ஒவ்வொரு நாளும் சிறப்பாகத் தொடங்க நமக்கு ஒரு மோட்டிவேஷன் தேவைப்படுகிறது. உலகமே எதிர்த்து நின்றாலும், "நான் செய்வது சரி, என் உரிமைக்காக நான் நிற்பேன்" என்று நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் தைரியம் அந்த நாளுக்கான எனர்ஜியைத் தரும். அப்படிப்பட்ட ஒரு நிஜக் கதாநாயகியின் கதைதான் இது.
அமெரிக்காவில் கறுப்பின மக்களின் சிவில் உரிமைப் போராட்டத்தின் தாய் என்று `ரோசா பார்க்ஸ்' (Rosa Parks) அறியப்படுகிறார். ஆனால், அவருக்கு 9 மாதங்களுக்கு முன்பாகவே, அதே பேருந்தில், அதே போன்றதொரு அடக்குமுறையை எதிர்த்து, ஒரு 15 வயது சிறுமியின் தீப்பொறிதான் அந்த மாபெரும் வரலாற்றுக்குத் தொடக்கப்புள்ளி. அந்தச் சிறுமியின் பெயர்தான் க்ளாடெட் கோல்வின் (Claudette Colvin).

க்ளாடெட் கோல்வின் செப்டம்பர் 5, 1939 அன்று அலபாமா மாகாணத்தில் உள்ள மாண்ட்கோமரி நகரில் பிறந்தார். கறுப்பின மக்களுக்கு எதிரான நிறவெறியும், இனப்பாகுபாடும் உச்சத்தில் இருந்த காலகட்டம் அது.
இவரது பெற்றோர் மேரி ஜேன் காட்ஸன், சி.பி. ஆஸ்டின். வறுமையின் காரணமாக இவர் தனது தாத்தா-பாட்டி உறவினர் ஒருவரால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டார்.
`புக்கர் டி. வாஷிங்டன்' உயர்நிலைப் பள்ளியில் பயின்ற அவர், மிகச் சிறந்த மாணவியாகத் திகழ்ந்தார். கறுப்பின மக்களின் வரலாற்றை, குறிப்பாக ஹாரியட் டப்மேன், சோஜர்னர் ட்ரூத் போன்ற சுதந்திரப் போராட்ட வீராங்கனைகளின் வீரதீரச் செயல்களைப் பற்றி பள்ளியில் ஆழமாகப் படித்து, தனக்குள்ளும் ஒரு உரிமைத் தீயை வளர்த்துக் கொண்டிருந்தார்.
மார்ச் 2, 1955. பள்ளியில் கறுப்பின மக்களின் வரலாற்று மாதத்தைக் கொண்டாடிவிட்டு, ஒரு தோழியுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் 15 வயது க்ளாடெட். மாண்ட்கோமரி நகரப் பேருந்தில் கறுப்பின மக்களுக்கான பகுதியில் (Colored section) அமர்ந்திருந்தார்.
பேருந்து பயணத்தின் நடுவே வெள்ளையர்களுக்கான இருக்கைகள் முழுமையாக நிரம்பின. ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி நின்று கொண்டிருப்பதைப் பார்த்த பேருந்து ஓட்டுநர், க்ளாடெட் மற்றும் அவருடன் இருந்த மூன்று கறுப்பின மாணவிகளையும் எழுந்து பின்னால் செல்லும்படி கட்டளையிட்டார். மற்ற மூன்று மாணவிகளும் பயந்துபோய் எழுந்துவிட்டனர். ஆனால், க்ளாடெட் நகர மறுத்துவிட்டார்.

"நான் என் பயணச்சீட்டிற்கான பணத்தைக் கட்டிவிட்டேன். இது என் அரசியலமைப்பு உரிமை," என்று ஆணித்தரமாகக் கூறினார் அந்த 15 வயது சிறுமி.
பிற்காலத்தில் இதுபற்றி அவர் கூறும்போது, "என் ஒரு தோளை ஹாரியட் டப்மேனும், மறு தோளை சோஜர்னர் ட்ரூத்தும் அழுத்திப் பிடித்துக் கொண்டிருப்பது போல் நான் உணர்ந்தேன். அந்த மாபெரும் வரலாற்றுத் தலைவர்கள் என்னை அங்கிருந்து நகர விடாமல் தடுத்தார்கள். என்னால் அந்த இருக்கையை விட்டு எழவே முடியவில்லை" என்று நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டார்.
பேருந்து ஓட்டுநர் காவல்துறையை அழைத்தார். இரண்டு வெள்ளை நிறக் காவலர்கள் வந்து க்ளாடெட்டை வலுகட்டாயமாக பேருந்திலிருந்து வெளியே இழுத்துப் போட்டனர். அவர் கைகளில் விலங்கிடப்பட்டு, வயது வந்தோர் சிறையில் அடைக்கப்பட்டார். இனப்பாகுபாட்டுச் சட்டங்களை மீறியது, அமைதிக்குக் குந்தகம் விளைவித்தது, காவலர்களைத் தாக்கியது என அவர் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
ஏன் க்ளாடெட் மறைக்கப்பட்டார்?
க்ளாடெட் கைதான சம்பவம் நடந்து சரியாக 9 மாதங்கள் கழித்து (டிசம்பர் 1, 1955), இதே மாண்ட்கோமரி நகரில் ரோசா பாக்ஸ் பேருந்தில் வெள்ளையருக்கு இருக்கை தர மறுத்துக் கைதானார். அதுதான் மாண்ட்கோமரி பேருந்து புறக்கணிப்புப் போராட்டமாக வெடித்து, மார்ட்டின் லூதர் கிங்கின் எழுச்சிக்கும் காரணமானது.

