Latest News
Wednesday, June 29, 2016

நடிகர் சந்தானத்திற்கு கோர்ட்டு நோட்டீஸ்



தில்லுக்கு துட்டு’ என்ற படத்துக்கு தடை கேட்ட வழக்கில் நடிகர் சந்தானம், இயக்குனர் ராம்பாலா ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை 14–வது உதவி சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ‘பேப்பர் பிளைட் பிக்சர்ஸ்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் முகமது மஸ்தான் சர்பூதீன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

எங்கள் நிறுவனத்தின் சார்பில், ‘ஆவி பறக்க ஒரு கதை’ என்ற தலைப்பில் திரைப்படம் எடுக்க முடிவு செய்தோம். இந்த படத்தின் இயக்குனராக ராம்பாலா என்பவரை நியமித்து, அவருக்கு ரூ.3 லட்சம் முன்தொகையும் வழங்கப்பட்டது. இந்த படத்தின் கதாநாயகனாக நடிகர் சிவா, கதாநாயகியாக நடிகை நந்திதா ஆகியோரை தேர்வு செய்து, அவர்களுக்கும் முன்தொகையாக பல லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது.

இந்த படத்தின் தலைப்பை தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலிலும் பதிவு செய்துள்ளேன். ஆனால், இந்த படத்தை எடுக்க இயக்குனர் ராம்பாலா காலதாமதம் செய்து வந்தார்.

இந்த நிலையில், நடிகர் சந்தானத்துடன் சேர்ந்து, ‘ஆவி பறக்க ஒரு கதை’ என்ற என்னுடைய படத்தின் கதையை ‘தில்லுக்கு துட்டு‘ என்ற தலைப்பில் ராம்பாலா படத்தை எடுத்துள்ளார். இந்த படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்த படத்தை விரைவில் வெளியிடவும் உள்ளனர். இதுகுறித்து நடிகர் சந்தானத்திடம் பேசியபோது, ‘உன்னால் என்ன செய்ய முடியுமோ? அதை செய்’ என்று கூறினார். என்னை மிரட்டவும் செய்தார். இந்த படம் வெளியானால் எனக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும். எனவே, இந்த ‘தில்லுக்கு துட்டு’ என்ற படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும். என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி அப்துல்மாலிக் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. கோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின்படி, இயக்குனர் ராம்பாலா மட்டும் ஆஜரானார். நடிகர் சந்தானம் ஆஜராகவில்லை. அவர் சார்பில் அவரது வக்கீல் ஆஜரானார்.

மனுதாரர் சார்பில் வக்கீல் பி.ஆனந்தன், எதிர்மனுதாரர்கள் சார்பில் வக்கீல் நந்தகுமார் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, ‘இந்த வழக்கு விசாரணையை ஜூலை 6–ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அன்று இருதரப்பினரும் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும். இருதரப்பு வாதங்களை கேட்டு, அன்றே இந்த வழக்கின் இடைக்கால மனு மீது தீர்ப்பு வழங்கப்படும்’ என்று உத்தரவிட்டுள்ளார்.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: நடிகர் சந்தானத்திற்கு கோர்ட்டு நோட்டீஸ் Rating: 5 Reviewed By: news7