'இதுவரையில் இல்லாத அளவிலான தாக்குதல்', 'கடுமையான தாக்குதல்' - இப்படி இரண்டு - மூன்று நாள்களுக்கு ஒருமுறை கூறி வருகிறார், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
அதன்படி, நேற்று மாலை (இந்திய நேரப்படி), ட்ரம்ப் ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்திருந்தார்.
அடுத்த சில மணிநேரங்களிலேயே பல்டி அடித்து, "ஈரான் இஸ்லாமியக் குடியரசுடனான பேச்சுவார்த்தைகள் அந்நாட்டின் மிக உயர்மட்டத் தலைமையின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, அவர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில், அமெரிக்க அதிபர் என்ற முறையில், இன்று மாலை ஈரான் மீது நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த வான்வழித் தாக்குதல்களையும் குண்டுவெடிப்புகளையும் நான் ரத்து செய்துள்ளேன்.

இந்தப் பேச்சுவார்த்தைகளும் அதன் இறுதி முடிவுகளும் - கொள்கை அளவிலும் மற்றும் மிக விரிவாகவும் - அமெரிக்கா, இஸ்ரேல், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் (UAE), கத்தார், துருக்கி, பாகிஸ்தான், பஹ்ரைன், குவைத், ஜோர்டான், எகிப்து மற்றும் பிற நாடுகள் உட்பட இதில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினராலும் ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இந்த உடன்படிக்கை முழுமையாக இறுதி செய்யப்படும் வரை, கடற்படை முற்றுகை முழு வீச்சில் தொடர்ந்து அமலில் இருக்கும். இந்த வரலாற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நேரம் மற்றும் இடம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்" என்று தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டார்.
ஆனால், ஈரான் தரப்போ, 'இன்னும் எந்த இறுதி முடிவும் எட்டப்படவில்லை' என்று மறுத்துள்ளது.
ஈரான் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 39 முறை 'உடன்படிக்கை இறுதிக்கட்டத்தில் இருக்கிறது' என்று ட்ரம்ப் கூறிவிட்டார் என்கிற தகவலை CNN வெளியிட்டிருக்கிறது.
ட்ரம்ப் இப்படி மாற்றி மாற்றி பேசுவதை, 'பூச்சாண்டி காட்டுகிறார்' என்றே கூறலாம்.

அமெரிக்காவில் அதிருப்தி
அமெரிக்காவை எடுத்துக்கொண்டால், ஈரான் போருக்காக பல பில்லியன் டாலர்களை செலவளித்து வருகிறது. 'நாம் ஏன் இவ்வளவு காசை ஈரான் போருக்கு செலவு செய்ய வேண்டும்?' என்கிற எண்ணம் அமெரிக்க மக்களுக்கு வலுவாக இருக்கிறது.
வருகிற நவம்பர் மாதம், அமெரிக்காவில் நாடாளுமன்றமான காங்கிரஸிற்கு 'மிட்-டேர்ம் தேர்தல்' நடக்க உள்ளது. ஈரான் போர் தொடர்ந்துகொண்டே இருந்தால், அந்தத் தேர்தலில் ட்ரம்ப் கட்சியான குடியரசிற்கு பெரும் பின்னடைவு ஏற்படும்.
மேலும், அவரது கட்சிக்குள்ளேயே, ஈரான் போருக்கு பல அதிருப்தி குரல்கள் உள்ளன.
இதனால், எப்படியாவது ஈரான் போரை முடித்துவிட வேண்டும் என்று நினைக்கிறார் ட்ரம்ப். ஆனால், அதற்கு அவருக்கு போதுமான ஒத்துழைப்பு இஸ்ரேல் மற்றும் ஈரானிடம் இருந்து கிடைக்கவில்லை.
போர் நிறுத்த பேச்சுவார்த்தை வலுவாகும் போது, இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தி ஈரானை சீண்டிவிடுகிறது. அதனால், ஈரான் மத்திய கிழக்கு நாடுகள் மீது தாக்குதல் நடத்துகிறது. இதனால், ஈரான் போர் மீண்டும் 'லூப்'க்குள் மாட்டி தொடங்குகிறது.
இதுதான் ட்ரம்பிற்கு பிரச்னையாக மாறுகிறது.

இஸ்ரேல் மனது வைத்தால்தான்
போரை நிறுத்த நினைக்கும் ட்ரம்ப், பிறகு ஏன், 'கடுமையான தாக்குதல்' என்று எச்சரிக்கிறார் என்று பார்த்தால், இதுவரை நடந்த சம்பவங்களை வைத்து பார்க்கும் போது, 'அவர் பயமுறுத்தி பார்க்கிறார்' என்று தெரிகிறது.
ஈரான் போர் நிறுத்தம் பேச்சு அடிப்படும் போதெல்லாம், 'கடுமையான தாக்குதல் என்று பயமுறுத்திகிறார். அடுத்து அந்த நாடு சமாதானம் பேசியது... இந்த நாடு சமாதானம் பேசியது, அதனால், தாக்குதல் இல்லை' என்று பேக் அடித்து பார்க்கிறார்.
ஆனால், ட்ரம்பின் எந்த அச்சுறுத்தலும் இதுவரையில் வேலைக்கு ஆகவில்லை.
அதனால், ஈரான் போரை பொறுத்தவரை, அமெரிக்கா, ஈரானை தாண்டி, இஸ்ரேல் தான் முக்கிய பங்காற்றுகிறது.
ஈரான் என்பது இஸ்ரேலின் 'வாழ்வாதார அச்சுறுத்தல்'. ஈரானில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று இஸ்ரேல் நினைக்கிறது. அதனால் தான், ஈரான் போர் நிறுத்தத்தை இஸ்ரேல் விரும்பவில்லை.
அதனால், இஸ்ரேல் மனது வைத்தால்தான் ஈரான் போர் நிறுத்தம் சாத்தியமில்லை.

0 comments:
Post a Comment