Latest News
Saturday, May 30, 2026

ஈரான் போர் முடிவுக்கு ஆசைப்படும் ட்ரம்ப்; மனசு வைக்காத ஈரான் - ட்ரம்பிற்கு 'தேர்தல் பயம்'?

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி, ஈரானில் போர் தொடங்கியது வேண்டுமானால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இஷ்டத்திற்கு தொடங்கியது இருக்கலாம். ஆனால், முடிவு அவர் விரும்புவதுப் போல அமையாது போலும்.

ஈரான் அணு ஆயுதத் தயாரிப்பில் இருக்கிறது... கிட்டத்தட்ட 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஈரானிடம் இருக்கிறது - இது தான் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா கூறிய காரணம்.

பிப்ரவரி 28 முதல் ஏப்ரல் 7 வரை அமெரிக்கா & இஸ்ரேல் vs ஈரான் என போரும், தாக்குதல்களும் கடுமையாக சென்றன.

ஈரான் - அமெரிக்கா
ஈரான் - அமெரிக்கா

போர் நிறுத்தம்

ஏப்ரல் 7-ம் தேதி நள்ளிரவில் (இந்திய நேரப்படி), பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்ய, அமெரிக்கா இரண்டு வார போர் நிறுத்தத்தை அறிவித்தது. பின்னர், ஏப்ரல் 21-ம் தேதி, அது இன்னும் நீட்டிக்கப்பட்டது.

ஏப்ரல் 21-ம் தேதி முதல் இப்போது வரை இடையில், 'இதுவரை இல்லாத அளவிற்கு ஈரான் மீது கடுமையான தாக்குதல்' என்று ஒரு நாளும், அடுத்த நாள், 'பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது' என்றும் பல முறை ட்ரம்ப் மாறி மாறி கூறியிருக்கிறார்.

ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை யாருடன் நடக்கிறது... உண்மையில் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதா என்பது அவருக்கும் அவருடைய அதிகாரிகளுக்குமே வெளிச்சம்.

நிபந்தனைகள்

ஈரான் போர் நிறுத்தம் 'சில நிபந்தனைகள்' மீது கட்டமைக்கப்படுகிறது. சில நிபந்தனைகள் என்பது சொல்வதற்குப் பதிலாக, நிபந்தனைகள்'கள்' என்று கூறலாம்.

ஏன் எக்ஸ்ட்ரா 'கள்' என்றால், இந்தப் போர் நிறுத்தத்தில் ஈரானுக்கு சில நிபந்தனைகள் உள்ளன... அமெரிக்காவிற்கு சில நிபந்தனைகள் உள்ளன.

தங்கள் மீதும், லெபனான் மீதும் முற்றிலும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும்... அமெரிக்கா முடக்கியிருக்கும் தங்களது சொத்துகளை மீண்டும் ஈரானுக்கு தர வேண்டும்... நஷ்டத்தை ஈடு செய்ய ஹார்முஸ் நீர்சந்தியில் சுங்க வரி வசூலிக்க அனுமதி வேண்டும் - இது ஈரான் தரப்பு நிபந்தைகளில் சில.

யுரேனியம்
யுரேனியம்

செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் முழுமையாக ஒப்படைக்க வேண்டும்... ஹார்முஸ் நீர்சந்தியை முழுமையை திறக்க வேண்டும் - இவை அமெரிக்காவின் நிபந்தனைகளில் சில.

இந்த நிபந்தனைகளில் பிரச்னை என்னவென்றால், ஈரான் நிபந்தனைகளில் அமெரிக்காவிற்கு உடன்பாடில்லை... அமெரிக்காவின் நிபந்தனைகளில் ஈரானுக்கு உடன்பாடில்லை.

தாக்குப்பிடிக்கும் ஈரான்; தடுமாறும் ட்ரம்ப்

ஈரான் போர் ஈரானுக்கு தான் கடுமையான நெருக்கடியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஈரானின் உச்சத் தலைவர் அயோதுல்லா அலி காமேனி போரின் முதல் நாளிலேயே கொல்லப்பட்டாலும், ஈரானின் தலைமை ஆட்டம் காணவில்லை.

சில நாள்களிலேயே காமேனியின் மகன் மொஜ்தபா காமேனி உச்சத் தலைவர் ஆனார்.

