Latest News
Thursday, October 22, 2026

ரஷ்யாவிற்கு நெருக்கடி கொடுக்காததற்கு Stephen Hubbard காரணமா? ட்ரம்ப் குறிப்பிடும் 'இந்த' நபர் யார்?

ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரப் பேச்சுவார்த்தை தொடங்கி அனைத்து முயற்சிகளையும் எடுத்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். ஆனால், எதுவும் கைக்கொடுக்கவில்லை.

ட்ரம்ப் ட்விஸ்ட்

இதையடுத்து, ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் டாப் 5 நாடுகள் மீது 100 சதவிகித இரண்டாம் கட்ட வரி விதிக்கத் தயாரானார்.

ஆனால், இடையில் கடந்த அக்டோபர் 9-ம் தேதி, அவரே ரஷ்யாவிடமிருந்து டீசல் வாங்க ஒப்பந்தம் போட்டார். இதனால், ரஷ்யாவுடன் இதுவரை வணிகம் செய்து வந்த டாப் 5 நாடுகள், கடந்த 18-ம் தேதிக்குப் பின்னும் வணிகத்தைத் தொடர்ந்தால்தான், இரண்டாம் கட்ட வரி என ட்விஸ்ட் கொடுத்தார் ட்ரம்ப்.

இந்த நிலையில், ரஷ்யாவிற்கு ஏன் உடனடி நெருக்கடி தரப்படவில்லை என்று பல்வேறு கேள்விகள் ட்ரம்பிடம் எழுப்பப்பட்டன.

ட்ரம்ப் பதிவு
ட்ரம்ப் பதிவு

மன்னிப்பு கேட்டுவிட்டனர்

இதற்குப் பதில் அளிப்பது போல தனது ட்ரூத் சமூக வலைத்தளப் பக்கத்தில், “ரஷ்யா மீது உடனடியாகத் தடைகளை விதிக்க வேண்டும் என்றவர்கள் அதிபர் ட்ரம்பிடம் மன்னிப்பு தெரிவித்துள்ளனர்.

ஏனெனில், அமெரிக்காவிற்கு மிகவும் முக்கியமான ஸ்டீபன் ஹப்பார்ட் விடுதலை குறித்து ட்ரம்ப், ரஷ்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது முன்பு அவர்களுக்குத் தெரியாமல் இருந்தது.

ஒருவேளை, அப்போதே ரஷ்யா மீது தடை விதிக்கப்பட்டிருந்தால், இந்தச் சமரசப் பேச்சுவார்த்தைகள் நிச்சயமாக முற்றிலும் முடங்கிப்போயிருக்கும்” என்று பதிவிட்டுள்ளார் ட்ரம்ப்.

அதாவது, ட்ரம்ப் என்ன சொல்கிறார் என்றால், ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு நெருக்கடி கொடுத்திருந்தால், 2022-ம் ஆண்டு ரஷ்யாவில் சிறைபிடிக்கப்பட்ட ஸ்டீபன் ஹப்பார்ட்டின் விடுதலை நடந்திருக்காது என்று கூறுகிறார்.

ட்ரம்ப் குறிப்பிடும் ஸ்டீபன் ஹப்பார்ட் யார் என்று பார்க்கலாம்...

அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்கோஃப் எக்ஸ் தளப் பதிவின்படி, ஸ்டீபன் அமெரிக்கக் குடிமகன். ஓய்வுபெற்ற ஆசிரியர் மற்றும் அமெரிக்க விமானப்படையின் முன்னாள் வீரர் ஆவார்.

2014-ம் ஆண்டு முதல் இவர் தன்னுடைய உக்ரைனிய வாழ்க்கைத் துணையுடன் உக்ரைனின் இசியும் நகரத்தில் வாழ்ந்து வந்திருக்கிறார்.

2022-ம் ஆண்டு ரஷ்யா, உக்ரைனுக்கு எதிராகப் போர் தொடுத்தபோது, இவர் பணயக் கைதியாகப் பிடித்துச் செல்லப்பட்டிருக்கிறார்.

