Latest News
Wednesday, June 17, 2026

FIFA : விசா மறுப்பு, இனப் பாகுபாடு, இன்னும் பல.! - ட்ரம்பின் அமெரிக்காவும் சர்ச்சைகளும்

கால்பந்தின் உலகளாவிய திருவிழா... எல்லைகளையும், அரசியலையும், கலாச்சாரப் பிரிவினைகளையும் கடந்து நிற்கும் ஒரு மாபெரும் கொண்டாட்டம். ஜூன் 11 அன்று அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் 2026 FIFA உலகக் கோப்பை போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கியபோது, கால்பந்தின் இந்த ஆன்மாதான் பறைசாற்றப்பட்டது.

ஆனால், ஆட்டம் தொடங்கிய சில நாட்களிலேயே, மைதானத்தில் அரங்கேறும் சிலிர்ப்பூட்டும் தருணங்களைவிட, அமெரிக்காவில் நிகழும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள்தான் உலகையே உலுக்கி வருகின்றன. விசா மறுப்புகள், நுழைவுத் தடைகள், பாதுகாப்பு என்ற பெயரில் நடத்தப்படும் தீவிர சோதனைகள் என, கொண்டாட்டமாகத் தொடங்கிய உலகக் கோப்பை, அமெரிக்காவில் சர்ச்சைகளின் கூடாரமாக மாறியுள்ளது.

குடிவரவு முடிவுகள் போட்டியை நடத்தும் நாடுகளின் இறையாண்மைக்கு உட்பட்டவை என FIFA மீண்டும் மீண்டும் கூறிவந்தாலும், புவிசார் அரசியல் பதற்றங்களும், அமெரிக்காவின் கடுமையான குடிவரவுக் கொள்கைகளும் இந்தப் போட்டியின் மீது கரிய நிழலைப் படரச் செய்துள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை. வீரர்கள், அதிகாரிகள், நிர்வாகிகள், ரசிகர்கள் என அனைவருமே இதன் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.

FIFA 2026 உலகக் கோப்பை
FIFA 2026 உலகக் கோப்பை

வரலாறு படைக்கவிருந்த நடுவருக்குத் தடை

உலகக் கோப்பையில் பணியாற்றும் முதல் சோமாலிய நடுவர் என்ற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தவிருந்தவர் உமர் அப்துல்காதிர் ஆர்டன். 2025-ஆம் ஆண்டின் ஆப்பிரிக்க கால்பந்து கூட்டமைப்பின் சிறந்த நடுவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், முறையான விசா மற்றும் அனைத்து ஆவணங்களுடன் மியாமி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

சோமாலிய நடுவர்
சோமாலிய நடுவர்

ஆனால், "பாதுகாப்பு ஆய்வில் கவலைக்குரிய அம்சங்கள்" இருப்பதாகக் கூறி, அமெரிக்க அதிகாரிகள் அவரை நாட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்துள்ளனர். தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய நபர்களுடன் அவருக்குத் தொடர்பு இருப்பதாகப் பின்னர் குற்றம் சாட்டப்பட்டது. இதனை ஆர்டன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

உலகக் கோப்பை கனவு சிதைக்கப்பட்டாலும், FIFA அவருக்குப் போட்டி சம்பளத்தை முழுமையாக வழங்கும் என அறிவித்துள்ளது. பின்னர், ஆகஸ்ட் மாதம் நடக்கும் UEFA சூப்பர் கோப்பை போட்டிக்கு நடுவராகப் பணியாற்ற UEFA அவரை நியமித்தது.

குறிவைக்கப்படும் அணிகள்?

சர்ச்சைகள் நடுவரோடு நிற்கவில்லை. செனகல் அணி வீரர்கள் சான் அன்டோனியோ விமான நிலையத்தில் வந்திறங்கியபோது, அவர்களின் உடமைகள் மிகக் கடுமையாகப் பரிசோதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதேபோல, உஸ்பெகிஸ்தான் வீரர்கள் தங்கியிருந்த பயிற்சி மைதானங்களில், மோப்ப நாய்கள் மற்றும் மெட்டல் டிடெக்டர்கள் கொண்டு கூடுதல் பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த நிகழ்வுகளின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி, "சில அணிகள் மட்டும் ஏன் பாரபட்சமாக நடத்தப்படுகின்றன?" என்ற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

கைது நடவடிக்கைகள், திருப்பி அனுப்பப்பட்ட புகைப்படக் கலைஞர்

சிகாகோவின் ஓ'ஹேர் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த ஈராக் அணியின் நட்சத்திர வீரர் அய்மன் ஹுசைன், சுமார் ஏழு மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதாக ஈராக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதைவிட மோசமாக, அணியின் புகைப்படக் கலைஞரான தலால் சலா, 10 மணி நேரத்திற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டதோடு, இறுதியில் அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதியும் மறுக்கப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டார்.

உலகக் கோப்பைக்காக வந்த பங்கேற்பாளர்களே இந்த அளவுக்கு நடத்தப்படுவது, அமெரிக்காவின் பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.

