Latest News
Monday, September 21, 2026

HYROX போட்டி: வெற்றியை கொண்டாட முடியாத வீராங்கனை; மைதானத்தை சுத்தம் செய்த நிர்வாகம் - என்ன நடந்தது?

2017-ஆம் ஆண்டு ஜெர்மனியில் தொடங்கப்பட்ட ‘ஹைராக்ஸ்’ (Hyrox) உடற்பயிற்சி போட்டி, கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு உலகளவில் வேகமாகப் பிரபலமடைந்து வருகிறது. இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் 1 கிலோமீட்டர் ஓட்டப்பந்தயத்தின் எட்டு கட்டங்களுக்கு இடையிடையே பனிச்சறுக்கு, துடுப்புப் படகு இயந்திரங்கள் (Rovers), ஸ்லெட்ஸ் (Sleds) மற்றும் மேட்கள் உள்ளிட்ட பல்வேறு உடற்பயிற்சி நிலைய உபகரணங்களை மாறி மாறிப் பயன்படுத்தித் தங்கள் திறனை வெளிப்படுத்த வேண்டும்.

Joanna Wietrzyk
Joanna Wietrzyk

சமீபத்தில் சினாவின் பெய்ஜிங்கில் நடைபெற்ற 'ஹைராக்ஸ் எலைட் 15' தொழில்முறைப் பந்தயத்தில், 24 வயதான ஆஸ்திரேலிய உலக சாதனையாளர் ஜோனா வியட்ரிசிக் (Joanna Wietrzyk) பங்கேற்றார். போட்டியின் போது அவருக்கு எதிர்பாராத விதமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு மலம் வெளியேறியது. எனினும், அதைச் சிறிதும் பொருட்படுத்தாத அவர் போட்டியை இடைநிறுத்தாமல் தொடர்ந்து பங்கேற்று, பெண்களுக்கான 'Pro' பிரிவில் 1 மணி நேரம் 1 நிமிடம் 23 வினாடிகள் என்ற இலக்கில் பந்தயத்தை நிறைவு செய்து முதலிடத்தைப் பிடித்தார்.

தனது உடல் அசுத்தமான நிலையிலும், அவர் தொடர்ச்சியாக ரோவர்ஸ், ஸ்லெட்ஸ் மற்றும் மேட்கள் உள்ளிட்ட பொது உபகரணங்களைப் பயன்படுத்திப் பந்தயத்தை நிறைவு செய்த காட்சிகள் மற்றும் அவரது காலில் மலம் படிந்திருந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியது . உடல்நலக் குறைவையும் மீறி அவர் காட்டிய விடாமுயற்சியைப் சிலர் பாராட்டினாலும், பொது உபகரணங்களைப் பயன்படுத்தியதால் ஏற்பட்ட சுகாதாரச் சிக்கல் தொடர்பாகப் பலரும் கேள்விகளை எழுப்பினர்.

Joanna Wietrzyk
Joanna Wietrzyk

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து வீராங்கனை ஜோனா வியட்ரிசிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான மன்னிப்புக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ``பந்தயம் தொடங்கியபோது நான் முழு ஆரோக்கியத்துடன் தான் இருந்தேன். ஆனால், அசாதாரணமான சூழல் ஏற்பட்டபோது போட்டியை நிறுத்தாமல் தொடர்ந்த எனது முடிவை எண்ணி வருந்துகிறேன். இதற்காகச் சீன மக்கள், சக போட்டியாளர்கள், பார்வையாளர்கள் மற்றும் அமைப்பாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். போட்டியை விட வாழ்க்கையில் முக்கியமான விஷயங்கள் உள்ளன என்பதையும், எப்போது விலக வேண்டும் என்பதையும் உணர்ந்து கொண்டேன். இதனால் எனது வெற்றிகளையும் புள்ளிகளையும் துறப்பதாக அறிவிக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, 'ஹைராக்ஸ்' சீனா நிர்வாகம் பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தனிமைப்படுத்தி கிருமி நீக்கம் செய்ததுடன், அசுத்தமான உபகரணங்கள் மற்றும் தரைவிரிப்புகளை அகற்றிப் புதியவற்றை மாற்றியது. மேலும், இனிவரும் போட்டிகளில் இரத்தம், வாந்தி, சிறுநீர் அல்லது மலம் ஆகியவற்றால் சுகாதாரச் சிக்கலோ உடல்நலப் பாதிப்போ ஏற்படும் சூழல் உருவானால், சம்பந்தப்பட்ட வீரர்களைப் போட்டியிலிருந்து உடனடியாக விலக்கும் அதிகாரத்தை இயக்குநர்களுக்கு வழங்கி புதிய விதியை அமல்படுத்தியுள்ளது. இவ்வாறு விலக்கப்படும் போட்டியாளர்கள் பந்தயத்தை நிறைவு செய்யாதவர்களாகவே (DNF) பதிவு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: HYROX போட்டி: வெற்றியை கொண்டாட முடியாத வீராங்கனை; மைதானத்தை சுத்தம் செய்த நிர்வாகம் - என்ன நடந்தது? Rating: 5 Reviewed By: gg