Latest News
Friday, July 1, 2016

'சுவாதி கொலைக்கு சினிமாதான் காரணமா லட்சுமி ராமகிருஷ்ணன்?'


சுவாதி கொலைக்கு சினிமாவும் ஒரு காரணம் என்று பொத்தாம் பொதுவாக ஒரு கருத்தை சொல்லியுள்ளார் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன். சமூகத்தைத்தான் சினிமாக்கள் பிரதிபலிக்கின்றன. சினிமாக்களைத் தான் சமூகமும் பிரதிபலிக்கிறது. வேறெங்கும் இல்லாத வகையில் சினிமாக்களை அதிகமாக நம்


வாழ்க்கையோடு கனெக்ட் செய்துகொள்வது நாம் தான். ஒரே பாட்டில் ஹீரோ பால் வியாபாரமோ, புண்ணாக்கு வியாபாரமோ செய்து பணக்காரன் ஆவதையும், பாட்டு பாடி புகழின் உச்சிக்கு செல்வதையும் பார்த்து அதனையே தனக்கான லட்சியமாக கொண்ட எத்தனையோ நண்பர்களை நாம் கடந்திருக்கிறோம். ஆனால் இன்று வரும் படங்களும் படங்களில் வரும் கதாபாத்திரங்களும் நாம் வாழ்க்கையோடு கனெக்ட் செய்துகொள்வது போல வருவதில்லை. சூது கவ்வும், மங்காத்தா போன்ற படங்களில் கெட்டவனே ஜெயிக்கிறான். பெண்களை துச்சம் என கருதும் கதாபாத்திரங்கள் கொண்ட படங்களே வெற்றிபெறுகின்றன. நேற்று பார்த்த 'அப்பா' படத்தில் ஒரு காட்சி. பதின் வயதில் இருக்கும் மகனுக்கு பேருந்தில் ஒரு இளம்பெண்ணை கண்டாலே உதறல் எடுக்கிறது. இதயம் வேகமாக துடிக்கிறது. உடல் வியர்க்கிறது. அந்த பெண்ணே அழைத்தும் கூட பயந்து ஒதுங்கிப் போகிறான். தந்தையிடம் இதனை பகிர்ந்துகொள்கிறான். மறுநாள் தந்தையும் அவனுடனேயே பேருந்தில் பயணிக்கிறார். ஒரு நண்பனைப்போல அந்த பெண்ணிடம் பேசி தன் மகனுடன் அறிமுகப்படுத்துகிறார். வீட்டுக்கே அழைத்துவந்து தனியாகப் பேச சந்தர்ப்பம் தருகிறார். அந்த பெண் கிளம்பியவுடன் மகனிடம் ‘இப்ப எப்படிப்பா இருக்கு?' என்று கேட்கிறார். அவனும் ‘இப்ப நார்மல் ஆகிடுச்சுப்பா' என்று சொல்ல, 'பெண் என்பவள் யார்? அவளை எப்படி அணுக வேண்டும்' என்பதை அவனிடம் உணர்த்துகிறார் தந்தை. இதுதான் ஒரு நல்ல சினிமா கற்றுத் தரும் பாடம். 'ஆண்களுக்கு இயற்கை வலிமை கொடுத்திருப்பது பெண்களைப் பாதுகாக்கவே தவிர பலவந்தப்படுத்த அல்ல...' இது ஒருமுறை இயக்குநர் சசிக்குமார் சொன்னது. ஆனால் அதே சசிக்குமார்தான் திரையில் சுந்தரபாண்டியன் படத்தில் 'பெண்களை திட்டம் போட்டு கவிழ்ப்பது எப்படி?' என்று பாடமெடுத்தது மட்டுமல்லாமல், அந்தப் பெண்ணை ‘நீ ஒரு மாசம் ஃபாலோ பண்ணலாம்... நீ ஒரு மாசம் ஃபாலோ பண்ணலாம்...' என்று ஏலமும் விட்டார். இந்த சமூகத்தில் சுந்தரபாண்டியன் படத்துக்கு கிடைத்த வரவேற்பும் இப்போது அப்பா படத்துக்கு கிடைக்கப்போகிற வரவேற்பும் நன்றாகத் தெரிந்துவிடும். இதுதான் நம் சினிமாக்காரர்களின் உண்மையான முகம். வெளியில் பேசும்போது பக்குவமாக பேசுபவர்கள், சினிமா, வியாபாரம் என்று வரும்போது மாறி விடுகின்றனர். சமூகத்தை தான் பிரதிபலிக்கிறோம் என்று சொல்லிக் கொள்வார்கள். நமக்கு இப்போதைய தேவை அப்பா மாதிரியான படங்கள் தான். சுந்தரபாண்டியன் போன்ற படங்கள் அல்ல. அது சமூகத்தில் நடந்து கொண்டிருந்தாலும் சரி... அதை சினிமாவில் பிரதிபலிப்பதைத் தவிர்த்தாலே போதும். ஏனென்றால் சினிமாவில் காண்பிப்பது எல்லாம் சரியானவை, ஹீரோயிஸம் என்று நம்பும், அதைக் கடைபிடிக்கும் இளைஞர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். பொதுவெளியில் இதை பேசும் லட்சுமி ராமகிருஷ்ணன் தான் நடத்தும் நிகழ்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்துப் பேச முடியுமா? ஆனால் நடந்திருப்பது ஒரு படுகொலை. ஒரு பெண் கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார். நடந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இனி இதுபோல் நிகழா வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். அதை விடுத்து கொலையை சாதி, சினிமா என்று திசை திருப்பி விடுவது எந்த விதத்தில் நியாயம்? இவைகளை பற்றி பேச இதுவா நேரம்? - ராஜிவ் காந்தி

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: 'சுவாதி கொலைக்கு சினிமாதான் காரணமா லட்சுமி ராமகிருஷ்ணன்?' Rating: 5 Reviewed By: news7