Latest News
Tuesday, May 26, 2026

Abraham Accord: ஈரான் போர்; மத்திய கிழக்கிற்கு ட்ரம்ப் வைக்கும் செக்; 'நோ' சொன்ன பாக்., சவூதி பதில்?

"ஈரானுடன் ஒன்று அனைத்து தரப்பிற்கும் ஏற்ற சிறந்த ஒப்பந்தம் ஏற்படும்... இல்லையென்றால் ஒப்பந்தமே ஏற்படாது.

ஒருவேளை, ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால், முன்னெப்போதும் இல்லாத வகையில், மிகப்பெரிய தாக்குதல்கள் நடத்தப்படும்.

ஆனால், உண்மையில் அதை யாரும் விரும்பவில்லை" என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு 'ஹேப்பி நியூஸை' தனது ட்ரூத் பக்கத்தில் பதிவிட, அதே பதிவில் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் குறிப்பிட்டுள்ளார்...

ட்ரம்ப்
ட்ரம்ப்

"சவூதி அரேபிய, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பாகிஸ்தான், துருக்கி, எகிப்து, ஜோர்டான் மற்றும் பஹ்ரைன் 'ஆபிரகாம் உடன்படிக்கையில்' கையெழுத்திட வேண்டும்.

இந்த உடன்படிக்கையில் இணைய ஒன்றிரண்டு நாடுகளுக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம். அது ஏற்றுக்கொள்ளப்படும்.

ஆனால், மற்ற நாடுகள் இந்த உடன்படிக்கைக்குத் தயாராக இருக்க வேண்டும். இதில் ஈரானும் ஒரு பகுதியாக அமையும்" என்று தான் பட்டியலிட்ட நாடுகளுக்கு செக் வைத்துள்ளார் ட்ரம்ப்.

'சரி... இந்த நாடுகள் ஏன் ஆபிரகாம் உடன்படிக்கையில் இணைய வேண்டும்?' என்கிற கேள்வி நிச்சயம் எழும். அதற்கு அவரே பதில் தருகிறார்...

"ஆபிரகாம் உடன்படிக்கையானது இதில் ஏற்கனவே இணைந்துள்ள நாடுகளுக்கு (ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், மொராக்கோ, சூடான் மற்றும் கஜகஸ்தான்) இந்த இக்கட்டான போர் மற்றும் மோதல் காலத்திலும் கூட நிதி, பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியாக ஒரு மிகப்பெரிய வளர்ச்சியைத் தந்துள்ளது.

இதில் உள்ள தற்போதைய உறுப்பினர்கள் யாரும் இதிலிருந்து விலகவோ அல்லது ஒரு சிறிய இடைவெளி எடுக்கவோ கூட நினைத்தது இல்லை.

ஆபிரகாம் உடன்படிக்கை | 2020
ஆபிரகாம் உடன்படிக்கை | 2020

அதற்கு ஒரே காரணம், இந்த ஆபிரகாம் உடன்படிக்கை அவர்களுக்கு அவ்வளவு நன்மைகளைச் செய்துள்ளது. இது இன்னும் எல்லாருக்குமே மிகச்சிறந்த ஒன்றாக அமையும்.

5,000 ஆண்டுகளில் முதல்முறையாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு உண்மையான அதிகாரம், பலம் மற்றும் அமைதியைக் கொண்டு வரும். உலகிலேயே இதுவரை கையெழுத்தான எந்தவொரு ஆவணத்தையும் விட, இது மிக உயரிய மரியாதையைப் பெறும். இதன் முக்கியத்துவமும் அந்தஸ்தும் ஈடு இணையற்றதாக இருக்கும்!" என்று தெரிவித்திருக்கிறார்.

"இந்த உடன்படிக்கையில் முதலில் சவூதி அரேபியாவும், கத்தாரும் கையெழுத்திட வேண்டும். அவர்களுக்குப் பின் பிறர் கையெழுத்திட வேண்டும்" என்று வரிசையையும் ட்ரம்பே அறிவித்துவிட்டார்.

இப்படி ட்ரம்ப் வலியுறுத்தும் 'ஆபிரகாம் உடன்படிக்கை' பற்றி...

2020-ம் ஆண்டு, ட்ரம்பின் முதல் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது தான், 'ஆபிரகாம் உடன்படிக்கை'.

இந்த உடன்படிக்கையை முன்னெடுத்தது அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம்.

