Latest News
Monday, June 27, 2016

கொடூரமாக கொல்லப்பட்ட சுவாதியை நடத்தை கொலை செய்ய வேண்டாம்! ராமதாஸ் அறிக்கை



பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


சென்னை நுங்கம்பாக்கம் புறநகர் தொடர்வண்டி நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சுவாதி என்ற மென்பொருள் பொறியாளர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அதனால்  ஏற்பட்ட அதிர்ச்சி இன்னும் விலகாத நிலையில், அவரது கொலைக்கு காரணம் கற்பித்து கற்பனையாக பரப்பப்படும் அவதூறுகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. இத்தகைய செயல்கள் கண்டிக்கத்தக்கவை.


சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த பெண் மென்பொறியாளர் சுவாதி கடந்த வெள்ளிக்கிழமை காலை செங்கல்பட்டு பகுதியிலுள்ள அலுவலகத்திற்கு செல்வதற்காக நுங்கம்பாக்கம் தொடர்வண்டி நிலையத்தில் காத்திருந்த போது, மர்ம மனிதர் ஒருவரால் கற்பனை செய்து பார்க்க முடியாத வகையில்  வெட்டிக் கொல்லப்பட்டார். அந்த நேரத்தில் தொடர்வண்டி நிலையத்தில் நின்று கொண்டிருந்த மக்கள் நடந்து கொண்ட விதம் மிகவும் வருத்தமளிக்கிறது. சுவாதியை ஒருவன் சரமாரியாக வெட்டும்போது, தொடர்வண்டி நிலையத்தில் இருந்த பயணிகள் மற்றும் அதிகாரிகளில் ஒருவர் குரல் எழுப்பியிருந்தாலோ  தங்களின் கைகளில் கிடைத்த பொருளை வீசியிருந்தாலோ கொலையாளிக்கு சிறிதளவாவது அச்சம் ஏற்பட்டிருக்கக் கூடும்; சுவாதியின் உயிரைக் காப்பாற்றுவதற்கு அதுவே போதுமானதாக இருந்திருக்கும்.


