மேற்கு ஆசியாவில் நிலவும் போர் சூழலால் பாகிஸ்தான் கடும் எரிபொருள் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.
இதனால் பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானின் பெட்ரோலியத் துறை அமைச்சர் அலி பெர்வேஸ் மாலிக் பாகிஸ்தானிடம் ஒரு நாள் கூட அவசரக் காலத் தேவைகளுக்கான கையிருப்பு இல்லை என்றும் இந்தியா நினைத்தால் ஒரே கையெழுத்தில் இந்தியாவின் நிலைமையைச் சமாளிக்க முடியும் என்றும் நேர்காணல் ஒன்றில் ஆதங்கப்பட்டிருக்கிறார்.

எரிபொருள் தட்டுபாடு குறித்து பேசியிருக்கும் அவர், "எரிபொருள் வளத்தில் பாகிஸ்தான் நிலைமை மோசமாகவே இருக்கிறது. பாகிஸ்தானிடம் தற்போது அவசர கால தேவைக்கான எரிபொருள் இருப்பு ஒரு நாள் கூட கிடையாது என்பதே உண்மை.
எங்களிடம் இருப்பது வணிக ரீதியான இருப்பு மட்டுமே. கச்சா எண்ணெய் 5 முதல் 7 நாட்களுக்கு மட்டுமே வரும். எண்ணெய் நிறுவனங்களிடம் உள்ள சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் அதிகபட்சம் 20 முதல் 21 நாட்களுக்கு மட்டுமே இருக்கும். நாங்கள் இந்தியாவைப் போன்றவர்கள் அல்ல.
இந்தியாவோ 70 நாட்களுக்குத் தேவையான எரிபொருளைச் சேமித்து வைத்துள்ளது. அங்கு ஒரு நெருக்கடி ஏற்பட்டால், ஒரு கையெழுத்தில் அந்த இருப்பை வெளியிட்டு அவர்களால் நிலைமையைச் சீர் செய்ய முடியும்.
நீண்ட காலத்துக்கு எரிபொருள் தேவையைச் சமாளிக்க இயலும். ஆனால், பாகிஸ்தான் எளிதில் நிலைகுலையும் நிலையில் உள்ளது. புதிய சேமிப்புக் கிடங்குகளை உருவாக்க அதிக நிதி தேவைப்படுவதால், தற்போதைய பொருளாதாரச் சூழலில் பாகிஸ்தானால் அத்தகைய திட்டங்களைச் செயல்படுத்த முடியவில்லை.

இந்திய அரசு தனது நாட்டின் எரிசக்தி பாதுகாப்பிற்காக நிலத்தடியில் மிகப்பெரிய சேமிப்புக் கிடங்குகளை அமைத்துள்ளது. அவசர காலங்களில் அல்லது போர்ச் சூழலில் இதைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால், பாகிஸ்தானிடம் அத்தகைய பிரத்யேக அரசு சேமிப்பு வசதிகள் எதுவும் இல்லை" என்று ஆதங்கப்பட்டிருக்கிறார்.

0 comments:
Post a Comment