Latest News
Friday, July 3, 2026

US: அமெரிக்கர்களின் ஓய்வுக்காலத்தை சிதைக்கும் கல்விக் கடன்; நெஞ்சை உலுக்கும் அவலநிலை!

அமெரிக்கா... உலக வல்லரசு, வாய்ப்புகளின் தேசம், அமெரிக்கக் கனவை நனவாக்க துடிக்கும் கோடிக்கணக்கானோரின் புகலிடம். ஆனால், அந்த தேசத்தின் முதுகெலும்பாக விளங்கிய ஒரு தலைமுறையின் ஓய்வுக்காலமே இன்று கேள்விக்குறியாகி நிற்கிறது என்றால், நம்ப முடிகிறதா? ஆம், சுமார் 30 லட்சம் வயோதிக அமெரிக்கர்களின் அமைதியான ஓய்வுக்காலத்தை, அவர்கள் பல தசாப்தங்களுக்கு முன் வாங்கிய கல்விக் கடன் எனும் பூதம் இன்று சிதைத்துக்கொண்டிருக்கிறது. தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக அவர்கள் பெற்ற கடன்கள், இன்று அவர்களின் நிகழ்காலத்தையே விழுங்கும் அவலநிலை அரங்கேறி வருகிறது.

கல்வித் தரவு முன்முயற்சி (Education Data Initiative) அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட ஆய்வு, இந்த நெருக்கடியின் கோர முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அதன்படி, 62 முதல் 80 வயதுக்குட்பட்ட 'பேபி பூமர்' தலைமுறையைச் (1946 -1964 காலக்கட்டத்தில் பிறந்தவர்களைக் குறிப்பிடும் சொல்) சேர்ந்த ஒருவர், சராசரியாக $42,780 (சுமார் 35 லட்சம் ரூபாய்) கூட்டாட்சி கல்விக் கடனை இன்னும் சுமந்து கொண்டிருக்கிறார். இந்த எண்கள் வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல; ஒவ்வொரு எண்ணுக்குப் பின்னாலும் ஒரு குடும்பத்தின் கண்ணீர்க் கதை மறைந்துள்ளது. அதற்கு உதாரணமாக நிற்கிறார், மைன் மாகாணத்தைச் சேர்ந்த 71 வயதான ராபர்ட் லீ.

கல்விக்கடன்

சுமார் 29 ஆண்டுகளுக்கு முன்பு, தன் பிள்ளைகளின் கல்லூரிப் படிப்புக்காக $66,000 கடன் வாங்கியிருக்கிறார் ராபர்ட் லீ. இத்தனை ஆண்டுகள் கழித்தும், அவரால் அந்தக் கடனை முழுதாக அடைக்க முடியவில்லை. இன்றும் அவர் மீது $51,000 கடன் பாக்கி இருக்கிறது. வால் ஸ்ட்ரீட் ஜர்னலிடம் அவர் பேசிய வார்த்தைகள், இந்த நெருக்கடியின் உச்சகட்ட வேதனையை உணர்த்துகின்றன. "'இட்ஸ் எ வொண்டர்ஃபுல் லைஃப்' திரைப்படத்தின் ஜிம்மி ஸ்டீவர்ட் போல நான் உணர்கிறேன். நான் உயிரோடு இருப்பதை விட, செத்தால்தான் எனக்கு அதிக மதிப்பு" என்று அவர் கண்ணீருடன் குறிப்பிடுகிறார். அவரின் இந்த வார்த்தைகள், ஒரு தனிநபரின் விரக்தியாக மட்டுமல்ல, ஒரு தலைமுறையின் கையறுநிலையாகவே ஒலிக்கிறது.

ஓய்வுக்காலத்தை நெருங்கும் வயதில் ஆயிரக்கணக்கான டாலர்கள் கடன் பாக்கி இருப்பது சாதாரண விஷயமல்ல. 2026-ம் ஆண்டில், சராசரி மாதாந்திர சோஷியல் செக்யூரிட்டி ஓய்வூதியத் தொகை $2,071 ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சராசரி கல்விக் கடன் மாதத் தவணை $390. அதாவது, ஒருவரின் ஓய்வூதியத்தில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கை கல்விக் கடன் விழுங்கிவிடுகிறது. தொழிலாளர் புள்ளியியல் கணக்குப்படி, இது போக சராசரி ஓய்வூதியதாரரிடம் மாத இறுதியில் மிஞ்சுவது வெறும் $336 மட்டுமே. இந்த சொற்ப தொகையை வைத்துக்கொண்டு அத்தியாவசியத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாத துயர நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள்.

