Latest News
Saturday, April 4, 2026

RBI: வட்டி விகித எதிர்பார்ப்பு... என்ன செய்யப் போகிறது ரிசர்வ் வங்கி?

ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தினாலும் சிக்கல், குறைத்தாலும் சிக்கல். அமெரிக்கா–இஸ்ரேல்–ஈரான் இடையிலான மோதல் உலகப் பொருளாதாரத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

உலகளாவிய சூழல்

ஈரான் வழியாகச் செல்லும் ஹோர்முஸ் நீரிணை உலக எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போக்குவரத்துக்கு முக்கியமான பாதையாகும். அங்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் காரணமாக எண்ணெய் விலை 115 அமெரிக்க டாலர் வரை உயர்ந்துள்ளது.

இதனால் ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற எண்ணெய் இறக்குமதி நாடுகள் கடுமையான அழுத்தத்தை எதிர்கொள்கின்றன. மேம்பட்ட நாடுகள் (அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா) வலுவான நிதி அமைப்புகளால் சற்றே தாங்கிக் கொள்ள முடிகிறது. ஆனால் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன.

ஹோர்மூஸ் நீரிணை: அமெரிக்கா - ஈரான் போர்
ஹார்முஸ் நீரிணை: அமெரிக்கா - ஈரான் போர்

கச்சா எண்ணெய் விலை உயர்வு, கடல் வழி போக்குவரத்துத் தடைகள், மூலதனப் பாய்ச்சல், ரூபாய் பலவீனம் மற்றும் சந்தைகளில் அதீத ஏற்ற, இறக்கம் எனப் பல்வேறு விஷயங்கள் இந்தியாவுக்கு அழுத்தங்களை உருவாக்குகின்றன.

வட்டி விகிதம்
வட்டி விகிதம்

இந்தியாவின் பணவீக்கம் தற்போது 5% அளவில் உள்ளது. இது ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள 2%–6% வரம்புக்குள் இருப்பதால் உடனடி அச்சம் இல்லை. ஆனால், தற்போது நெருக்கடிகள் அதிகரித்தால் அது சிக்கலில் போய் முடியும். இந்தியப் பொருளாதார வளர்ச்சி வலுவாக உள்ளது; சேவைத் துறை ஏற்றுமதி நன்றாகச் செயல்பட்டுவருகிறது. மேலும் அந்நிய செலாவணி கையிருப்பு 635 பில்லியன் டாலராக உள்ளது.

ஆனால், வணிகப் பற்றாக்குறை காரணமாக நடப்பு கணக்கு பற்றாக்குறை (CAD) 1.3% ஆக உயர்ந்துள்ளது. எண்ணெய் விலை மேலும் அதிகரித்தால், இந்தப் பற்றாக்குறை மேலும் மோசமடையும். இதனால் பணவீக்கம் உயர வாய்ப்புள்ளது.

இந்தச் சூழலில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது பணவியல் கொள்கையை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பது மிக முக்கியமான கேள்வியாக உள்ளது. ஏப்ரல் 6 முதல் 8-ம் தேதி வரை நடக்கும் நிதிக் கொள்கை கூட்டத்தில் ரிசர்வ் வங்கி என்ன முடிவெடுக்கப் போகிறது?

இது குறித்து பேராசிரியர் ஆசிய வளர்ச்சி வங்கியின் முன்னாள் மூத்த பொருளாதார நிபுணர் டி.கே.ஜயராமனிடம் கேட்டோம். அவர் கூறியதாவது,

RBI-க்கு முன் உள்ள மூன்று சாத்தியமான முடிவுகள்

1. வட்டி விகிதத்தை 5.25% என்ற நிலையிலேயே வைத்திருப்பது

• வளர்ச்சி தொடரும்.

• ரூபாய் நிலைத்தன்மை குறையும்.

• பணவீக்கம் 5% அளவில் இருக்கும்.

2. 5.50% ஆக உயர்த்துவது

• ரூபாய் வலுப்படும்.

• பணவீக்கம் கட்டுப்படும்.

• முதலீடு சற்று மந்தமாகும்.

3. 5.00% ஆகக் குறைப்பது

• வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

• ஆனால் வெளிப்புற அதிர்ச்சிகளால் பணவீக்கம் அதிகரித்து ரிசர்வ் வங்கியின் நம்பகத்தன்மை பாதிக்கப்படும்.

இந்திய ரிசர்வ் வங்கி - RBI
இந்திய ரிசர்வ் வங்கி - RBI

நிபுணர்களின் கருத்துகள்

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர், ஐ.எம்.எஃப் முன்னாள் தலைவர் கீதா கோபிநாத், வெளிப்புற அதிர்ச்சிகளை எதிர்கொள்ள வட்டி விகிதத்தை இறுக்கமாக வைத்திருக்க வேண்டும் என்று எச்சரிக்கிறார்.

அதே சமயம், நிதி அமைச்சின் பிரதான பொருளாதார ஆலோசகர் டாக்டர் அனந்த நாகேஸ்வரன், அதிகப்படியான இறுக்கம் வளர்ச்சியைப் பாதிக்கக் கூடும் என்று எச்சரிக்கிறார்.

மிகச் சாத்தியமான முடிவு 

இந்தச் சூழலில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை நிலைத்த நிலையில் வைத்துக்கொண்டு, எச்சரிக்கை சைகை அளிக்கும் வாய்ப்பு அதிகம். எண்ணெய் விலை மேலும் உயர்ந்தால் அல்லது ரூபாய் பலவீனம் அதிகரித்தால், பின்னர் 25 புள்ளிகள் உயர்த்தும் வாய்ப்பு உள்ளது.

ரிசர்வ் வங்கியின் பங்கானது ரூபாய் மற்றும் பணவீக்கத்தைக் காப்பாற்றுவது; அதே நேரத்தில் அரசு நிதி மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும். இந்தியாவின் வளர்ச்சி வலுவாக இருந்தாலும், வெளிப்புற அதிர்ச்சிகள் அதிகரித்துள்ளன. எனவே, வட்டி விகிதத்தை மாற்றாமல் இப்போதுள்ள நிலையிலேயே வைத்திருக்கவே அதிக வாய்ப்புள்ளது என்றார் அவர்.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: RBI: வட்டி விகித எதிர்பார்ப்பு... என்ன செய்யப் போகிறது ரிசர்வ் வங்கி? Rating: 5 Reviewed By: gg