போனுக்கு வயர்லெஸ் சார்ஜிங் வந்துவிட்டது, வீட்டுக்கு இன்டர்நெட் வயர் இல்லாமல் வருகிறது, அப்போ கரண்ட் மட்டும் ஏன் ஒயரில் வர வேண்டும்? இந்தக் கேள்விக்கு பதிலாக, விண்வெளியில் இருந்து பூமிக்கு வயர்லெஸ் முறையில் மின்சாரத்தை அனுப்பும் ஒரு பிரமாண்டமான தொழில்நுட்பத்தை சீன விஞ்ஞானிகள் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளனர். சில கண்ணாடிகள், சோலார் பேனல்கள் மற்றும் ஒரு மைக்ரோவேவ் டிரான்ஸ்மிட்டரை வைத்து, காற்றிலேயே 100 மீட்டர் தூரத்திற்கு மின்சாரத்தை அனுப்பி அசத்தியிருக்கிறார்கள்.

சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள சியான் நகரில் இருக்கும் Xidian பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஃபேன் குவான்ஹெங் (Fan Guanheng) தலைமையிலான குழுதான் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. இது வெறும் 100 மீட்டர் சோதனைதானே என்று சாதாரணமாக நினைக்க வேண்டாம். இவர்களின் அல்டிமேட் கோல் என்ன தெரியுமா? சுமார் 36,000 கிலோமீட்டர் தொலைவில், அதாவது விண்வெளியில் சோலார் பேனல்களை நிறுவி, அங்கிருந்து பூமிக்கு மின்சாரத்தை பீம் செய்வதுதான்! கேட்கவே வேற லெவலில் இருக்கிறது அல்லவா?
சமீபத்தில், ஜூன் மாதம், கடுமையான வெயிலில் இந்த சோதனையை அவர்கள் நடத்தியிருக்கிறார்கள். 75 மீட்டர் உயரமுள்ள ஒரு கோபுரத்தில், 4.8 மீட்டர் அகலமுள்ள குவிந்த கண்ணாடியை (dome-shaped mirror) பொருத்தி, அது எந்த அளவுக்கு சூரிய ஒளியைக் குவிக்கிறது என்பதை அளவிட்டுள்ளனர். இந்த எதிர்காலத் தொழில்நுட்பத்தின் செயல்பாடு எப்படி என்று கேட்கிறீர்களா? பல்கலைக்கழகத்தின் மெக்கானோ-எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் துறையின் இணைப் பேராசிரியரான ஃபேன், இதை மூன்று சிம்பிள் ஸ்டெப்களாக விளக்குகிறார்.
முதலில், பிரமாண்டமான கண்ணாடிகள் சூரிய ஒளியை சோலார் பேனல்கள் மீது மிகத் துல்லியமாகக் குவித்து, மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. இரண்டாவதாக, இப்படி உருவான மின்சாரமானது, மைக்ரோவேவ் அலைகளாக மாற்றப்படுகிறது. மூன்றாவதாக, இந்த மைக்ரோவேவ் அலைகள், ரெக்டெனா (rectenna) எனப்படும் ஒரு சிறப்பு வகை ஆன்டெனாவுக்கு அனுப்பப்பட்டு, அங்கே மீண்டும் மின்சாரமாக மாற்றப்படுகிறது. இப்போதைக்கு 100 மீட்டர் தூரம் வரை இதை வெற்றிகரமாகச் சோதித்திருக்கிறார்கள். ஆனால், இந்த டெக்னாலஜியை மேம்படுத்தி, விண்வெளியில் இருந்து பூமிக்கு அனுப்பும் அளவுக்குக் கொண்டு செல்வதே இவர்களின் பிளான்.
இந்தத் திட்டம் முழுமையாக வெற்றிபெற்றால், மின்சார உற்பத்தி மற்றும் விநியோகத்தில் இது ஒரு மிகப்பெரிய புரட்சியாக இருக்கும். பகல், இரவு, தட்பவெப்பநிலை போன்ற எந்தப் தடையுமின்றி 24 மணி நேரமும் விண்வெளியில் இருந்து அதீத ஆற்றலைப் பெற முடியும்.
100 மீட்டர் தூரத்தில் தொடங்கிய இந்த முயற்சி, 36,000 கிலோமீட்டர் இலக்கை எட்டுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.!

0 comments:
Post a Comment