ரசிகர்களின் கண்ணீர் கதை

அமெரிக்காவின் பயணத் தடைகளால் பாதிக்கப்பட்ட ஈரான், ஹைட்டி, சோமாலியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த ரசிகர்கள், விசா பெறுவதில் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளனர். போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் மற்றும் தங்குமிடங்களுக்குப் பணம் செலுத்திய பிறகும், மொராக்கோ ரசிகர்களுக்கு விசா மறுக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன. ஸ்காட்லாந்து ரசிகர்கள் சிலரின் பயண அங்கீகாரங்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. "அனைவருக்குமான திருவிழா" என்று விளம்பரப்படுத்தப்பட்ட ஒரு போட்டி, குறிப்பிட்ட நாட்டு மக்களை விலக்கி வைப்பது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வி எழுகிறது.

பாலஸ்தீன கால்பந்து சங்கத்தின் தலைவர் ஜிப்ரில் ரஜூப், FIFA அங்கீகாரம் பெற்றிருந்தும், அவருக்கு அமெரிக்கா விசா மறுத்துள்ளது. இது கால்பந்து விளையாட்டின் முக்கிய அதிகாரிகளையே தடுத்து நிறுத்தும் அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை என ரஜூப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

2026 உலகக்கோப்பை
2026 உலகக்கோப்பை

களத்திற்கு வெளியேயும் தொடரும் குழப்பங்கள்

குடிவரவுப் பிரச்சினைகள் ஒருபுறம் என்றால், களத்திற்கு வெளியே வேறு விதமான குழப்பங்களும் அரங்கேறியுள்ளன. இங்கிலாந்து அணியின் பயிற்சி முகாமிலிருந்து கன்சாஸ் நகரத்திற்குப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்ட வாகனத்திலிருந்து சுமார் $18,000 மதிப்புள்ள உபகரணங்கள் திருடப்பட்டுள்ளன. இதில் கால்பந்து உடைமைகள், கையுறைகள் மற்றும் வீரர்களின் கையெழுத்திட்ட ஜெர்சிகள் அடங்கும். இந்தத் திருட்டு தொடர்பாக முஸ்தபா சாலிக், எர்பான் கமல் ஆகிய இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

டிரம்ப் நிர்வாகத்தின் பயணத் தடைகளால் பாதிக்கப்பட்ட ஈரான் அணி, மெக்சிகோவில் முகாமிட்டுள்ளது. போட்டி நாட்களில் மட்டும் அமெரிக்காவிற்குள் நுழைய அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஈரான் கால்பந்து சம்மேளனத்தின் நிர்வாகிகள், ஆலோசகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பலருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது. இது பாரபட்சமான நடவடிக்கை என ஈரான் கண்டித்துள்ளது.

டிக்கெட் விற்பனையில் பெரும் மோசடியா?

இவை அனைத்திற்கும் மேலாக, FIFA-வின் டிக்கெட் விற்பனை நடைமுறைகள் மீதும் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. FIFA-வின் டிக்கெட் விற்பனை செயல்முறை நுகர்வோரைத் தவறாக வழிநடத்தியதாகவும், செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி விலைகளை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்த்தியதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி மாகாணங்களின் அட்டர்னி ஜெனரல்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

"குழப்பம், போலித் தட்டுப்பாடு மற்றும் நம்பமுடியாத விலையேற்றம் ஆகியவற்றின் ஒரு கொடூரமான பாதை" என நியூ ஜெர்சி அட்டர்னி ஜெனரல் ஜெனிபர் டேவன்போர்ட் இந்த நடைமுறையை விவரித்துள்ளார். 104 போட்டிகளில் 90-க்கும் மேற்பட்ட போட்டிகளுக்கான டிக்கெட் விலைகள், 2025-ஆம் ஆண்டின் பிற்பகுதிக்கும் 2026-ஆம் ஆண்டின் முற்பகுதிக்கும் இடையில் சராசரியாக 34 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மெட்லைஃப் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கான சில பிரீமியம் டிக்கெட்டுகள் $32,970 (இந்திய ரூபாயில் 31,16,156 )வரை பட்டியலிடப்பட்டுள்ளது, சாதாரண ரசிகர்களிடமிருந்து உலகக் கோப்பை எவ்வளவு தூரம் விலகிச் செல்கிறது என்பதற்கு இதுவே சாட்சி.

கொண்டாட்டமாக இருக்க வேண்டிய உலகக் கோப்பை, பகமை இருக்கும் நாடுகளிடையே நட்பை வளர்க்கும் கருவியாக இருக்க வேண்டிய விளையாட்டுத் தொடர், இப்போது அச்சத்தையும், பாகுபாட்டையும், கோபத்தையும் விதைத்திருக்கிறது. விளையாட்டின் ஆன்மாவை அமெரிக்காவின் கடுமையான கொள்கைகளும், FIFA-வின் வர்த்தக நோக்கங்களும் சிதைத்துவிட்டனவா? இந்தக் கேள்விகளுக்கான பதிலை காலம் தான் சொல்ல வேண்டும்.!

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: FIFA : விசா மறுப்பு, இனப் பாகுபாடு, இன்னும் பல.! - ட்ரம்பின் அமெரிக்காவும் சர்ச்சைகளும் Rating: 5 Reviewed By: gg