Latest News
Tuesday, November 11, 2025

அதிகரிக்கும் இந்தியா - அமெரிக்கா நெருக்கம்; ரஷ்யாவை டீலில் விடுகிறதா இந்தியா? - அது நல்லதா?

'இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவதை வெகுவாக குறைத்துவிட்டது... அதனால், நாமும் இந்தியா மீது விதித்திருக்கும் வரியை குறைக்க உள்ளோம்' என்று நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.

உண்மையிலேயே, இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவதை குறைத்துவிட்டதா என்று கேட்டால், 'அது உண்மை' தான்.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

குறைந்த ரஷ்ய எண்ணெய் இறக்குமதி

2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து 4,675 மில்லியன் டாலர்களுக்கு எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. இதுவே இந்த ஆண்டின் செப்டம்பர் மாதம், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து 3,332 மில்லியன் டாலர்களுக்கு தான் எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. இது 28.9 சதவிகித சரிவாகும்.

இன்னொரு பக்கம், இந்தியா அமெரிக்காவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை அதிகரித்துள்ளது. இது கடந்த 2021-ம் ஆண்டிற்கு பிறகு, கடந்த மாதம் அதிகரித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம், அமெரிக்காவில் இருந்து தினமும் 2.07 லட்சம் பேரல்கள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. கடந்த மாதம் (அக்டோபர்), தினமும் 5.93 லட்சம் பேரல்கள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றன. இது கிட்டத்தட்ட இரண்டு மடங்கை விட அதிகமாகும்.

வரி பிரச்னை

கடந்த ஏப்ரல் 2-ம் தேதி, ட்ரம்ப் முதன்முதலாக உலக நாடுகளுக்கு 'பரஸ்பர வரி'யை அறிவித்தார். இதில் பிற நாடுகளின் மீது எக்கச்சக்க வரி விதிக்கப்பட, பெரும்பாலான நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு சென்றன. அதில் இந்தியாவும் ஒன்று.

பேச்சுவார்த்தைக்கு சென்ற அனைத்து நாடுகளுடனும் ஓரளவு ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது. ஆனால், இந்தியா - அமெரிக்கா இடையே ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் இன்னமும் நடந்துகொ...ண்டே இருக்கிறது.

மோடி - புதின்
மோடி - புதின்

இந்தியா - ரஷ்யா

இதற்கிடையில், ஒப்பந்தங்கள் கையெழுத்தான நாடுகளுக்கு குறைந்த வரியும், கையெழுத்தாகாமல் இருக்கும் நாடுகளுக்கு ஒருவித வரியும் கடந்த ஆகஸ்ட் மாதம் விதிக்கப்பட்டது. அதில் இந்தியாவிற்கு 25 சதவிகித வரி விதிக்கப்பட்டது.

அடுத்ததாக, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் வாங்கி வருவதாகவும், அந்தப் பணம் ரஷ்யா உக்ரைன் மீது செய்யும் போருக்கு உதவுவதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டியது. இதனால், இந்தியா மீது கூடுதல் 25 சதவிகித வரி விதித்தது அமெரிக்கா. ஆக, இப்போது இந்திய பொருள்களுக்கு அமெரிக்கா 50 சதவிகித வரி வசூலித்து வருகிறது.

ரஷ்யாவை விட்டுக்கொடுக்காத இந்தியா

ஆரம்பத்தில், அமெரிக்கா என்ன தான் வரி போட்டாலும், ரஷ்யாவின் உறவை விட்டுக்கொடுப்பதாக இல்லை இந்தியா. இதற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் ரஷ்ய பயணம் நல்ல சாட்சி.

அதன் பின்னர், ஜெய்சங்கர் மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "இந்திய அரசு இந்திய மக்களின் நலனை தான் கருத்தில் கொள்ளும். அதை பொறுத்து தான், இந்தியா வர்த்தகம் செய்யும். அதனால், இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும்" என்று வெளிப்படையாகவே பேசினர்.

ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில், சீனாவில் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்தார் இந்திய பிரதமர் மோடி. இது ட்ரம்பிற்கான ஒரு சிக்னலாகவே பார்க்கப்பட்டது.

ட்ரம்ப் வரி விதித்தும்... வர்த்தக பேச்சுவார்த்தை ஒரு சுமுக தீர்வை நோக்கி எட்டாத போதும், மோடி - புதின் சந்திப்பு முக்கியமாக பார்க்கப்பட்டது. அதுவும் சீனாவில் என்பது இன்னும் சிறப்பு.

மோடி, ட்ரம்ப் - வெள்ளை மாளிகை
மோடி, ட்ரம்ப்

ட்ரம்ப் நெருக்கம்

இந்த சந்திப்பிற்கு பிறகு, ட்ரம்ப் மோடியுடனும், இந்தியா உடனும் சற்று நெருக்கத்தை அதிகப்படுத்தினார். மோடியை புகழ்ந்து தள்ளினார்.

அதன் பிறகு, இந்தியாவிலும், அமெரிக்காவிலும் அடுத்தடுத்து நடந்த வர்த்தக பேச்சுவார்த்தைகள் இப்போது வரை பாசிட்டிவாகவே சென்றுகொண்டிருக்கின்றன.

நேற்று ட்ரம்ப் விரைவில் இந்தியா - அமெரிக்கா இடையே ஒப்பந்தம் நடக்க உள்ளது என்று கூறியுள்ளார். அதுவும் இருதரப்பிற்குமே நன்மை பயக்கும் ஒப்பந்தம் என்றும் கூறியுள்ளார்.

