புத்தர் கோவில்கள் என்றாலே தியானம், அமைதி, ஆன்மீகம் ஆகியவைதான் நினைவுக்கு வரும். ஆனால் தென் கொரியாவில் உள்ள நக்சான்சா புத்தர் கோவிலில் இளைஞர்கள் தங்களது வாழ்க்கை துணையைத் தேடுவதற்காக டேட்டிங் ரிட்ரீட் எனும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டிருப்பது பல நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மக்கள் தொகை வளர்ச்சி குறைந்த நாடுகளில் ஒன்றான தென் கொரியாவில், திருமணங்களின் எண்ணிக்கை குறைந்து வருவது மற்றும் குழந்தை பெற்றுக்கொள்வதை பலர் தள்ளிப்போடுவதும் அல்லது தவிர்ப்பதும் எதிர்காலத்தில் மக்கள் தொகை சரிவு, தொழிலாளர் பற்றாக்குறை, முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற சவால்கள் ஏற்படும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கான புதிய அணுகுமுறையாகவே இந்த ‘டேட்டிங் ரிட்ரீட்’ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் திருமணமாகாத இளைஞர்கள் ஒன்றாக தங்கி தியானம், யோகா,தேநீர் உரையாடல், கண்களை மூடி கொண்டு நம்பிக்கையை வளர்க்கும் நடைபயிற்சி மற்றும் தனிப்பட்ட சந்திப்புகள் போன்ற பல செயல்பாடுகளில் பங்கேற்றனர்.
சோஷியல் மீடியாவில் தொடங்கும் அறிமுகங்களை விட, நேருக்கு நேர் சந்தித்து ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் வாய்ப்பையும் இந்த முகாம் உருவாக்குகிறது.
இந்த ஆண்டில் நடைபெற்ற முகாமில் 20 நபர்கள் பங்கேற்கலாம் என்ற நிலையில், 4,225 பேர் விண்ணப்பித்திருப்பது, இதற்கு கிடைத்திருக்கும் பெரும் வரவேற்பைக் காட்டுகிறது. தனிநபர்களை இணைக்கும் முயற்சியாக மட்டுமல்லாமல், மக்கள் தொகை சரிவு போன்ற சமூகச் பிரச்சனைக்கு மாற்று அணுகுமுறையாகவும் இந்த முகாம் அமைந்துள்ளது என்கிறார்கள்.!

0 comments:
Post a Comment