ரஷ்யா, அமெரிக்காவிற்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையில், தற்போது ஸ்டீபன் ஹப்பார்ட் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

ஸ்டீவ் விட்கோஃப் - ஸ்டீபன் ஹப்பார்ட்
ஸ்டீவ் விட்கோஃப் - ஸ்டீபன் ஹப்பார்ட்

ட்ரம்பிற்கு அமெரிக்கர்களே முக்கியம்

இவரின் விடுதலை குறித்து ஸ்டீவ் விட்கோஃப் தனது எக்ஸ் பக்கத்தில், “இன்று (அக்டோபர் 21) ஸ்டீபன் ஹப்பார்ட் விடுதலையாகி, தனது குடும்பத்தைச் சந்திக்க தாய்நாடு திரும்புகிறார்.

அதிபர் ட்ரம்ப் ஸ்டீபனை தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்ததுடன், தவறாக அடைக்கப்பட்டுள்ள அனைத்து அமெரிக்கர்களையும் தாய்நாட்டிற்கு அழைத்து வருவதில் தனக்கு இருக்கும் உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் தெரிவித்தார்.

அதிபர் ட்ரம்ப் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து விடுவிக்கப்பட்ட 110-க்கும் மேற்பட்ட அமெரிக்கர்களின் பட்டியலில் ராபர்ட் கில்மேன், க்ஸேனியா கரெலினா மற்றும் மார்க் ஃபோகல் ஆகியோருடன் தற்போது ஸ்டீபனும் இணைந்துள்ளார்.

இந்த விடுதலை எந்தவொரு கைதிகள் பரிமாற்றத்தின் கீழும் நடக்கவில்லை. அதிபர் ட்ரம்பின் கோரிக்கையை ஏற்று அவரை விடுவித்ததற்காக அதிபர் புதின் அவர்களுக்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதிபர் ட்ரம்ப் எப்போதுமே அமெரிக்கர்களைக் கைவிடமாட்டார். அவர்கள் அனைவரையும் மீண்டும் தாய்நாட்டிற்கு அழைத்து வரத் தொடர்ந்து போராடுவார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டீவ் விட்கோஃப் பதிவு
ஸ்டீவ் விட்கோஃப் பதிவு

இன்னொரு கோணம்

ரஷ்யாவுடன் டீசல் ஒப்பந்தம் மற்றும் ஸ்டீபன் ஹப்பார்ட்டின் விடுதலையை இன்னொரு கோணத்திலும் அணுகலாம்.

ரஷ்ய டீசல் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகக் கூட, ஸ்டீபன் ஹப்பார்ட்டின் விடுதலை இருக்கலாம்.

ஆனால், அமெரிக்காவில் வருகிற நவம்பர் 3-ம் தேதி, மிட் டேர்ம் தேர்தல் நடக்க உள்ளது.

அமெரிக்காவில் உயர்ந்துள்ள பெட்ரோல், டீசல் விலையால் அந்த நாட்டு மக்கள் ட்ரம்ப் அரசாங்கத்தின் மீது அதிருப்தியில் இருக்கின்றனர்.

இதை ஓரளவு சரிசெய்யவே, டீசல் வரத்தை அதிகரித்து, விலையைக் குறைக்க ட்ரம்ப் ரஷ்யாவுடன் டீசல் ஒப்பந்தம் மேற்கொண்டார் என்பதும், ஸ்டீபன் ஹப்பார்ட் விடுதலையும் ட்ரம்பிற்குத் தேர்தல் நேரத்தில் ஒரு ப்ளஸ் என்பதும் மறுப்பதற்கில்லை.

Next
This is the most recent post.
Older Post
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: ரஷ்யாவிற்கு நெருக்கடி கொடுக்காததற்கு Stephen Hubbard காரணமா? ட்ரம்ப் குறிப்பிடும் 'இந்த' நபர் யார்? Rating: 5 Reviewed By: gg