Latest News
Monday, August 10, 2026

ஈரான்: 'உச்ச தலைவர் மொஜ்தபா நலமாக இருக்கிறார்' - வீடியோ வெளியிட்ட தெஹ்ரான்

ஈரானில் இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து தாக்குதல் நடத்தியது. பிப்ரவரி 28 அன்று அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டு இராணுவத் தாக்குதல்களில் ஈரான் மத உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டார். அடுத்த சில நாட்களில் அயதுல்லாவின் மகன் மொஜ்தபா கமேனி உச்ச தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டார். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து மொஜ்தபாவின் நடமாட்டத்தை வெளியில் பார்க்க முடியவில்லை. அவர் தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலில் மொஜ்தபா கமெனி காயம் அடைந்து மிகவும் ரகசியமான இடத்தில் சிகிச்சை பெற்று வந்தார் என்ற தகவல்கள் வெளியானது. அடிக்கடி மொஜ்தபா விரைவில் இறந்துவிடுவார் என்றும், அவர் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இஸ்ரேல் தெரிவித்து வந்தது. அதனை உறுதிபடுத்தும் விதமாக சமீபத்தில் இஸ்ரேலிய ஊடகம் வெளியிட்ட செய்தியில், கமேனி மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் குறிப்பிட்டு இருந்தது.

ஏராளமான ஆதாரங்களை மேற்கோள் காட்டி தி ஜெருசலேம் போஸ்ட் வெளியிட்ட அறிக்கையில், ஈரானின் தலைமைக்குள் அவரது உடல்நிலை குறித்த கவலைகள் பரவி வருவதாக தெரிவித்தது.

கமெனி வீடியோ வெளியீடு

அவரது இறப்பு பற்றிய செய்தியை விரைவில் கேட்டால் நாங்கள் ஆச்சரியப்பட மாட்டோம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதோடு ஈரான், ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் ஒரு தொலைக்காட்சி பேட்டியில், கமேனியுடன் நேரடி தொடர்பு தற்போது மிகவும் கடினமானது என்று குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மொஜ்தபா கமெனியின் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. ஈரானிய அரசாங்கத்தின் இஸ்லாமிய மேம்பாட்டு அமைப்பால் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் ஒன்று மொஜ்தபா கமெனியின் வீடியோ ஒன்றை முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம், சவுதி செய்தி நிறுவனமான அல்-ஹதாத், இஸ்ரேலிய பாதுகாப்பு ஆதாரத்தை மேற்கோள் காட்டி, கமேனி ஈரானில் இல்லை என்று கூறியது. மேற்கத்திய மற்றும் உளவுத்துறை ஆதாரங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், அவர் கடுமையான காயங்களுக்கு ஆளாகியிருப்பதாக அடிக்கடி தெரிவித்திருந்தாலும், நேரடியாக பொது வெளியில் தோன்றாமல் அவர் அறிக்கைகள் மட்டுமே வெளியிட்டுக்கொண்டிருந்தார். இதனால் அவர் மீதான சந்தேகம் தொடர்ந்து இருந்து வருகிறது.

கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்கமாட்டோம்

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்கும் திட்டமிடவில்லை என்று ஈரான் அமெரிக்காவிடம் கூறியுள்ளதாக துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்தார். உலகின் மிக முக்கியமான எரிசக்தி பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களுக்கு போக்குவரத்து கட்டணத்தை விதிக்க விரும்பவில்லை என்று ஈரான் வாஷிங்டனுக்கு உறுதியளித்துள்ளதாக ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார். "நீர்வழிப் பாதையைப் பயன்படுத்தும் வணிகக் கப்பல் போக்குவரத்துக்கு கட்டணம் விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று ஈரான் எங்களிடம் தெரிவித்துள்ளது.

ஈரானில் உள்ள சிலர், நிச்சயமாக, கட்டணம் பற்றி பேசுகிறார்கள். ஈரானியர்கள் ஹார்முஸ் ஜலசந்திக்கு கட்டணம் செலுத்தும் திட்டம் இல்லை என்று எங்களிடம் கூறியுள்ளனர். ஆனால், உண்மையில் என்ன நடவடிக்கைகள் நடக்கின்றன என்பதை நாங்கள் பார்க்கப் போகிறோம். வளைகுடா நாடுகளும் பிராந்தியத்தின் வழியாக சாதாரண கப்பல் மற்றும் எரிசக்தி வர்த்தகத்தை தொடங்குவதை ஆதரிக்கின்றன. எவ்வாறாயினும், அமெரிக்கா ஈரானின் அறிக்கைகளை விட அதன் நடவடிக்கைகளால் தீர்மானிக்கப்படும்'' என்று அவர் கூறினார்

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: ஈரான்: 'உச்ச தலைவர் மொஜ்தபா நலமாக இருக்கிறார்' - வீடியோ வெளியிட்ட தெஹ்ரான் Rating: 5 Reviewed By: gg