சட்டசபை தேர்தல் முடிந்து ஆட்சி அமைந்த பின்னரும் அதிமுகவில் மிகப்பெரிய அளவில் நிர்வாகிகள் மாற்றம் நடைபெற்றுள்ளது. கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு, மனுக்கள் பரிசீலனைக்குழுவை கலைத்து கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிக்கை வெளியிட்ட அன்றே பலரும் கலங்கிப் போய் விட்டனர். அதற்கான காரணத்தை விசாரித்தால் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளி வருகின்றன.
உள்ளாட்சி பதவிகளில் இம்முறை 50 சதவிகிதம் பெண்கள் இடம் பெற உள்ளனர். 12 மேயர்களில் 6 பேர் பெண்கள், 125 நகராட்சிகளில் 62 பேரும், 385 ஊராட்சி ஒன்றிய தலைவர்களில் 193 பேரும், 12,000 ஊராட்சி தலைவர்கள் 6000 பெண்களும் இடம் பெறுவார்கள். அதிமுக தயார் உள்ளாட்சி தேர்தலுக்கு அதிமுக தயாராகி வருகிறது. தேர்தலில் போட்டியிட தகுதியான பெண் பிரதிநிதிகளை தேர்வு செய்யும் பணியை ரகசியமாக தொடங்கிவிட்டதாம். விரைவில் அமைச்சர் தலைமையில் மாவட்ட செயலாளர் உள்ளடக்கிய குழு அமைக்கப்பட உள்ளது.
சட்டசபை தேர்தலில் சீட்டுக்காக பணம் கொடுத்தது போல ஒழுங்கு நடவடிக்கைக்குழுவில் இருந்தவர்கள் மூலமாக உள்ளாட்சித் தேர்தல் சீட்டுக்காக லட்சங்களை, கோடிகளை கொடுத்திருக்கிறார்களாம். தற்போது இந்த குழுக்கள் கலைக்கப்பட்டு விட்டதால் சீட்டுக்காக கொடுத்தவர்கள் கலங்கி போயுள்ளனர். பணத்தை சம்பந்தப்பட்டவரிடம் கேட்டதற்கு எந்த பதிலும் இல்லையாம். இதனையடுத்து ஒழுங்கு நடவடிக்கை குழுவில் இருந்தவர்கள் மீது புகார்கள் வரிசை கட்டி நிற்கிறதாம். இதுவரை குழுவில் இருந்துகொண்டு எங்களை நிற்கவைத்து விசாரித்தவர்களை இனி அம்மா விசாரிப்பார் என்கின்றனர் பணம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்கள்.
குழுக்கள் அமைத்தது ஏன்?
அதிமுக உறுப்பினர்கள், கட்சியில் உள்ளவர்கள் மீது அளிக்கப்படும் புகார்களின் மீது விசாரணை நடத்தி, ஒழுங்கு நடவடிக்கை தேவைப்படும் பட்சத்தில் அதுகுறித்து கட்சியின் பொதுச் செயலாளருக்கு பரிந்துரை செய்ய, நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட நான்கு அமைச்சர்களைக் கொண்ட ஒழுங்கு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டது. மனுக்கள் பரிசீலனை குழு அனைத்துப் பிரச்னைகளையும் நாமே பார்த்துக் கொண்டிருக்க முடியாது, அதற்கென தனித்தனியாக நம்பிக்கையான ஆட்களை போட்டு விட்டால் கட்சியில் பிரச்சினைகள் இல்லாமல் போய்க் கொண்டிருக்கும் என்று நினைத்தே ஒழுங்கு நடவடிக்கைக்குழு, மனுக்கள் பரிசீலனைக்குழு அமைக்கப்பட்டது.
உட்கட்சிப் பூசல்களோடு சொந்த விவகாரங்கள் குறித்த புகார்களையும் 'அதிமுக தலைமைக் கழகம், மனுக்கள் பரிசீலனைக் குழு' என்ற முகவரிக்கு கட்சியினர் அனுப்பி வந்தனர். அந்தக் குழுவினர் பரிசீலித்து முடித்தவுடன் அவைகள் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கு அனுப்பப்பட்டு வந்தன. அம்மாவின் ஆணைக்கிணங்க அம்மாவின் ஒப்புதலின் பேரில் இந்த மனு, மேல் நடவடிக்கைக்கு அம்மாவுக்குப் பணிந்து அனுப்பப்படுகிறது என்று மேலே ஒரு 'கவரிங்' கொடுத்து கார்டனுக்கு அனுப்புவார்கள். அடுத்த சில நாட்களில், அம்மாவின் ஆணைக்கிணங்க, இந்த மனுமீது மேல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று பிரச்சினைக்குரிய நபர் வகித்து வந்த கட்சிப் பொறுப்பு காலி செய்யப்பட்டுவிடும். புகார்கள்... நடவடிக்கைகள் கட்சியில் பதவிகள் இருந்தால்தான் சட்டசபைக்கோ உள்ளாட்சி மன்றத்துக்கோ போட்டியிட சீட் கேட்க முடியும். அந்த பதவியையே காலி செய்யும் இடத்தில் இருப்பது மனுக்கள் பரிசீலனைக் குழுவும், ஒழுங்கு நடவடிக்கைக் குழுவும்தான். எனவே மனுக்கள் பரிசீலனைக் குழு, ஒழுங்கு நடவடிக்கைக்குழுவில் பிடிக்க வேண்டியவர்களை பிடித்து பலர் நடவடிக்கையில் இருந்து தப்பி வந்துள்ளனர்.
அதிரடி கலைப்பு
பலர் மீது ஒருதலைப்பட்சமாக , எந்த விசாரணையும் இல்லாமல், கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதும் சில நேரங்களில் நடந்துள்ளது. இதனையடுத்து போராட்டங்கள், ஆர்பாட்டங்கள் எல்லாம் நடைபெற்றன. தேர்தல் வரையில் யாரையும் கை வைக்கக் கூடாது என்று பொறுமை காட்டிய ஜெயலலிதா, தேர்தல் முடிந்ததும் அந்த குழுக்களைக் கலைத்து விட்டார். இதனால் ஏராளமானர்கள் நிம்மதி பெருமூச்சு விடத் தொடங்கியுள்ளனர். பணம் கிடைக்குமா? ஒழுங்கு நடவடிக்கைக் குழுவும், மனுக்கள் பரிசீலனைக்குழுவும் கலைக்கப்பட்டது எல்லாம் சரிதான். உள்ளாட்சி தேர்தல் சீட்டுக்காக கொடுத்த பணத்தை திரும்ப பெறுவது எப்படி என்று குழு அமைத்து ஆலோசித்து வருகின்றனர் பணம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்கள்.
0 comments:
Post a Comment