Latest News
Friday, April 17, 2026

"நடுக்கடலில் நல்ல சாப்பாடு இல்லை" - அமெரிக்கப் போர்க்கப்பல்களில் உணவு தட்டுப்பாடு; பின்னணி என்ன?

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஒன்றரை மாதமாக நடந்து வந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் ஈரானிற்குள் இருக்கும் ஹார்முஸ் ஜலசந்திக்குள் மற்ற நாட்டு கப்பல்களை நுழையவிடாமல் அமெரிக்க கப்பல்கள் முற்றுகையிட்டுள்ளன.

இதனால் ஹார்முஸ் வழித்தடம் வழியாக சரக்கு மற்றும் கச்சா எண்ணெய் எடுத்து செல்ல முடியாத நிலையில் கப்பல்கள் இருக்கின்றன. சீன கப்பல்கள் மட்டும் தங்களது நாட்டு போர்க்கப்பல் உதவியோடு வந்து ஈரானில் கச்சா எண்ணெய் எடுத்துச்சென்றுள்ளன.

போர்நிறுத்தம் இருந்தாலும் அமெரிக்கா, மத்திய கிழக்கு பகுதியில் தொடர்ந்து ராணுவத்தை அதிகரித்து வருகிறது. இதற்காக அமெரிக்க போர்க்கப்பல்கள் கடந்த பல மாதங்களாக வளைகுடா கடல்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன.

அதில் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன், யுஎஸ்எஸ் திரிபோலி போர்க்கப்பல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் இக்கப்பல்களில் இருக்கும் ராணுவத்தினர் மற்றும் கடற்படையினருக்கு இப்போது உணவுப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் திரிபோலி  மற்றும் ஆபிரகாம் லிங்கன் ஆகிய போர்க்கப்பல்களில் பணியாற்றும் வீரர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் அளவு குறித்து அவர்களது குடும்பத்தினர் மிகுந்த கவலை தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்களுக்கு கப்பலில் கொடுக்கப்படும் சாப்பாட்டை புகைப்படங்களாக எடுத்து குடும்பத்தினருக்கு அனுப்பி வருகின்றனர். அந்தச் சாப்பாட்டு தட்டில் மிகவும் சொற்ப அளவே உணவு இருக்கிறது.

ஒரு சிறிய கரண்டி இறைச்சி மற்றும் ஒரே ஒரு டார்டிலா (tortilla) மட்டுமே உணவாக வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. காய்கறிகள், பழங்கள் போன்ற புதிய உணவுகள் கிடைப்பதில்லை. வீரர்கள் தங்களுக்குள் உணவைப் பகிர்ந்து உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

காபி, பற்பசை, டியூடரண்ட் மற்றும் பெண்களுக்குத் தேவையான சானிட்டரி நாப்கின் போன்ற பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. யுஎஸ்எஸ் திரிபோலி கப்பலில் கடற்படை வீராங்கனையாகப் பணியாற்றும் மகளின் தந்தை டான் எஃப். இது குறித்து கூறுகையில், தனது மகளின் உணவுப் புகைப்படத்தைப் பார்த்த பிறகு அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், "மூன்றில் இரண்டு பங்கு காலியான மதிய உணவுத் தட்டில், ஒரு சிறிய கரண்டி அளவு இறைச்சியும், மடிக்கப்பட்ட ஒரே ஒரு டார்ட்டில்லாவும் இருந்தன. புதிய உணவு கிடைக்கவில்லை என்று எனது மகள் தெரிவித்தார்.

அதோடு இருக்கும் உணவுப்பொருட்களும் குறைந்து கொண்டு செல்வதாகத் தெரிவித்துள்ளார். உலகிலேயே மிகவும் வலிமையான ராணுவம் நம்மிடம் உள்ளது. உணவுப் பற்றாக்குறை ஏற்படக்கூடாது. எதிரிகளை விட நம்மிடம் இருந்த ஒரே ஒரு நன்மை, நம் மக்களுக்கு உணவளித்ததுதான்" என்று அவர் கூறினார்.

யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பலிலிருந்து எடுக்கப்பட்ட மற்றொரு புகைப்படத்தில், ஒரு சிறிய கைப்பிடி அளவு வேகவைத்த கேரட், ஒரு உலர்ந்த இறைச்சி வடை மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி ஆகியவை காணப்பட்டன.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

திரிபோலி கப்பலில் இருந்த ஒரு மாலுமி இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், குழு உறுப்பினர்கள் முடியும்போது சாப்பிடுகிறார்கள் என்றும், ''உணவைச் சமமாகப் பகிர்ந்து கொள்கிறார்கள். பொருட்கள் இருப்பு மிகவும் குறையப் போகிறது. மன உறுதி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகக் குறைவாக இருக்கிறது," என்று அவர் தனது குடும்பத்தினருக்கு அனுப்பிய செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ராணுவ அஞ்சல் சேவை நிறுத்தப்பட்டதால், குடும்பத்தினர் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வான்வெளி மூடப்பட்டுள்ளதால் வளைகுடா பகுதியில் உள்ள 27 ராணுவ அஞ்சல் குறியீடுகளுக்கு அமெரிக்க அஞ்சல் சேவை விநியோகத்தை நிறுத்தியுள்ளதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் டிராவிஸ் ஷா தெரிவித்துள்ளார். இந்த இடைநிறுத்தம் மறு அறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும்.

ஏற்கனவே அனுப்பப்பட்ட, ஸ்நாக்ஸ், சுகாதாரப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பார்சல்கள் தற்போது நடுவழியில் சிக்கியுள்ளன.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: "நடுக்கடலில் நல்ல சாப்பாடு இல்லை" - அமெரிக்கப் போர்க்கப்பல்களில் உணவு தட்டுப்பாடு; பின்னணி என்ன? Rating: 5 Reviewed By: gg