சிவில் உரிமைத் தலைவர்கள் (NAACP), ஒரு 15 வயது சிறுமி போராட்டத்தின் முகமாக இருக்கக் கூடாது என்றும், அவர் உணர்ச்சிவசப்பட்டுப் பேசக்கூடியவர் என்றும் கருதினர். அவர் ஒரு ஏழ்மையான குடும்பப் பின்னணியைக் கொண்டவர். ரோசா பாக்ஸ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர், அமைதியானவர் மற்றும் சிவில் உரிமைக் குழுவின் செயலாளராக இருந்தவர்.
கைதான சில மாதங்களில், திருமணம் ஆகாமலேயே க்ளாடெட் கர்ப்பமானார். அன்றைய பழமைவாத சமூக அமைப்பில், ஒரு தனித்துவிடப்பட்ட, கர்ப்பிணியான பதின்பருவச் சிறுமியைப் போராட்டத்தின் சின்னமாக முன்னிறுத்த கறுப்பினத் தலைவர்களே தயங்கினர். இதனால், வரலாற்றின் பக்கங்களில் க்ளாடெட் சத்தமில்லாமல் பின்னுக்குத் தள்ளப்பட்டார்.
போராட்டத்தின் முகமாக அவர் முன்னிறுத்தப்படாவிட்டாலும், சட்டப் போராட்டத்தில் அவரே பிரதானமாக இருந்தார். பேருந்துகளில் கறுப்பின மக்கள் தனிமைப்படுத்தப்படுவதை எதிர்த்துத் தொடரப்பட்ட 'பிரௌடர் எதிர் கேல்' (Browder v. Gayle - 1956) என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டாட்சி நீதிமன்ற வழக்கில், நான்கு முக்கிய வாதிகளில் ஒருவராக க்ளாடெட் நின்றார்.
நீதிமன்றத்தில், தன்னை எப்படிப் பேருந்தில் இருந்து வலுகட்டாயமாக இழுத்துச் சென்றார்கள் என்பதை நெஞ்சுரத்தோடு சாட்சியமளித்தார். இந்த வழக்கில்தான், "பேருந்துகளில் இனப்பாகுபாடு காட்டுவது அரசியலமைப்புக்கு முரணானது" என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் மாபெரும் தீர்ப்பை வழங்கியது.
ரோசா பாக்ஸின் போராட்டம் கவனத்தை ஈர்த்தது என்றால், க்ளாடெட் கோல்வின் பங்குகொண்ட வழக்குதான் சட்டத்தையே மாற்றியது!

பிற்கால வாழ்க்கையும் அங்கீகாரமும்
தனது சொந்த ஊரான அலபாமாவில் கறுப்பினச் சமூகத்தினராலேயே ஒதுக்கப்பட்டவராக உணர்ந்த க்ளாடெட், 1958ம் ஆண்டு நியூயார்க் நகருக்கு இடம்பெயர்ந்தார். அங்கு ஒரு செவிலியர் உதவியாளராக மன்ஹாட்டனில் சுமார் 35 ஆண்டுகள் அமைதியாகப் பணிபுரிந்து, 2004ல் ஓய்வு பெற்றார்.
பல தசாப்தங்களாக அவர் பெயர் இருட்டடிப்பிலேயே இருந்தது. காலப்போக்கில், வரலாற்று ஆய்வாளர்களால் அவரது வீரச்செயல் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
1955ம் ஆண்டு அவர் மீது போடப்பட்ட அந்தப் பொய்யான குற்றப்பதிவு பல ஆண்டுகளாக நீக்கப்படாமலேயே இருந்தது. இறுதியாக, 2021ம் ஆண்டு, அவரது 82-வது வயதில், அலபாமா நீதிமன்றம் அவர் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் அதிகாரபூர்வமாக நீக்கி, அவரை நிரபராதி என்றும், ஒரு வரலாற்று நாயகி என்றும் அங்கீகரித்தது.

க்ளாடெட் நமக்குச் சொல்வது ஒன்றுதான். நாம் செய்வது நியாயம் என்று நம் மனதுக்குத் தெரிந்தால், அதற்காகத் தனித்து நிற்கத் தயங்கக் கூடாது. உலகம் நம்மை உடனே அங்கீகரிக்காமல் போகலாம். ஆனால், நாம் விதைத்த விதை என்றோ ஒருநாள் ஒரு மாபெரும் விருட்சமாகி நிழல் தரும். மாற்றம் என்பது வயதிலோ, பதவியிலோ இல்லை.
இன்றைய தினத்தை நம்பிக்கையுடனும், க்ளாடெட் கோல்வின் போன்று உறுதியுடனும் தொடங்குவோம்!

0 comments:
Post a Comment