ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கர்நாடக மாநில லோக் ஆயுக்தாவின் (லஞ்ச ஒழிப்பு) முன்னாள் தலைவரும், மற்றும் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலுமான சந்தோஷ் ஹெக்டே பேசியதாவது: ஜெயலலிதா மற்றும் சல்மான்கான் வழக்குகளில் அவர்களுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டது. வழக்கத்துக்கு மாறாக அவர்களின் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதனால் நீதித்துறைக்கு கெட்ட பேர் ஏற்பட்டுள்ளது. இந்த இரு வழக்குகளில் மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகள், தீர்ப்புகள் மக்கள் மத்தியில் பணம் மற்றும் வசதி படைத்தவர்கள், அதிகாரமுள்ளவர்களுக்கு விரைவாக ஜாமீன் கிடைக்கும், தீர்ப்பும் கிடைக்கும் என்ற தவறான செய்தியை சொல்லியுள்ளன. வசதி படைத்தவர்களும், அதிகாரமிக்கவர்களும் சட்டத்தில் இருந்து தப்பி விடுகிறார்கள் என்ற பொதுவான கருத்தில் எனக்கு இப்போது உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் பல ஆண்டுகளுக்கு பிறகு, அவருக்கும் மற்றவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பின் மீதான மேல் முறையீட்டை கர்நாடக உயர் நீதிமன்றம் ஏற்கிறது. ஆனால் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டவுடன், ஜாமீன் கிடைத்ததுடன், வழக்கை மூன்று மாதத்துக்குள் விசாரிக்க உத்தரவிடப்படுகிறது. ஜாமீன் வழங்குவதை நான் எதிர்க்கவில்லை. எதற்காக மூன்று மாதத்தில் முடிக்க உத்தரவிட வேண்டும். நூற்றுக்கணக்கான வழக்குகளில், சிறையில் வாடும் பலருக்கு 4 முதல் 5 ஆண்டுகளுக்கு பிறகு கூட ஜாமீன் கிடைப்பதில்லை.
இதே போன்று சல்மான் வழக்கிலும், 14 ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. இவருக்கு உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்ட 1 மணி நேரத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்த இரு வழக்குகளிலும் இவர்களுக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதிகள் பதவி ஓய்வு பெறும் நிலையில் இருந்தவர்கள். பொதுவாக, தூக்கு தண்டனை வழக்குகளில், நாளையே தண்டனை நிறைவேற்றுப்பட இருந்தால், குற்றவாளியை காப்பாற்ற நீதிமன்றம் விரைந்து விசாரிக்கும். அல்லது அடுத்த நாள் தேர்வு இருந்தால், மாணவர்களுக்கு உதவ விரைவாக விசாரணை நடத்தும்.
ஆனால் ஜெயலலிதா மற்றும் சல்மான் கான் வழக்குகளில் ஏன் அவசரம் காட்டப்பட்டது?. வழக்கத்துக்கு மாறாக இந்த இரு வழக்குகளையும் அவசர, அவசரமாக விசாரணைக்கு ஏன் எடுத்து கொள்ளப்பட வேண்டும் என்ற கேள்வி பரவலாக கேட்கப்படுகிறது. இதுபோன்ற நிகழ்வுகளால் நீதித்துறைக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது. பணம் மற்றும் அதிகாரம் படைத்தவர்களால் நீதியை சாதகமாக்கி கொள்ள முடியும் என்ற தவறான செய்திக்கு வழி வகுத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
0 comments:
Post a Comment