Latest News
Wednesday, June 15, 2016

அதிமுகவிற்கு தாவும் திமுக நிர்வாகிகள்.. பின்னணி என்ன?



கடந்த முறை ஆளுங்கட்சியாக இருந்த அதிமுகவே இந்த சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. திமுக வலிமையான எதிர்கட்சியாக சட்டசபைக்குள் நுழைந்திருந்தாலும் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு கிடைக்காத திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள், மகளிரணியினர் ஆளுங்கட்சியான அதிமுக பக்கம் தாவி வருகின்றனர்.  உள்ளாட்சித் தேர்தல் இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில் கட்சிமாறும் படலம் அரங்கேறியுள்ளது.


அதிமுகவில் இணைந்துள்ள மகளிரணி மாநிலத் துணைச் செயலாளர் விஜயகுமாரி. 2001ல் கருணாநிதி தொகுதியான திருவாரூரில் சேர்மனாக இருந்தவர். இதேபோல மாநில பிரச்சார அணியில் பொறுப்பு வகித்த சென்னை வடபழனி முருகன் கோவில் அறங்காவல் முன்னாள் உறுப்பினர் கண்மணி அதிமுகவில் இணைந்த பின்னணி சீட் கேட்டு கிடைக்காத கோபம்தானாம்.


திமுகவில் உரிய அங்கீகாரம் இல்லாத காரணத்தினாலேயே கட்சியை விட்டு அதிமுகவில் இணைந்ததாக கூறியுள்ளார் மாநில மகளிரணி துணைச் செயலாளர் விஜயகுமாரி. பெற்றோர், கணவர், குழந்தைகளைக் கூட கவனிக்காமல் கட்சிக்காக உழைத்த தங்களுக்கு எந்த மதிப்பும் இல்லை என்பதும் இவரின் குமுறலாகும்.


திமுகவைச் சேர்ந்த மாநில மகளிரணி துணைச் செயலாளர் ஜி.விஜயகுமாரி , திமுக மாநில பிரசாரக்குழுச் செயலாளர் கண்மணி ஆகியோர் சமீபத்தில் அதிமுகவில் இணைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றிய முன்னாள் திமுக செயலாளரும், போளூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டவருமான ஏழுமலை, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி முன்னாள் துணை அமைப்பாளரும், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருமான செந்தில்குமார் ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிமுகவில் இணைந்தனர்.


இதனால் அதிர்ச்சியடைந்த ஏழுமலை போளூர் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு 27 ஆயிரம் வாக்குகள் வாங்கித் தோற்றார். திமுக வேட்பாளரின் தோல்விக்கு காரணமான ஏழுமலையையும் அவரது மகனையும் கட்டம் கட்டியது திமுக. இதனால் ஏழுமலையையும் அவரது மகன் செந்தில்குமாரும் அதிமுக பக்கம் சாய்ந்து விட்டனர்.

பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்த கண்மணி, ஆயிரம் விளக்கு அல்லது மயிலாப்பூரில் சீட் வேண்டும் என்று கேட்டாராம். இவர் சென்றது கனிமொழி மூலமாக ஆனால், மயிலாப்பூர் தொகுதி காங்கிரஸ் வசம் போன போதே கட்சி தாவ நினைத்துள்ளார். ரிசல்ட் வரும் வரை காத்திருந்து விட்டு தற்போது அதிமுக பக்கம் சென்று விட்டார் என்கின்றனர்.


திமுகவில் பெண்களுக்கு மதிப்பு இல்லை என்று கூறும் கண்மணி, கட்சிக்காக 16 ஆண்டுகாலம் பாடுபட்டேன். மாநில பிரச்சார குழு செயலாளர் பதவி தரப்பட்டது. ஆனால் சென்னையில் கூட யாரும் என்னை பிரச்சாரத்திற்கு அழைக்கவில்லை என்கிறார் கண்மணி. வாரிசு அடிப்படையில்தான் சீட் கொடுக்கிறார்கள்.

ஆலடி அருணா மகள் பூங்கோதை, என்.வி.என் சோமு மகள் கனிமொழி, சற்குண பாண்டியன் உறவினர் சிம்லா முத்துச்சோழன் ஆகியோருக்கு வாரிசு அடிப்படையில் சீட் கொடுத்தனர். எங்களைப் போன்ற கட்சிக்கு உழைத்தவர்களுக்கு சீட் கிடைக்கவில்லை என்பது கண்மணியின் ஆதங்கமாக உள்ளது. நான் விலகியதை பொறுக்காதவர்கள் என் மீது ஃபேஸ்புக்கில் அவதூறு பரப்புகிறார்கள். இது தொடர்ந்தால் பல உண்மைகளை வெளியிடுவேன் என்று எச்சரிக்கிறார் கண்மணி.

பிற கட்சியினரை தங்கள் வசப்படுத்தி வருகிறது திமுக. ஆனால் தங்கள் கட்சியில் இருந்தே ஆளும் கட்சி பக்கம் செல்வது திமுகவினரிடையே கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது. கட்சி மாறியவர்களைப் பற்றி முகநூலில் சிலர் பதிவிட்டு அவதூறாக பேசி வருகின்றனர்.


அதே நேரத்தில் இந்த கட்சி மாறும் படலம் குறித்து கருத்து கூறியுள்ள அதிமுகவினர், எங்களைப் பொருத்தவரை நாங்கள் யாரையும் கட்சிக்கு இழுப்பதில்லை. ஆனால், கட்சியில் இணைய வருபவர்கள் எல்லோரையும் அம்மா அரவணைத்துக் கொள்வார். அதிமுகவில் யார் இணைந்தாலும் அவர்களின் எதிர்காலம் பாதுகாப்பானது

பெண்களுக்கு அம்மா தனி முக்கியத்துவம் கொடுப்பார். உள்ளாட்சியில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு என சொல்லியுள்ளார். அது அதிமுகவுக்கு பெரும்பலமாக இருக்கும். சமீபத்தில் கட்சியில் இணைந்த எஸ்.ஆர்.பாலசுப்ரமணியத்துக்கு கூட மாநிலங்களவை எம்.பி பதவி வழங்கினார். அதுபோல, ஒவ்வொருவருக்கும் என்ன செய்யவேண்டும் என அம்மா முடிவெடுப்பார் என்று கூறியுள்ளனர். என்ன பதவி கிடைக்கும் என்று கட்சி மாறியவர்களுக்கு தெரியாதா?



  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: அதிமுகவிற்கு தாவும் திமுக நிர்வாகிகள்.. பின்னணி என்ன? Rating: 5 Reviewed By: velmurugan