இந்த நேரத்தில் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை குறைத்துள்ளது இந்தியா.

இந்தியா என்ன சொன்னது?

இதுவரை ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்குவோம் என்று ஸ்ட்ராங்காக கூறி வந்த இந்தியாவும், இப்போது பட்டும் படாமலும் பேசுகிறது.

கடந்த மாதம் ட்ரம்ப், 'நான் மோடியிடம் பேசினேன். இந்தியா மெல்ல மெல்ல ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தும்' என்று பேசினார்.

அதற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகமோ, "நிலையற்ற ஆற்றல் சூழலில், இந்திய நுகர்வோரின் நலனைப் பாதுகாப்பதே எங்களுடைய நிலையான முன்னுரிமையாக இருந்து வருகிறது. இதைப் பொறுத்து தான் எங்களுடைய இறக்குமதி கொள்கை இருக்கின்றன.

நிலையான எரிசக்தி விலையையும், பாதுகாப்பான விநியோகத்தையும் உறுதிப்படுத்துவது எங்களுடைய ஆற்றல் கொள்கையின் இரட்டை இலக்குகள்.

இந்தியா
இந்தியா

அமெரிக்காவைப் பொறுத்தவரை, நாங்கள் பல ஆண்டுகளாக எரிசக்தி கொள்முதல்களை விரிவுப்படுத்த முயன்று வருகிறோம். இது சில ஆண்டுகளாக சீராக முன்னேறி வருகிறது.

இப்போதைய அரசாங்கம் இந்தியா உடனான எரிசக்தி ஒத்துழைப்பை தீவிரப்படுத்துவதில் ஆர்வம் காட்டுகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன" என்று ட்ரம்ப் பேச்சிற்கு பின் பதிலளித்தது.

ஆனால், ட்ரம்ப் கூறுவதுபோல, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துமா என்பது குறித்த பதிலே அந்த அறிக்கையில் இடம்பெற்றிருக்கவில்லை.

கேள்வி

இப்போது, 'அமெரிக்காவிற்காக ரஷ்யாவை விட்டுத்தருகிறதா இந்தியா?' என்கிற கேள்வி எழுந்து வருகிறது. 'இது இந்தியாவிற்கு நன்மை பயக்குமா?' என்கிற சந்தேகமும் எழுகிறது.

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குகிறது என்று ட்ரம்ப் இந்தியா மீதான வரிக்கு ட்ரம்ப் காரணம் கூறினாலும், உண்மை வேறு என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தியதில் ட்ரம்ப் தனக்கு பங்கு உள்ளது என்று திரும்ப திரும்ப கூறுவதை இந்தியா இன்னமும் ஒப்புக்கொள்ளவில்லை. ட்ரம்பை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கவில்லை இந்தியா. பிரேசிலுக்கு மோடி சென்றிருந்தபோது, ட்ரம்ப் அழைத்தும் மோடி அமெரிக்கா செல்லவில்லை. - இவை தான் இந்தியா, மோடி மீதான ட்ரம்பின் கோபம் என்று கூறப்படுகிறது.

மோடி-ட்ரம்ப்
மோடி-ட்ரம்ப்

தனிப்பட்ட காரணங்களுக்காக ஒரு நாட்டையே சாடும், பாதிக்கும் ட்ரம்ப்பின் குணம் மற்றும் கொள்கையை கண்டிப்பாக கவனிக்க வேண்டும். ஓரிரு மாதத்திற்குள்ளேயே தனது பேச்சையும், கொள்கையையும் மாற்றும் ட்ரம்ப் எப்போது எப்படி மாறுவார் என்று கூற முடியாது.

கடந்த சில ஆண்டுகளாக, ஆசியாவில் சீனாவிற்கு போட்டியாக இந்தியாவிற்கு கவனமாக உதவி வந்தது அமெரிக்கா. ஆனால், பதவியேற்று ஒரு ஆண்டு கூட முடியாத சூழலில் இந்த உறவில் பெரிய சிக்கலை உருவாக்கி இருக்கிறார் ட்ரம்ப்.

இதையெல்லாம் பார்க்கும்போது, ட்ரம்பையும், அமெரிக்காவையும் இப்போதைக்கு இந்தியா நம்ப முடியும் என்று தோன்றவில்லை.

ரஷ்யா - நண்பன்

ரஷ்யாவை பொறுத்த வரை, இந்தியாவின் நீண்ட கால நண்பன். பாதுகாப்பு தொடங்கி தொழில்நுட்பம் வரை இரண்டு நாடுகளுக்கு நல்ல உறவு இருந்து வருகிறது.

வரும் டிசம்பர் மாதம், இந்தியாவிற்கு வருகிறார் புதின். அப்போது பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்தியா தனது பார்வையை அமெரிக்காவை நோக்கி திருப்புவது இந்தியா - ரஷ்யா உறவில் பின்னடைவை ஏற்படுத்தலாம்.

இந்தியாவிற்கு அமெரிக்கா, ரஷ்யா இரு நாடுகளின் உறவுமே முக்கியம் தான். அதனால், இந்திய அரசு ஒரு பக்கமே சாய்ந்துவிடாமல்... எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இரு நாடுகளையும் பேலன்ஸ் செய்வது மிக முக்கியம். இதை இந்தியா எப்படி செய்யப்போகிறதோ?

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: அதிகரிக்கும் இந்தியா - அமெரிக்கா நெருக்கம்; ரஷ்யாவை டீலில் விடுகிறதா இந்தியா? - அது நல்லதா? Rating: 5 Reviewed By: gg