சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியைச் சேர்ந்தவர் வினுப்பிரியா. கல்லூரி படிப்பை முடித்து விட்டு தனது வீட்டில் உள்ளார் . இந்நிலையில் வினுப்பிரியாவின் புகைப்படத்தை சிலர் ஆபாசமாக சித்தரித்து அதனை அவரது முகநூலில் பக்கத்திலேயே வெளியிட்டுள்ளனர்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த வினுப்பிரியா இதுகுறித்து அவரது பெற்றோரிடம் தெரிவித்தார். இது தொடர்பாக மகுடஞ்சாவடி காவல் நிலையம் மற்றும் சங்ககிரி டிஎஸ்பி அலுவலகத்தில் வினுப்பிரியாவின் பெற்றோர் கடந்த 23-ம் தேதி புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலிசார் விசாரணை செய்து வந்தனர். புகார் கொடுத்து ஒரு வாரம் கடந்த நிலையில், அந்த மர்ம நபர் மீண்டும் வினுப்பிரியா படத்தை மார்பிங் செய்து மற்றொரு ஆபாசப் படத்தை இன்று பதிவேற்றியுள்ளார்.
இதனால் மனமுடைந்த வினுப்பிரியா, இன்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த வாரம் புகார் கொடுத்த போதே போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தால் ஒரு உயிரை இழந்திருக்க தேவையில்லை என்று வினுப்பிரியாவின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குற்றவாளியை கைது செய்யும் வரை வினுப்பிரியாவின் உடலை வாங்கமாட்டோம் என அவரது பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.10 நாட்களுக்கு முன்பே வினுப்பிரியாவின் பேஸ்புக் பக்கத்தை முடக்க கூறினோம். ஆனால் அவர் இறந்த பிறகு பேஸ்புக் பக்கத்தை முடக்கி உள்ளனர் என அவரது தந்தை தெரிவித்தார்.
0 comments:
Post a Comment