Latest News
Thursday, June 30, 2016

கொலைகாரன் குறித்து சுவாதியின் தோழி பரபரப்பு வாக்குமூலம்: நண்பரிடமும் போலீஸ் விடிய விடிய விசாரணை


சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் என்ஜினீயர் சுவாதி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சுவாதியின் ஆண் நண்பரிடம் சென்னை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் முன்னிலையில் விடிய விடிய விசாரணை நடைபெற்றது. அப்போது, இணை ஆணையர் அன்பு உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.

நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு இரவு 9 மணிக்கு அழைத்து வரப்பட்ட அவரிடம் தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். சுவாதியுடன் அலுவலகத்தில் பணி புரியும் அவர், படுகொலைச் சம்பவம் நடைபெறுவதற்கு சில மணி நேரம் முன்பாக சுவாதியுடன் செல்போனில் பேசியுள்ளார்.



அவரிடம் போலீசாரிடம் சில திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது:

நானும், சுவாதியும் ஒரே என்ஜினீயரிங் கல்லூரியில் படித்தோம். நல்ல நண்பர்களாக பழகிவந்தோம். திருவல்லிக்கேணியில் உள்ள எனது வீட்டிற்கு கூட சுவாதி வந்திருக்கிறாள். இரக்க சிந்தனையுள்ள சுவாதி நல்ல மனம் படைத்தவள். யாருக்கும் தீங்கு செய்ய நினைக்க மாட்டாள்.

கடந்த 18–ந் தேதியன்று சுவாதி, என்னிடம் செல்போனில் பேசினாள். அதுதான் அவள் கடைசியாக என்னிடம் பேசிய பேச்சு. மர்மநபர் ஒருவன் என்னை பின் தொடர்ந்து வருகிறான். கடந்த 10–ந் தேதியன்றும், 11–ந் தேதியன்றும் அவன் என்னை தொடர்ச்சியாக பின்தொடர்ந்து வந்தான் அவனை என்ன செய்வது என்று தெரியவில்லை என்று சுவாதி கூறினாள்.

அவனை யார் என்று அடையாளம் காட்டு நான் அவனை கண்டிக்கிறேன் என்று சுவாதியிடம் கூறினேன். அவன் அவ்வளவு பெரிய ஆளாக தெரியவில்லை. அவனை ஒன்றும் செய்யவேண்டாம். இந்த பிரச்சினையை விட்டுவிடு என்று சுவாதி அப்போது என்னிடம் கூறிவிட்டாள்.

நானும் அந்த பிரச்சினையை மறந்துவிட்டேன். சுவாதி கொலை செய்யப்படுவாள் என்று நான் கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை. சுவாதியை பின்தொடர்ந்த மர்மநபர் இந்த அளவுக்கு கொடூரமாக கொலை செய்வான் என்றும் நினைக்கவில்லை. அந்த படுபாவி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.  இவ்வாறு சுவாதியின் நண்பர் போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.


இந்த சம்பவம் தொடர்பாக சுவாதியின் தோழியிடமும் போலீசார் விசாரணை நடத்தினர், அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது :


நான் சுவாதி வேலைபார்க்கும் கம்ப்யூட்டர் நிறுவனத்தில்தான் வேலை பார்க்கிறேன். சுவாதியை கொன்ற கொலைகாரனை நான் 2 நாட்கள் நேரில் பார்த்துள்ளேன். கடந்த 10–ந் தேதியன்றும், 11–ந் தேதியன்றும் நானும், சுவாதியோடு நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்துக்கு வந்தேன்.

அப்போது அந்த மர்மநபர் சுவாதியை பின்தொடர்ந்து வருவதை நான் பார்த்தேன். ‘‘அந்த மர்மநபர் என்னை பின்தொடர்ந்து வருகிறான். ஏன் என்று தெரியவில்லை. அவன் என்னிடம் என்னை உனக்கு தெரியவில்லையா? என்று கேட்கிறான். ஆனால் உண்மையிலேயே அவனை எனக்கு யார் என்று தெரியவில்லை’’ என்று சுவாதி என்னிடம் கூறினாள்.

இந்த விஷயத்தை லேசாக விடக்கூடாது அவனை கண்டிக்க வேண்டும் என்று நான் சுவாதியிடம் எச்சரித்தேன். அதை பார்த்து கொள்ளலாம் என்று சுவாதி என்னிடம் கூறினாள். ஆனால் அந்த படுபாவி சுவாதியை இந்த அளவுக்கு கொடூரமாக கொலை செய்வான் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அந்த பாவியை கைது செய்து போலீசார் கடுமையான தண்டனை பெற்று தரவேண்டும்.  இவ்வாறு சுவாதியின் தோழி தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக தெரிகிறது.


தொடர்ந்து தனிப்படை போலீசார் கொலையாளியை கண்டுபிடித்து கைதுசெய்யும் முயற்சியில் இரவு, பகலாக ஈடுபட்டுள்ளனர்.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: கொலைகாரன் குறித்து சுவாதியின் தோழி பரபரப்பு வாக்குமூலம்: நண்பரிடமும் போலீஸ் விடிய விடிய விசாரணை Rating: 5 Reviewed By: velmurugan