ஆனால், சுவாதியை கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பி ஓடும் வரை எவரும் அதற்காக முயற்சி கூட செய்யவில்லை. கொலைகாரன் கையில் கொடுவாளுடன் ஆவேசமாக இருக்கும் போது, அவனை எதிர்ப்பது விவேகமானதா?... இப்படி கேள்வி எழுப்புபவர்கள் சம்பவ இடத்தில் இருந்தால் அவ்வளவு துணிச்சலுடன் நடந்து கொள்வார்களா? என்றெல்லாம் எதிர்க்கேள்விகள் எழுப்பப்படலாம். அவ்வாறு கேள்வி எழுப்புபவர்களின் குடும்பத்திலுள்ள பெண்ணுக்கு இத்தகைய நிலை ஏற்பட்டால், அவர்கள் இப்படித்தான் கண்டும் காணாமலும் சென்றிருப்பார்களா? என்றொரு வினாவை எழுப்பி, அதற்கு விடை காணும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டால் தெளிவு பிறந்து விடும். அதுமட்டுமின்றி, காலை 6.30 மணிக்கு சுவாதி கொல்லப்பட்ட நிலையில், அடுத்த 2 மணி நேரத்திற்கு சுவாதியின் உடல் காட்சிப் பொருளாகவே கிடந்தது. சுவாதியின் உடலை வேடிக்கைப் பார்த்துவிட்டு சென்றவர்களில் ஒருவருக்குக் கூட அந்த உடலை துணியால் மூட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படவில்லை என்பதைப் பார்க்கும்போது நாமெல்லாம் குறைந்தபட்ச மனசாட்சியும், மனிதநேயமும் அற்றவர்களாக மாறிவிட்டோமா? என்ற எண்ணம் உறுத்துகிறது. இதற்காக நமது சமுதாயமே வெட்கத்தில் தலைகுனிய வேண்டியுள்ளது.
இவற்றையெல்லாம் விட கொடுமை சுவாதி படுகொலையை அடிப்படையாக வைத்து  அவதூறுகள் பரப்பப்படுவது தான். சுவாதி ஒருவரை காதலித்தார், சுவாதியை ஒருவர் காதலித்தார், ஒருவரின் காதலை சுவாதி ஏற்கவில்லை அதனால் ஏற்பட்ட பகையால் தான் சுவாதி படுகொலை செய்யப்பட்டார் என்று சமூக ஊடகங்களிலும், சில ஊடகங்களிலும் அவதூறுகள் பரப்பப்படுகின்றன. சுவாதியின் நடத்தையை பேசுபொருளாக்கி கொடிய இன்பம் காணும் முயற்சியில் சிலர் ஈடுபடுகின்றனர். சுவாதியை கொலை செய்ததை விட இது கொடிய குற்றமாகும். சுவாதியை கொன்றவர் யார்? என காவல்துறை இன்னும் அறிவிக்கவில்லை, கொலைக்கான காரணம் என்ன? என்பதும் இன்னும் உறுதி செய்யப்பட வில்லை. அவ்வாறு இருக்கும் போது எழுதுவதற்கு இடம் இருக்கிறது, எழுதினால் இன்பம் கிடைக்கிறது என்பதற்காக ஒருவரைப் பற்றி தவறாக எழுதுவது எந்த வகையில் நியாயம்? ஒருவேளை, வாதத்திற்காக  சுவாதி மீது தவறு இருப்பதாக வைத்துக் கொண்டாலும், அவையெல்லாம் ஒருவரின் உயிரைப் பறிக்க வழங்கப்பட்ட உரிமங்களாகி விட முடியுமா? இதை உணராமல் அவதூறு பரப்புவது மன்னிக்க முடியாதது.
சுவாதி அப்பாவி, இரக்க குணம் கொண்டவர் என்று அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். சென்னை மாநகரில் கடந்த நவம்பர், திசம்பர் மாதங்களில் கடுமையான மழையால் வெள்ளம் ஏற்பட்ட போது பாதிக்கட்ட பகுதிகளுக்கு வெள்ள நீரில் நீந்திச் சென்று உணவு உள்ளிட்ட உதவிகளை சுவாதியும், அவரது குடும்பத்தினரும் வழங்கியதாக அப்பகுதிகளில் உள்ள மக்கள் கூறுகின்றனர். அப்படிப்பட்ட பெண் பொறியாளரின் நடத்தை குறித்து மனம் போன போக்கில் வதந்திகளையும், அவதூறுகளையும் பரப்புவது, புதைக்கப்பட்ட சுவாதியின் உடலை தோண்டி  எடுத்து மீண்டும் படுகொலை செய்வதற்கு சமமானதாகும். அற்ப மகிழ்ச்சிக்காக இவ்வாறு நடந்து கொள்வதை விடுத்து, சுவாதி கொல்லப்பட்டது குறித்த தகவல் அறிந்தவர்கள் அதை காவல்துறையிடம் தெரிவித்து விசாரணைக்கு உதவ வேண்டும்.
அதேபோல், சுவாதிக்கு நேர்ந்தது போன்ற கொடுமை இனிவரும் காலங்களில் வேறு எவருக்கேனும்  ஏற்படும் பட்சத்தில் உடனடியாக தலையிட்டு காப்பாற்றும் அளவுக்கு பொதுமக்கள் துணிச்சலுடனும்,  விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும். அதுவே சுவாதிக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக இருக்கும் இவ்வாறு கூறினார்.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: கொடூரமாக கொல்லப்பட்ட சுவாதியை நடத்தை கொலை செய்ய வேண்டாம்! ராமதாஸ் அறிக்கை Rating: 5 Reviewed By: velmurugan