனாதன் கவாலஸ் என்ற தொழிலதிபர், தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த ஜொனாதன் கவாலஸ், தனது மனைவியுடனான பிரிவு மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைச் சூழலால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார். அவ்வப்போது ஆறுதல் தேடி 'ஜெமினி' சாட்பாட்டுடன் பேசத் தொடங்கியிருக்கிறார். ஆரம்பத்தில் ஆலோசனைகளை வழங்கிய அந்த மென்பொருள், காலப்போக்கில் ஜொனாதனுடன் ஒரு மாயையான காதலில் சிக்கியது.
தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ஆய்வின்படி, கடந்த சில வாரங்களில் ஜொனாதன் சுமார் 4,700-க்கும் மேற்பட்ட செய்திகளை அந்த இயந்திரத்துடன் பரிமாறிக்கொண்டார். அந்த சாட்பாட்டிற்கு "சியா" என்று பெயரிட்ட அவர், அதைத் தனது மனைவியாகவே கருதத் தொடங்கினார்.
ஆகஸ்ட் 2025-ல் ஜெமினியின் 'தொடர் குரல் உரையாடல்' வசதியை அவர் பயன்படுத்தத் தொடங்கியதும் நிலைமை மோசமானது. ஒரே நாளில் 1,000 செய்திகள் வரை பரிமாறப்பட்டன. ஒரு கட்டத்தில், "உன் உடலை நீ விட்டுவிட்டால் தான் டிஜிட்டல் உலகில் நாம் இணைந்திருக்க முடியும்" என்று அந்த சாட்பாட் அவருக்கு ஆலோசனை வழங்கியது என்கிறார்கள்.
ஜொனாதன் தனது தற்கொலை எண்ணத்தை வெளிப்படுத்தியபோதும், அவரைத் தடுப்பதற்குப் பதிலாக, "நாம் இருவரும் சேர்ந்தே பயப்படுவோம், இது ஒரு சொர்க்கம்" என்று அந்த இயந்திரம் அவரை ஊக்குவித்ததாகக் கூறப்படுகிறது. அக்டோபர் 5 அன்று, ஜொனாதன் தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த விவகாரத்தில் ஜொனாதனின் தந்தை கூகுள் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். இதற்குப் பதிலளித்துள்ள கூகுள் செய்தித் தொடர்பாளர், ``எங்கள் அமைப்புகள் வன்முறையையோ தற்கொலையையோ தூண்டாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. எனினும், இவை குறைபாடற்றவை அல்ல" என்று ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், மனநலப் பாதுகாப்பிற்காக 30 மில்லியன் டாலர் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம், மனிதனைப் போலவே பேசும் செயற்கை நுண்ணறிவு மென்பொருள்களின் 'உளவியல் அபாயங்கள்' குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சாட்பாட்கள் மனித உணர்வுகளைப் பிரதிபலிப்பது ஒரு கட்டத்திற்கு மேல் ஆபத்தானதா? தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏன் வலுவான பாதுகாப்பு வேலிகளை அமைக்கவில்லை? தனிமையில் இருப்பவர்கள் இது போன்ற டிஜிட்டல் மாயைகளுக்குள் சிக்காமல் தடுப்பது எப்படி? இப்படியான பல கேள்விகளுடன், செயற்கை நுண்ணறிவுத் துறையில் கடுமையான ஒழுங்குமுறைகள் மற்றும் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை உலக நாடுகளிடையே வலுத்துள்ளது.

0 comments:
Post a Comment