நடிகர் விஜய் நடித்துள்ள “தலைவா” படம் இந்தியாவின் தமிழ்நாட்டில் இன்று வெளியாகாததால் திரையரங்குகளுக்கு வந்து ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள், அண்டை மாநிலமான கேரளா, ஆந்திரா, கர்நாடகாவுக்கு படையெடுத்துச் சென்றனர்.
நடிகர் விஜய்- அமலாபால் நடித்துள்ள “தலைவா” படம் இன்று (9ஆம் தேதி) வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால், ரசிகர்கள் தியேட்டர்களில் விஜய்யின் கட் அவுட்கள் மற்றும் கொடி தோரணைகள் அமைத்து அமர்க்களப்படுத்தினர். தமிழகம் முழுவதும் சுமார் 500 தியேட்டர்களில் படத்தை திரையிட திட்டமிட்டப்பட்டு இருந்தது.
இதனிடையே, “தலைவா” படத்தை திரையிடக்கூடாது என்று திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன.
இதனால், அதிர்ச்சி அடைந்த தியேட்டர் அதிபர்கள், பாதுகாப்பு இல்லாமல் படத்தை திரையிட முடியாது என்று கூறிவிட்டனர்.
இந்த பிரச்னை குறித்து அபிராமி ராமநாதன் தலைமையில், தியேட்டர் உரிமையாளர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர்.
நள்ளிரவு வரை நீடித்த இந்த கூட்டத்தில், திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளித்தால் மட்டுமே படத்தை திரையிடுவது என முடிவு எடுக்கப்பட்டது.
இந்த நிலையில், ”தலைவா” படத்துக்கு தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் அளித்திருந்ததால் வரிவிலக்கு குழுவினருக்கு திரையிட்டு காட்டப்பட்டது.
படத்தை பார்த்த அக்குழுவினர், சில காட்சிகளுக்கும், விஜய் பேசும் சில வசனங்களுக்கும் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால் ‘தலைவா’ தமிழகத்திலும், புதுச்சேரியிலும் இன்று வெளியாகவில்லை.
படம் வெளியாக இருந்த தியேட்டர்களில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது, அதில், “தலைவா” திரைப்பட இன்றைய காட்சிகள் ரத்து செய்யப்படுகிறது.
டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் பணத்தை பெற்றுக் கொள்ளலாம்” என்று கூறப்பட்டிருந்தது. இதனால், தியேட்டர்களுக்கு வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
ஆனால் அண்டை மாநிலமான கேரளாவில் 150 தியேட்டர்களிலும், ஆந்திரா 300 தியேட்டர்களிலும், கர்நாடகாவில் 150 தியேட்டர்களிலும், மும்பையில் 100 தியேட்டர்களிலும் ‘தலைவா’ படம் இன்று வெளியானது.
இதனால், விஜய் ரசிகர்கள் கார், வேன்களில் கேரளா, ஆந்திராவுக்கு படம் பார்க்க சென்றனர். இதனால் எல்லையோர தியேட்டர்களில் கூட்டம் அலை மோதியது.
வசூலை குவித்ததால், சுமாராக ஓடிய தெலுங்கு, மலையாள படங்களை மாற்றிவிட்டு பல தியேட்டர் அதிபர்கள் ’தலைவா’ படத்தை திரையிட்டனர். மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலும் ‘தலைவா’ வெளியானது.
ஆனால், தமிழகத்தில் ‘தலைவா’ படம் எப்போது வெளியாகும் என்று உறுதியாக தெரியவில்லை.
இதனிடையே, படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயினிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, விரைவில் படத்தை திரையிட முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
0 comments:
Post a Comment