இந்த நிலைக்கு தனிநபர்கள் மட்டும் காரணமல்ல; அமெரிக்காவின் சிக்கலான கல்விக் கடன் அமைப்பு முறையும் ஒரு முக்கிய காரணம். கடன் சேவை அமைப்புகளில் செய்யப்பட்ட மாற்றங்கள், குழப்பமான திருப்பிச் செலுத்தும் திட்டங்கள் மற்றும் கடன் தள்ளுபடித் திட்டங்களின் தோல்வி ஆகியவை இந்தச் சுமையை மேலும் அதிகரித்துள்ளன. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தகுதியான கொடுப்பனவுகளுக்குப் பிறகு மீதமுள்ள நிலுவைத் தொகையை தள்ளுபடி செய்யும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட கூட்டாட்சி கடன் தள்ளுபடித் திட்டங்கள், வெறும் கண்துடைப்பாகவே இருந்துள்ளன. 2025-ம் ஆண்டில், கடன் தள்ளுபடிக்காக விண்ணப்பித்தவர்களில் 93% பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக கல்வித் தரவு முன்முயற்சி கூறுகிறது. ஓய்வுக்காலத்தில் கடன் தள்ளுபடியாகும் என்று நம்பியிருந்தவர்களுக்கு இது பேரிடியாக இறங்கியுள்ளது.

சூழல் இன்னும் மோசமடையவே வாய்ப்புள்ளது. கல்வித் துறையின் 'சேவ்' (SAVE) திருப்பிச் செலுத்தும் திட்டம் நீக்கப்படுவது, கல்லூரிப் பட்டம் பெற்ற கடன் வாங்கியவர்களுக்கு மாதத் தவணையை $244 வரை அதிகரிக்கக்கூடும் என்று மாணவர் கடன் வாங்குவோர் பாதுகாப்பு மையத்தின் நிர்வாக இயக்குனர் மைக் பியர்ஸ் எச்சரித்துள்ளார். ஏற்கனவே, அமெரிக்காவின் 50 மாகாணங்களில் 41-ல், ஓய்வூதியதாரர்கள் தங்கள் சேமிப்பை விட அதிக காலம் வாழ்வார்கள் என்று கேர்ஸ்கவுட் நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது. இதனுடன், கல்விக் கடன் சுமையும் சேரும்போது, அவர்களின் நிலை என்னவாகும்?

Retirement

கல்விக் கடன் பிரச்னை ஒருபுறமிருக்க, அமெரிக்காவின் ஒட்டுமொத்த ஓய்வூதிய கட்டமைப்பே ஆட்டம் கண்டுள்ளது. சோஷியல் செக்யூரிட்டிக்கான முக்கிய நிதி ஆதாரம் 2032-ல் தீர்ந்துவிடும் என்றும், இது அனைத்து ஓய்வூதியதாரர்களின் மாதாந்திர கொடுப்பனவுகளையும் 22% வரை குறைக்கக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. சராசரியாக ஒருவருக்கு ஓய்வு பெற $823,800 தேவை என்று நம்பப்பட்டாலும், அவர்களிடம் சேமிப்பில் இருப்பது $300,000-க்கும் குறைவுதான். கல்விக்காக வாங்கிய கடன், ஒரு தலைமுறையின் கண்ணியமான ஓய்வுக்காலத்தையே காவு கேட்கும் என்றால், இது அமெரிக்கக் கனவா அல்லது சிதைந்துபோன வாக்குறுதியா என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுகிறது.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: US: அமெரிக்கர்களின் ஓய்வுக்காலத்தை சிதைக்கும் கல்விக் கடன்; நெஞ்சை உலுக்கும் அவலநிலை! Rating: 5 Reviewed By: gg