ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையேதான் போர். ஆனால், இந்த மூன்று நாடுகளைத் தாண்டி, மொத்த உலக நாடுகளும் பாதித்துள்ளது.
இதற்கு காரணம், 'ஹார்முஸ் நீர்ச்சந்தி'.
இந்தப் போர் தொடங்கியதில் இருந்தே ஹார்முஸ் நீர்ச்சந்தியை வைத்து தான் ஈரானும், அமெரிக்காவும் சதுரங்க வேட்டையை ஆடி வருகின்றன.
ஈரான் போர் தொடங்கிய முதல் நாளே, அந்த நாட்டின் உச்சத் தலைவர் அயோதுல்லா அலி காமேனியை காவு வாங்கின அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் குண்டுகள்.
இதற்கு எதிர்வினையாற்ற ஈரான் கையிலெடுத்த ஆயுதம் 'ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடல்'.

தாக்குதல்
இதனால், பல்லாயிரக்கணக்கான கப்பல்கள் ஹார்முஸ் நீர்ச்சந்தியை தாண்ட முடியாமல் 'லாக்' ஆகி நின்றுவிட்டன. உலகின் 20 சதவிகித பெட்ரோலிய தேவை இந்தப் பாதை வழியாக தான் தினமும் பயணித்து கொண்டிருந்தன.
அது தடைப்படும் போது, உலகம் எப்படி தள்ளாடும் என்பது மார்ச், ஏப்ரல் மாதங்களில் அனைவருக்குமே தெரிந்தது.
ஈரானுக்கு தெரியாமல் ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியாக கப்பல்கள் கடக்க முயன்ற போது, அந்தக் கப்பல்கள் தாக்குதல் நடத்தப்பட்டு தகர்க்கப்பட்டன. இதில் பல மனிதர்களும் உயிரிழந்தனர்.
மூன்று நாள்களுக்குக்கூட
பின், போர் தாக்குதல் செலவுகளை ஈடு செய்ய, ஹார்முஸ் வழியாக பயணிக்கும் கப்பல்கள் கப்பம் (சுங்க வரி) கட்ட வேண்டும் என்று ஈரான் கூறியது. அந்தப் பணம் ஓமனுக்கும் பகிர்ந்தளிக்கப்படும் என்று ஓமனை கூட்டு சேர்த்தது.
காரணம், ஓமனின் எல்லையிலும் ஹார்முஸ் விரிகிறது.
இதன் பின், 'நாங்கள் மட்டும் சும்மாவா?' என்று அமெரிக்கா, "ஹார்முஸ் வழியாக கப்பல்கள் தாராளமாக கடக்கலாம். அதற்கு நாங்கள் உதவுகிறோம்.
ஒருவேளை ஹார்முஸ் வழியாக செல்ல சுங்க வரி வசூலிக்க வேண்டுமென்றால், அது அமெரிக்காவால் மட்டுமே முடியும்" என்று எச்சரித்தது.
இந்தக் காட்சிகள் மீண்டும் மீண்டும் அரங்கேறி கொண்டிருக்க, கடந்த மாதம், அமெரிக்கா, ஈரான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனையடுத்து ஹார்முஸ் நீர்ச்சந்தி திறக்கப்பட்டது.

இது மூன்று நாள்களுக்குக்கூட நீடிக்கவில்லை. லெபனான் மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல். அதனால், மீண்டும் ஹார்முஸை மூடிவிட்டது ஈரான்.
இந்த மூடலை மீறி ஹார்முஸை கடக்க முயன்ற கப்பல்களை தாக்குதல் நடத்தி வீழ்த்தியது ஈரான்.
அமெரிக்கா சும்மா இருக்குமா என்ன... அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 'ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் வணிக கப்பல்களுக்கு 20 சதவிகித பாதுகாப்புக் கட்டணம் விதிக்கப்படும்' என்று அறிவித்தார். இது இடிக்கு மேல் இடியாக இறங்கியது.
ஈரானின் பலம்
இப்போது அந்தப் பாதுகாப்புக் கட்டணத்தை 'கேன்சல்' செய்துவிட்டார் ட்ரம்ப்.
ஆனால், ஈரானும், அமெரிக்காவும் மாறி மாறி விளையாட ஹார்முஸ் நீர்ச்சந்தி ஒன்றும் அவர்களுடைய சொத்து அல்ல. அது ஒரு பொது சொத்து.
ஹார்முஸ் நீர்ச்சந்தி இயற்கையாக உருவான ஒன்று. இதை கட்ட எந்த நாடும் பணம் போடவில்லை. அதனால், ஹார்முஸ் வழியாக பயணிக்க எந்த நாடும் கட்டணம் வசூலிக்க முடியாது.
பிறகு ஏன் ஹார்முஸை வைத்து ஈரானும், அமெரிக்காவும் விளையாடுகின்றன என்பதைப்பார்ப்போம்.

ஈரான் எல்லையில் விரிந்திருக்கிறது ஹார்முஸ். அதனால், பல ஆண்டுகளாக, ஹார்முஸை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது ஈரான். இதனால், போர் தொடங்கியதும், ஈரான் ஈசியாக ஹார்முஸை தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துவிட்டது.
ஹார்முஸை நோக்கி ஈரான் போரை நகர்த்தி சென்றதால்தான், அது உலக நாடுகளுக்கு அழுத்தமாக மாறியது. இல்லையென்றால், இந்தப் போர் இவ்வளவு பெரியதாக மாறி இருக்காது.
காரணம், ஈரானிடம் சீனாவை தவிர, வேறு எந்த நாடும் பெரியளவில் வர்த்தகம் செய்யவில்லை. இதனால், ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் தொடுக்கும் போது, அது பெரியதாக மாறி இருக்காது.
இதனால், ஹார்முஸை மூடி தனது பலத்தை காட்டியது... காட்டுகிறது ஈரான்.
அமெரிக்காவிற்கு ஈரானின் இந்தச் செயல் பெரிய தொந்தரவு. ஈரானை தாண்டி இந்தப் போர் ஹார்முஸ் பக்கம் திரும்பும் போது, உலகளாவிய அழுத்தம் அமெரிக்கா பக்கம் திரும்புகிறது.
மேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு அமெரிக்கா மக்களின் கோபத்தையும் தூண்டுகிறது.
இதையெல்லாம் விட முக்கியமாக, ஹார்முஸ் மூடலால் ஃபோக்கஸ் ஈரான் பக்கம் திரும்புகிறது. இதை ட்ரம்ப் சிறிதும் விரும்பமாட்டார் என்பது அனைவரும் அறிந்தது தான்.
லெபனானை தாக்குவதில் இருந்து இஸ்ரேலை அமெரிக்காவால் தடுக்க முடியவில்லை. இதனால், ஈரானை கட்டுப்படுத்தவும், தன்னுடைய பலத்தை உலகிற்கு காட்டவும் ஹார்முஸை வைத்து வேலை காட்டுகிறது அமெரிக்கா.
இப்படி அமெரிக்காவும், ஈரானும் மாறி மாறி ஆடும் ஆட்டத்தால், உலக நாடுகளுக்குத்தான் பெரும் தலைவலி.

0 comments:
Post a Comment