அடுத்தடுத்து, முக்கிய தலைவர் வீழ்த்தப்பட்டாலும், ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ஸி போன்றவர்கள் ஈரானை வலுவாக பிரதிநிதித்துவப்படுத்தினர். இந்தப் போரையும் லாவகமாக கையாண்டு வந்தனர்... வருகின்றனர்.

மொஜ்தபா காமேனி
மொஜ்தபா காமேனி

அடுத்ததாக, அமெரிக்கா ஈரானை பில்லியன் டாலர் கணக்கிலான ஏவுகணைகளை வைத்து தாக்க, ஈரானோ வெறும் ஆயிரம் டாலர் கணக்கிலான டிரோன்களை வைத்து அமெரிக்கா, இஸ்ரேல், மத்திய கிழக்கு நாடுகளுக்கு வெற்றிகரமாக குடைச்சல் தந்தனர்.

இவ்வளவிற்கு பின்னும், ஈரான் தங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கும், தாங்கள் தொடக்கப்போகும் தாக்குதல்களுக்கும் தயாராகவே உள்ளன.

ஆனால், அமெரிக்காவின் நிலை அப்படி இல்லை. ட்ரம்பிற்கு பெரும் செக் ஒன்று காத்திருக்கிறது.

வருகிற நவம்பர் மாதம், அமெரிக்காவில் காங்கிரஸிற்கான (அமெரிக்க நாடாளுமன்றம்) 'மிட் டேர்ம் தேர்தல்' நடக்க உள்ளது.

மக்கள் அதிருப்தி

அதில் ட்ரம்பின் குடியரசுக் கட்சி பெரும்பாலான இடங்களைப் பிடித்தால் தான், அடுத்து ட்ரம்ப் கொண்டுவரும் சட்டங்கள் எளிதாக அமலாகும்.

அதற்காக ட்ரம்ப் வெற்றிப் பெறுவது மிக முக்கியம்.

ஈரான் போரினால் உலக அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்தும், கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது.

இதனால், ஈரான் போருக்கு முன், 3 டாலர்களுக்கு கீழ் அமெரிக்காவில் விற்பனை ஆகிவந்த பெட்ரோல், தற்போது 4.40 டாலர்கள் அளவில் விற்பனை ஆகிறது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

அமெரிக்க மக்களின் இந்த அதிருப்தி நிச்சயம் இந்தத் தேர்தலில் பிரதிபலிக்கும். இது சறுக்கலாக அமையும் என்கிற பயம் ட்ரம்பிற்கு நிச்சயம் இருக்கும்.

மேலும், இந்தப் போருக்கு அமெரிக்கா பல பில்லியன் டாலர்களை செலவு செய்து வருகிறது. இந்தப் போர் செலவுகள் குறித்த சரியான தகவல்களை தரவில்லை என்று பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் மீது அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸிற்கே அதிருப்தி உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தப் போருக்கு ஆகும் செலவுகள் அனைத்தும் தங்களது கஜானாவில் இருந்து செல்வதை மக்கள் விரும்பமாட்டார்கள் தான்.

அதனால், ட்ரம்ப் எப்படியாவது இந்தப் போரை முடித்துவிட வேண்டும் என்று குறியாக உள்ளார்.

நேற்று கூட, வெள்ளை மாளிகையில் ஈரான் போர் நிறுத்தம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது.

கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் நடந்த அந்தக் கூட்டத்தில், 'ஈரான் அணு ஆயுதத்தைத் தயாரிக்கக்கூடாது... அமெரிக்கா சொல்லும் நிபந்தனைகளுக்கு ஈரான் கட்டுப்பட்டால் மட்டும் தான் போர் நிறுத்தம்' என்கிற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த முடிவிற்கு ஈரான் ஒத்துவருமா என்பது தெரியாது. ஒருவேளை, ஒத்துக்கொள்ளாமல், இந்தப் போர் நீடித்தால், ட்ரம்பிற்கு வரும் நவம்பர் தேர்தலில் சவால் காத்திருக்கிறது.

ஈரான் போர் ஈரானுக்கு தலைவலியாக மாறாமல், ட்ரம்பிற்கு தலைவலியாக மாறியுள்ளது தான் யாரும் எதிர்பார்க்காத பிளாட் ட்விஸ்ட்.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: ஈரான் போர் முடிவுக்கு ஆசைப்படும் ட்ரம்ப்; மனசு வைக்காத ஈரான் - ட்ரம்பிற்கு 'தேர்தல் பயம்'? Rating: 5 Reviewed By: gg