சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர், ஹோட்டலில் ஒரு அறையை முன்பதிவு செய்திருக்கிறார். அதன்பின்னர் அதனை ரத்துசெய்ய விரும்பியிருக்கிறார், ஆனால் ஹோட்டல் நிர்வாகம் அதனை மறுத்துள்ளது. இதனால் கோபமடைந்த அந்த பெண், வேண்டுமென்றே அறையை வெள்ளத்தில் மூழ்கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் உள்ள ஒரு ஹோட்டலில், பெண் ஒருவர் இரவு தங்குவதற்காக 108 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,250) செலுத்தி அறை ஒன்றை முன்பதிவு செய்துள்ளார்.
ஆனால் அறைக்குள் நுழைந்த பிறகு அதை ரத்து செய்ய விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். அறை தரமற்றதாக இருப்பதாகவும் ஒலித்தடுப்பு வசதி இல்லாமல் இருப்பதாகவும் அவர் புகார் கூறியிருக்கிறார்.

ஹோட்டல் விதிகளின்படி, செக்-இன் செய்த பிறகு முன்பதிவை ரத்து செய்ய முடியாது என நிர்வாகம் தெரிவித்துள்ளது. சமாதான முயற்சியாக அவருக்கு வேறு ஒரு சிறந்த அறையைக் கட்டணமின்றித் தருவதாகவும் ஹோட்டல் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.
ஆனால் அந்தப் பெண் அதை ஏற்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஹோட்டல் ஊழியர்கள் காவல்துறைக்குத் தகவல் அளித்திருக்கின்றனர்.
இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற அந்தப் பெண், காவல்துறை வரும் வரை காத்திருந்த நேரத்தில், குளியலறையில் இருந்த அனைத்து குழாய்களையும் திறந்துவிட்டார்.
சுமார் 3 முதல் 4 மணி நேரம் வரை தண்ணீர் தொடர்ந்து ஓடியதால், அந்த அறை முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. மேலும் தண்ணீர் கசிந்து இரண்டாவது மாடியில் இருந்து கீழ் தளத்திற்கும் பரவியது.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் தனது தவறை ஒப்புக்கொண்டிருக்கிறார்.
அறையில் ஏற்பட்ட சேதங்கள், சுவர்கள் பழுதுபார்ப்பு ஆகியவற்றுக்காக ஹோட்டலுக்கு இழப்பீடு வழங்க அவர் சம்மதித்திருக்கிறார்.
இதையடுத்து, அறை வாடகையான 108 யுவானை விட சுமார் 280 மடங்கு அதிகமான, அதாவது 30,000 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3.5 லட்சம்) அபராதமாகச் செலுத்தியுள்ளார்.

0 comments:
Post a Comment