Latest News
Tuesday, June 14, 2016

தே.மு.தி.க. வாக்கு வங்கி 2.4 சதவீதமாக சரிந்தது ஏன்? விஜயகாந்த் அவசர ஆலோசனை



நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி-த.மா.கா. அணியுடன் இணைந்து தே.மு.தி.க. தேர்தலை சந்தித்தது. தே.மு.தி.க. 104 தொகுதிகளில் போட்டியிட்டது. முதல்-அமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த் முன் நிறுத்தப்பட்டார்.

ஆனால் இந்த தேர்தலில் அந்த கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, உளுந்தூர்பேட்டை தொகுதியில் களம் கண்ட விஜயகாந்த் 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்டு, டெபாசிட்டை இழந்தார்.

தே.மு.தி.க. போட்டியிட்ட 104 தொகுதிகளிலும் சரிவை சந்தித்தது. 2005-ம் ஆண்டு தே.மு.தி.க. தொடங்கப்பட்டு, அதன்பிறகு 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை தனியாக சந்தித்த போது தே.மு.தி.க.வின் வாக்கு வங்கி 10 சதவீதமாக இருந்தது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணியில் இணைந்து தே.மு.தி.க. போட்டியிட்டபோது அக்கட்சி 5 சதவீத வாக்குகளை பெற்றது. இந்த முறை சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. வெறும் 2.4 சதவீத வாக்குகளே பெற்றது. இது தே.மு.தி.க. தலைமையை அதிர்ச்சி அடைய வைத்தது.


தே.மு.தி.க.வின் அசைக்க முடியாத வாக்கு வங்கியாக கருதப்பட்ட வட மாவட்ட சட்டசபை தொகுதிகளிலும் அக்கட்சி பெரிய சரிவையே கண்டது. அந்த தொகுதிகளில் எல்லாம் பா.ம.க. அதிகளவில் வாக்குகளை பெற்றது. கட்சியின் அடித்தளத்தையே கேள்வி குறியாக மாற்றியுள்ள வாக்கு சதவீதம் குறித்து விவாதிக்கவும், சட்டசபை தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணிக்கு மக்கள் மத்தியில் ஏன் வரவேற்பு கிடைக்காமல் போனது என்பது குறித்து விவாதிக்கவும் தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அவசர கூட்டம் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தில் இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் மாநில நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் அழைக்கப்படவில்லை. சென்னை மாவட்ட நிர்வாகிகள் மட்டும் கலந்து கொண்டனர். அவர்களிடம் விஜயகாந்த் மக்கள்நலக்கூட்டணி-த.மா.கா. அணியில் தொடருவதா? அல்லது அந்த அணியில் இருந்து வெளியேறுவதா? என்பது குறித்தும் தே.மு.தி.க.வின் வாக்கு வங்கி வெகுவாக 2.4 சதவீதம் அளவுக்கு குறைந்தது ஏன்? என்பது குறித்தும் கேட்டறிந்தார். மேலும் மாவட்ட செயலாளர்களின் செயல்பாடு உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா? என்பது குறித்தும் உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க.வின் நிலைப்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? என்று கருத்து கேட்டார்.

கட்சியை மீண்டும் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும், மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து தே.மு.தி.க. நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-


தே.மு.தி.க.வுக்கு இந்த தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டது உண்மை தான். அதற்காக நாங்கள் சோர்ந்து விட மாட்டோம். பதவியை தேடி வந்தவர்கள் எங்களை விட்டு பிரிந்து போய் விட்டதால் எங்கள் கட்சி தூய்மையாகி விட்டது. எங்கள் தலைவர் சொன்னது போல தே.மு.தி.க. பீனிக்ஸ் பறவை போல் மீண்டு வரும். உள்ளாட்சி தேர்தலில் அதை நாங்கள் நிரூபித்து காட்டுவோம். மக்கள் மத்தியில் தே.மு.தி.க.வுக்கு நிரந்தர இடம் உண்டு.

இந்த கூட்டத்தில் எங்கள் தலைவர் பேசும்போது, ‘உள்ளாட்சி தேர்தலில் நாம் கண்டிப்பாக தனித்து களம் காண்போம். நாளைக்கும் (இன்று) நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டியிருக்கிறேன். 11 நாட்கள் ஆலோசனை கூட்டம் நடக்கும். ஒவ்வொரு நாளும் மாவட்ட செயலாளர்களை தவிர 250 உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் பங்கேற்பார்கள். உங்களின் எண்ணங்களுக்கேற்ப தே.மு.தி.க. எதிர்கால நடவடிக்கைகள் அமையும். கட்சி வளர்ச்சிக்கு உங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை வழங்குங்கள்’ என்று கூறியிருக்கிறார். எனவே தே.மு.தி.க. மீண்டும் எழுச்சி பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நேற்று நடந்த கூட்டத்தில் விஜயகாந்த் சுமார் 3½ மணிநேரம் ஒரே இடத்தில் அமர்ந்து நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு அதை பதிவு செய்து கொண்டார். நிர்வாகிகள் கட்சி அலுவலகத்திற்கு வந்து செல்லும் போக்குவரத்து செலவு, தங்கும் இடம், உணவு வசதி ஆகியவற்றின் செலவை விஜயகாந்தே தனது சொந்த செலவில் ஏற்றுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவிக்கின்றனர்.

நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகே மக்கள் நலக்கூட்டணி-த.மா.கா. அணியில் இருந்து தே.மு.தி.க. விலகுகிறதா? என்பதும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து களம் காண்கிறதா? என்பதும் அதிகாரப்பூர்வமாக தெரியவரும்.

English summery : DMDK leader Vijayakanth on Monday started discussions with party district secretaries on measures to strengthen the party for local body elections.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: தே.மு.தி.க. வாக்கு வங்கி 2.4 சதவீதமாக சரிந்தது ஏன்? விஜயகாந்த் அவசர ஆலோசனை Rating: 5 Reviewed By: velmurugan