Latest News
Friday, August 9, 2013

ஆகஸ்ட் 15ல் தலைவா ரிலீஸ் ?

பெரும் குழப்பங்களும் பேச்சுவார்த்தைகளும் நீடிக்கும் நிலையில், விஜய் நடித்துள்ள 'தலைவா' திரைப்படம், சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ல் தான் வெளியாவதற்கான சாத்தியம் உண்டு என சம்பந்தப்பட்ட நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது.

தமிழகம் மற்றும் புதுவையில் இன்று வெளியாக இருந்த தலைவா ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே புக் செய்தவர்களுக்கான கட்டணங்கள் திரும்பக் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் படம் எப்போது வெளியாகும் என்று விஜய் ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கி இருக்கிறார்கள்.

தலைவா இன்று தமிழ்நாட்டில் வெளியாகாத நிலையில், விஜய்யின் தீவிர ரசிகர்களோ கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு படம் பார்க்கச் சென்ற வண்ணம் உள்ளனர்.

இந்தப் பிரச்னை குறித்து அபிராமி ராமநாதன் தலைமையில் நடைபெற்ற தியேட்டர் உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டத்தில், திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளித்தால் மட்டுமே படத்தை திரையிடுவது என முடிவு செய்து விட்டார்கள்.

அதுமட்டுமன்றி, 'தலைவா' படத்திற்கு தணிக்கை குழு 'U' சான்றிதழ் அளித்து இருந்ததால் வரிவிலக்கு குழுவினருக்கு திரையிட்டு காட்டப்பட்டது. படத்தினைப் பார்த்த அதிகாரிகள் வரிவிலக்கு அளித்தாலும், விஜய் பேசும் சில வசனங்களுக்கு ஆட்சேபம் தெரிவித்து இருக்கிறார்கள். இந்நிலையில், இன்று காலையும் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

ஆனால், கொடநாட்டில் இருந்து முதலமைச்சர் ஜெயலலிதா திரும்பும்வரை 'தலைவா' வெளியாக வாய்ப்பில்லை என்கிறது மிகவும் நம்பத்தகுந்த வட்டாரம்.

ஆகஸ்ட் 12-ம் தேதி அன்று கொடநாட்டில் இருந்து சென்னை திரும்ப இருக்கும் ஜெயலலிதாவை சந்திக்க, 'தலைவா' படக்குழுவினர் அனுமதி கேட்டிருக்கிறார்கள். அந்த சந்திப்பு நடந்தவுடன் மட்டுமே படம் வெளியாகும் எனத் தெரிகிறது.

இந்நிலையில், 'தலைவா' உடன் தொடர்புடைய தியேட்டர் உரிமையாளர், விநியோகஸ்தர்கள் சிலரிடம் விசாரித்தபோது, "'தலைவா' படக்குழு - முதலமைச்சர் சந்திப்பு நடந்தவுடன், படத்தினை சுமூகமாக ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும். ஆனால், தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால், முதலமைச்சரை சந்திக்காமலேயே பேச்சுவார்த்தையில் சுமூகமாக முடிவுற்றாலும், மேலிடத்தில் இருந்து க்ரீன் சிக்னல் வந்தாலும் சுததிர தினத்துக்குள் படம் வெளியாக வாய்ப்பு இருக்கும்" என்று தெரிவித்தார்கள்.

முன்னதாக, தலைவா வெளியாகவிருந்த திரையரங்குகள் சிலவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பிரச்னை எழுந்தது. திரையரங்கு உரிமையாளர் போலீஸ் பாதுகாப்பு கேட்கின்றனர். ஆனால், காவல்துறை மற்றும் அரசு தரப்பில் இருந்து ரியாக்ஷன் இல்லாததால் தலைவா வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது. தமிழகத்தில் ஆளும் கட்சியினருக்கு ஆத்திரமூட்டும் வகையில், தலைவா படத்தில் ஒரு காட்சி இருப்பதாக நம்பப்படுவதே இந்த சர்ச்சைகளுக்கு அடித்தளம் என்றும் கூறப்படுகிறது.

'விஸ்வரூபம்' படத்திற்கு இதேபோன்று பிரச்னை ஏற்பட்டபோது, கமல் அனைத்து மீடியாக்களையும் அழைத்து என்ன நடக்கிறது என்பதை தெளிவாக எடுத்துக் கூறினார். அதே போன்று 'தலைவா' படத்திற்கு என்ன நடக்கிறது என்பதினை படக்குழு கூறாமல் இழுத்தடித்து வருவது ரசிகர்களை சற்றே கூடுதல் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: ஆகஸ்ட் 15ல் தலைவா ரிலீஸ் ? Rating: 5 Reviewed By: gg