2020-ம் ஆண்டிற்கு முன்பு, பல மத்திய கிழக்கு நாடுகள் இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்கவில்லை. அவர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகத் தான் செயல்பட்டு வந்தார்கள்.

மத்திய கிழக்கு நாடுகள்
மத்திய கிழக்கு நாடுகள்

2020-ம் ஆண்டு ட்ரம்ப் கொண்டு வந்த ஆபிரகாம் உடன்படிக்கையில் இஸ்ரேல், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை கையெழுத்திட்டன. அதன் பின், மூன்று நாடுகளுக்குள் நட்பு, சுற்றுலா முதல் வணிகம் வரை அனைத்து உறவுகளும் சுமுகமானது.

நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்துவதே ஆபிரகாம் உடன்படிக்கையின் நோக்கம்.

இந்த உடன்படிக்கைக்குப் பின், இந்த நாடுகளின் தூதரகங்கள் பரஸ்பர நாடுகளில் நிறுவப்பட்டன. பரஸ்பரமாக விமானப் பாதைகள் நிறுவப்பட்டன.

இப்படி பல பல முன்னேற்றங்கள் நடந்தன.

ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மட்டுமல்ல... பின்னர், மொரோக்கோ, சூடான், கஜகஸ்தான் ஆகிய நாடுகளும் இணைந்தன.

இதில் பிற மத்திய கிழக்கு நாடுகளும் இணைய வேண்டும் என்று கருதுகிறார் ட்ரம்ப்.

போர் நிறுத்தத்திற்கு ஈரானின் மிக முக்கிய நிபந்தனை - ஈரான், லெபனான் மீதான பிராந்திய தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பதாகும்.

ஆபிரகாம் உடன்படிக்கையில் அனைத்து மத்திய கிழக்கு நாடுகளும் கையெழுத்திட்டு விட்டால், ஈரான் மீது அந்த நாடுகள் தாக்குதல்களைத் தொடுக்காது.

இதில் ட்ரம்ப் எப்படியோ ஈரானின் நிபந்தனையை செட்டில் செய்துவிடுவார்.

பாலஸ்தீனம்
பாலஸ்தீனம்

இன்னொரு பக்கம், சவூதி அரேபியாவை ஆபிரகாம் உடன்படிக்கையில் இணைக்க அமெரிக்கா முன்பிருந்தே முனைப்பாக உள்ளது. ஆனால், பாலஸ்தீனத்திற்கு சவுதி அரேபியாவின் ஆதரவு உள்ளதால், அது இந்த உடன்படிக்கையில் கையொப்பமிடவில்லை.

ஒருவேளை, இப்போது ஆபிரகாம் உடன்படிக்கையில் சவூதி அரேபியா இணைந்துவிட்டால், அவர்களது நீண்ட கால முயற்சி கைக்கூடிவிடும்.

ட்ரம்ப் பட்டியலிட்டிருக்கும் எந்த நாடும் இதுவரை எதுவும் கூறாத நிலையில், பாகிஸ்தான் மட்டும் ட்ரம்பின் அறிவிப்பை ஓபனாக மறுத்துவிட்டது. இதற்கும் பாலஸ்தீன ஆதரவு தான் மிக முக்கிய காரணம்.

மத்திய கிழக்கு நாடுகள் பல பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவே உள்ளது. பாலஸ்தீனத்திற்கு 'நாடு' என்கிற அந்தஸ்து வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கிறார்கள்.

இந்த நேரத்தில், இவர்கள் ஆபிரகாம் உடன்படிக்கையில் இணைந்தால், அவர்கள் நீண்ட காலமாக கேட்டுக்கொண்டிருக்கும் பாலஸ்தீன நாட்டுரிமை கிடைக்காமல் போகலாம்.

ஆபிரகாம் உடன்படிக்கையில் கையெழுத்திட்டுவிட்டு, இஸ்ரேலை நாடாக அங்கீகரித்தப் பின், பாலஸ்தீனத்திற்கு நாட்டுரிமை என்று கேட்க முடியாது.

அதனால், மத்திய கிழக்கு நாடுகள் இதற்கு 'ஓகே' சொல்லுமா என்பது பெரிய கேள்விக்குறி. பொறுத்திருந்து பார்ப்போம்!

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: Abraham Accord: ஈரான் போர்; மத்திய கிழக்கிற்கு ட்ரம்ப் வைக்கும் செக்; 'நோ' சொன்ன பாக்., சவூதி பதில்? Rating: 5 Reviewed By: gg