Latest News
Monday, June 27, 2016

பாம்பு தீவு...... விஷத் தோட்டம்.......களிமண் எரிமலை ....... உலகின் பயமுறுத்தும் சுற்றுலாத்தளங்கள்

வழக்கத்துக்கு மாறாக உலகின் சில பயமுறுத்தும் சுற்றுலாத் தளங்கள் குறித்து பார்க்கலாம்.

செர்னோபில் (உக்ரைன்):

உக்ரைனின் செர்னோபில் பகுதி உலகின் ஒதுக்கப்பட்ட பகுதியாக அறியப்படுகிறது. இந்த பகுதியில் கடந்த 1986-ல் அணு உலை வெடிவிபத்து ஏற்பட்டது. அதனால், செர்னோபில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்து வந்த சுமார் 2 லட்சம் பேர் ஒரே நேரத்தில் அந்த பகுதியை விட்டு வெளியேறினர். இதனால் கைவிடப்பட்ட வணிக வளாகங்கள் மற்றும் வீடுகள் என அந்த பகுதியே ஒரு சுடுகாடாக இப்போது காட்சியளிக்கிறது. உக்ரைனின் மற்ற பகுதிகளில் வசித்து வரும் இந்த பகுதி வாசிகள், அவர்களின் சொந்த வீட்டுக்குத் திரும்பச் செல்லவே அச்சமடைகின்றனர்.




விஷத் தோட்டம் (பிரிட்டன்):

பிரிட்டனின் நார்தம்பர்லாந்து பகுதியில் உள்ள ஆலன்விக் தோட்டம், உலகின் விஷமிக்க செடிகள் நிறைந்திருப்பதால், விஷத் தோட்டம் என்றே அழைக்கப்படுகிறது. அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ளது போல, தொடாதே என்ற அறிவிப்பு பலகைகள் இங்கு வைக்கப்பட்டிருப்பதை நாம் காணலாம். மரணம் எவ்வளவு கொடியது என்பதை உணர்த்தவே இந்த தோட்டத்தை பிரிட்டனின் நார்தம்பர்லாந்து அரச குடும்பம் இந்த தோட்டத்தைக் கடந்த 1750-ல் உருவாக்கியதாக சொல்லப்படுகிறது. அதீத ஆர்வமும், தைரியமும் உள்ளவர்களின் பேவரைட் சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் இந்த விஷத் தோட்டத்துக்கு எப்பொழுதுமே இடமுண்டு என்று கூறப்படுகிறது.

பாம்பு தீவு (பிரேசில்):


பிரேசிலின் ’இல்ஹாடா குயீமடா கிராண்ட்’ என்ற தீவு பாம்புகளின் தீவு என்றே அழைக்கப்படுகிறது. பிரேசிலின் வடக்குக் கடற்கரைப் பகுதியில் உள்ள இந்த தீவு காடுகளும், பாறைகளும் நிறைந்தது. இங்குள்ள பருவநிலை, உலகின் விஷமிக்க பாம்புகளின் வசிப்பிடமாக இந்த தீவு அறியப்பட காரணமாக இருக்கிறது. இங்குள்ள அரியவகைப் பாம்புகளைப் பாதுகாப்பதற்காக, தீவுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை பிரேசில் அரசு தடை செய்துள்ளது. இருப்பினும், ஓய்வு எடுப்பதற்காக இந்த தீவில் கரையொதுங்கும் மீனவர்கள் பலர், பாம்பு கடிக்குப் பலியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

களிமண் எரிமலை (அஸர்பைஜான்):

களிமண் போன்ற மண்ணைக் கக்கும் எரிமலைகள் நிறைந்த நாடாக அஸர்பைஜான் இருக்கிறது. இங்குள்ள சில பகுதிகளுக்கு செல்ல, அந்நாட்டு அரசே தடை விதித்துள்ளது. தரைப் பகுதிக்கு அடியில் விஷ வாயுக்கள் நிறைந்து காணப்படுவது தான் களிமண் போன்ற குழம்புகளை இங்குள்ள எரிமலைகள் உமிழ்வதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். உலகின் மூன்றில் 2 பங்கு களிமண் எரிமலைகள் அஸர்பைஜானில் தான் உள்ளன.


  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: பாம்பு தீவு...... விஷத் தோட்டம்.......களிமண் எரிமலை ....... உலகின் பயமுறுத்தும் சுற்றுலாத்தளங்கள் Rating: 5 Reviewed By: velmurugan